
Written by S. NAGARAJAN
Date: 5 October 2016
Time uploaded in London: 8-11 AM
Post No.3220
Pictures are taken from various sources; thanks
ச.நாகராஜன்
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 67. பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளிடம் மடாலயத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான வரிகளைத் தள்ளுபடி செய்யுமாறு ஸு யுன் கோரிக்கை விடுத்தார்.
அதிசயமாக அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அடுத்து அங்கு திரிபிடகத்தின் ஒரு நகலை வைக்க ஸு யுன் விழைந்தார். அதுவும் ஏற்கப்பட்டது. அனைவரும் மன மகிழ்ச்சி அடைந்தனர்.
வருட முடிவு நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பீஜிங்கிலேயே ஸு யுன் தங்கி இருந்தார்.
அடுத்த வருடம், ஸு யுன்னின் 68ஆம் வயதில் அவர் ஷாங்காய் மற்றும் அமாய் நகர்களுக்குச் சென்றார்.
அங்கு அவருக்கு ஒரு துயரச் செய்தி கிட்டியது. மவுண்ட் கு வில் இருந்த வ்யதான துறவி மியாவோ-லியான் மறைந்து விட்ட செய்தி கேட்டு ஸு யுன் மிக்க வருத்தமுற்றார். அவரது தகன கிரியைக்கு ஏராளமான துறவிகள் அங்கு சென்றனர்.
ஸு யுன்னும் அங்கு விரைந்தார்.
அவருக்கு நினைவுச் சின்னமாக வழக்கமான முறையில் ஒரு பகோடா நிறுவப்பட்டது.
நான்காம் மாதம் 10ஆம் நாளில் பகோடா முடிந்த நாளனறு சரியான மழை.

அந்த ம்ழை 15 நாட்கள் தொடர்ந்தது. அடுத்த மாதம் எட்டாம் நாள் மழை நின்றது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பத்தாம் நாள் பகோடாவின் மீது ஸ்தூபி நிறுவப்பட்டது. நூறு மேஜைகளில் சைவ உணவு பரிமாறப்பட்டது. சூத்ரங்கள் சொல்லப்பட்டன.
உணவு படைக்கப்படும் போது சொல்லப்படும் மந்திரங்கள் ஓதப்பட்ட்ன.
திடீரென ஒரு சுழல் காற்று வீச ஆரம்பித்தது.ஸ்தூபியிலிருந்து ஒரு பிரகாசமான சிவப்பு ஒளி வீச ஆரம்பித்தது. படைக்கப்ப்ட்ட உணவு அனைத்தையும் ஸ்தூபத்தின் உச்சிக்கு காற்று மேலே தூக்கிச் சென்றது. இந்த அற்புதமான காட்சியைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்துப் போற்றினர்.
அனைவரும் மடாலயம் திரும்பிய பின்னர் அடை மழை ஆரம்பித்தது.
மியாவோ-லியானின் அஸ்தியுடன் ஸு யுன் பினாங்கு வந்தார். அங்கு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.\
அங்கும் சூத்ரங்கள் சொல்லப்பட்ட பின்னர் ஒரு சுழற்காற்று தோன்றியது படைக்கப்பட்ட அனைத்தும் ஆயிரக்கணக்கான மலர்களுடன் மேலே தூக்கிச் செல்லப்பட்டது. ஒரு சிவப்பு நிற ஒளி பகோடாவின் உச்சியிலிருந்து வீசியது.
இந்த இரு நிகழ்ச்சிகளை ஸு யுன் நேரில் கண்டு அனுபவித்தார். அவருக்கு புத்தரின் பொன்னான வாசகம் நினைவுக்கு வந்தது.
“ தொன்று தொட்டு இருந்து வரும் சடங்குகள் ஏற்கப்படும் விதம் மிகவும் மர்மமானது”
பின்னர் ஸு யுன் தாய்லாந்திற்கு – அப்போதைய சயாமிற்கு – கப்பலில் சென்றார்.
அப்போது ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவரிடம் வந்து, “எங்கு செல்கிறீர்கள்” என்றார்.
