கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?

Written by S NAGARAJAN

Research Article No.1868; Dated 16 May 2015.

Uploaded in London at 6-35 am

By ச.நாகராஜன்

கவியுளம் காண்க!

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்                            ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

 

என மஹாகவி பாரதியார் பாடியிருப்பது எத்துணை ஆழ்ந்த பொருள் படைத்தது!

ஆயிரம் காவியம் கற்பார்கள்; ஆனால் கவிஞன் என்ன சொல்ல வந்தான், எப்படிச் சொல்லி உள்ளான் என்பதைப் புரிந்து  கொள்ளாமல் தன் மனதில் தோன்றியதைக் கவிஞன் கூறியதாக நினைத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களின் ‘மனத்தடைகள்’ பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த ‘மனத்தடைக்காரர்கள்’ கவியரசு கண்ணதாசனைக் கொண்டாட நினைக்கும் போது சங்கடம் தான் ஏற்படுகிறது; ஏற்படும்.

தனக்குப் “பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களைக்’ கவியரசு கண்ணதாசன் கூறும் போது ஒன்று, அதை மறைத்து விடுகிறார்கள், இல்லை, மாற்றி விடுகிறார்கள்! இரண்டுமே தவறு!

காலத்தை வென்ற ஒரு கவிஞனாக ஒருவன் எப்படி மிளிர முடியும்? சமகாலத்தவரான இந்தத் தலைமுறையினர் தன்னை என்ன சொல்வார்கள், அடுத்த தலைமுறையினர் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் நினைத்து பயந்தா கவிஞன், கவிதை எழுதுகிறான்!

எல்லா குறுகிய எல்லைகளையும் மீறி அவன் படிப்படியாக வளர்கிறான்; பல்வேறு பரிமாணங்களைக் கொள்கிறான்.

பக்குவம் வாய்ந்த இறுதி வடிவமே அவனது முகிழ்ச்சி.

 

தன்னைப் பற்றிக் கண்ணதாசன்

உண்மையைச் சொல்ல மிகுந்த நெஞ்சுரம் வேண்டும்! அதுவும் தன்னைப் பற்றி விமரிசித்து உண்மையைச் சொல்வதென்றால் இன்னும் அதிக தைரியம் வேண்டும்!

காந்திஜியின் சோதனை, அதனால் தான், ‘சத்திய சோதனை’ ஆனது.

கவியரசு கண்ணதாசனும் இந்த சத்தியத் தீயில் தன்னைப் புடம் போடவே நினைத்தார். அதன் வெளிப்பாடாகவே அவர் தன்னைப் பற்றி இப்படிக் கூறியுள்ளார்:-

“கவிஞன் ஒருவன் அரசியல்வாதியாகவும் இருந்தால் கவிதைக் கருத்துக்கள் எவ்வளவு முரண்படும் என்பதற்கு இந்தத் தொகுப்புகளே சான்று.

யார் யாரைப் போற்றியிருக்கிறேனோ அவர்களைக் கேலி செய்தும் இருக்கிறேன்.

யார் யாரைக் கேலி செய்திருக்கிறேனோ அவர்களைப் போற்றியும் இருக்கிறேன்…

கருத்து எதுவாயினும் கவிதை என்னுடையது .. ..

கருத்து உங்களைக் குழப்பும்; கவிதை உங்களை மயக்கும். .. ..

என்னை மையமாக வைத்தே எல்லோரும் சண்டை போட்டுக் கொள்ளலாம்.

எந்தத் தலைவரையும் பழிப்பதிலும் புகழ்வதிலும், என் தமிழ் எப்படி விளையாடி இருக்கிறதென்பதை இப்போது படியுங்கள். விமர்சனங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள்.”

கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள் நூலுக்கு  25-9-1968 இல் அவர் தந்த ‘என்னுரை’யில் உள்ள சில பகுதிகளே மேலே தந்திருப்பவை.

ஒரு தலைமுறையை சுமார் 30 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் இந்த முன்னுரையை எழுதியே ஒன்றரை தலைமுறைகள் கடந்தாகி விட்டது. (கவிதைகள் இன்னும் முன்னாலேயே படைக்கப்பட்டிருக்க வேண்டும்)

ஆனால் இன்றைய விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சி எதுவுமற்ற தேசிய தமிழ் கவிஞராக அவர் ஒளிர்கிறார்.

தனது கவிதைகளை அப்படியே மாற்றாமல் அவரே வெளியிட்டு அதனை விமரிசிப்போர் விமரிசிக்கட்டும் என்று அவரே கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். ஆக நமக்குப் ‘பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை” – புராணங்கள், ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள், சம்ஸ்கிருதம், அதில் தோன்றிய நூல்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை அவரே கூறியிருக்கும்போது அதை மறைக்கக் கூடாது; மாற்றக் கூடாது.

கவிஞனின் வழியில் சென்று அவன் கூறும் சாசுவத உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!

செம்மொழி என்ற சிறப்பு அடைமொழிக்கும் மேலான தெய்வ மொழியாம் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ள சங்க இலக்கியம் மற்றும் அதற்குப் பின்னால் தோன்றிய பக்தி இலக்கியம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

அதில் தோய்ந்திருக்கும் மனம் கண்ணதாசனை அணுகும் போது ஆனந்தப்படும்; மகிழ்ச்சிக் கூத்தாடும்.

அங்கே ராமனும், கண்ணனும்,தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.

காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.

பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!

மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால், “மஞ்சள் பத்திரிக்கையே” கண்ணுக்குப் புலப்படும்!

கண்ணதாசனோ திறந்த வெள்ளைக் காவியம்! அவரை அணுக வெள்ளை மனம் – பிள்ளை மனம் – வேண்டுமல்லவா!

01kannadasan

கண்ணதாசனை –

அனைத்துக் குறுகிய எல்லைகளையும் மீறி, தடை கடந்த நிலையில் திறந்த மனதுடன் அணுகுவோம்; புரிந்துகொள்வோம்; ஆனந்திப்போம்!

***********

Leave a comment

2 Comments

  1. Parameswaraiyer Ambikapathy's avatar

    Parameswaraiyer Ambikapathy

     /  May 16, 2015

    அருமை அருமை அருமையிலும் அருமை அன்புடன்அம்பி

    Date: Sat, 16 May 2015 05:35:59 +0000
    To: aonedoctor@hotmail.com

  2. Sanganur Mahadevan's avatar

    மேலும் எதிர்பார்க்கிறோம்

Leave a comment