ஸு யுன் : யூனானுக்கு
“அங்கு எங்கு தங்குவீர்கள்?”
“காக் ஃபுட் மலையில் உள்ள மடாலயத்தில்”
அவர் தன்னைப் பற்றித் தெரிவித்தார்.
டெங்கு யு வில் அவர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியாக இருந்தவர்.
ஸு யுன் நன்கொடை திரட்டுவதை அறிந்த அவர் உடனே முன்னூறு டாலர்களைத் தந்தார்.
இது அவரது நல்ல கர்மாவின் விளைவே என்பதை ஸு யுன் உணர்ந்தார்.
கப்பல் சயாமை அடைந்தது.
ஸு யுன் பிரிட்டிஷ் அதிகாரியிடம் விடை பெற்றார்.
யூனானில் போதிசத்வரின் க்ஷிதிகர்ப சூத்ரங்களை ஸு யுன் விளக்கலானார்.
ஒரு நாள் அதே பிரிட்டிஷ அதிகாரி ஸு யுன்னைப் பார்க்க வந்தார். அவரிடம் 3000 டாலர்களை நன்கொடையாகத் தந்தார்!
திரிபிடகத்தை நிறுவ ஏராளமான பணம் ஸு யுன்னுக்குத் தேவையாக இருந்தது. இந்தப் பணத்தை சந்தோஷமாக அவர் பெற்றார்.
ஒரு நாள் கால்களை சம்மணம் போட்டு அமர்ந்த நிலையில் ஸு யுன் சமாதி நிலையை எய்தினார்.
ஒன்பது நாட்கள் அதே நிலையில் இருந்த அவர் சகஜ நிலைக்கு மீளவில்லை.
செய்தி நகரெங்கும் பரவியது. மக்கள் திரளாக அவரை தரிசிக்கக் கூடினர்.
ஒன்பது நாட்களுக்குப் பிறகு சமாதியிலிருந்து அவர் மீண்டார். தாய்லாந்து மன்னர் அவரை தரிசித்து தன்னை அவரது சிஷயனாக ஏற்குமாறு பணிவன்புடன் வேண்டினார்.
இப்போது பல்லாயிரம் பேர் அவரது சிஷ்யர்களாக மாறினர்.
ஒன்பது நாள் அமர்ந்த நிலையில் முதலில் கால்கள் நகர முடியாமல் மரத்துப் போயின. உடலிலும் அதே உணர்ச்சி!
இதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. ஒரு வேளை மரணம் அணுகினால் காக் ஃபுட் மலையில் உள்ள அறை கட்டப்பட மாட்டாது. அதில் திரிபிடகம் இடம் பெறாது.
என்ன செய்வது?
அவர் உறங்குகையில் ஒரு கனவு வந்தது.
அதில் ஒரு வயதான மனிதன் தோன்றினான். அவரிடம், “பிட்சுவே! உன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாதே!
உனது துவராடையை மடி. உன் திருவோட்டை அதை வைத்து மூடி தலைகாணியாக அதை வைத்துக் கொண்டு தூங்கு” என்றார்.
விழித்தவுடன் ஸு யுன் அப்படியே செய்தார். உடலெல்லாம் வியர்த்தது.
இரண்டு நாளில் உடல் நலம் சீரடையத் தொடங்கியது. இருபது நாட்களில் அவர் பூரண குணமடைந்தார்.
அவர் சூத்ரங்களை விளக்கி ஆற்றிய் உரைக்காக அரசர் டாங் லி என்னும் இடத்தில் 4550 ஏக்கர் நிலத்தைப் பரிசாக அளித்தார். அதை ஏற்ற ஸு யுன் அந்த நிலத்தை ஜி லுவோ மடாலயத்திற்கு அளித்தார். அங்கு ஒரு ரப்பர் தொழிற்சாலையை நிறுவி ஒரு நிரந்தர வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
புது வருடம் தொடங்கிய போது தொழிற்சாலை தயாரானது. அந்தத் தொழிற்சாலையிலேயே ஸு யுன் புது வருடத்தை வரவேற்றார்
– தொடரும்
, “
You must be logged in to post a comment.