
Written by London Swaminathan
Date: 15 October 2016
Time uploaded in London: 8-16 AM
Post No.3253
Pictures are taken from various sources; thanks.
Contact swami_48@yahoo.com
ராவணனைப் பிள்ளையார் பந்தாடிய கதை, கணேச புராணத்தில், மிகவும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கிறது.
கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தியானத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு முன் காட்சி தந்தார். நினக்கு வேண்டியவைகளைக் கேள் என்றார். அடியேன் வாழும் இலங்கையும் நானும் அபசயம் அடையா வண்ணம் அருள் புரிய வேண்டும் என்றனன். இவன் மொழிகேட்ட கருணை வள்ளல், அவன் கையில் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து, இதனை அருமையுடன் ஆராதித்து வா. ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை வாஹனாதிகளில் ஏற்றாமலும், கீழே வையாமலும் எடுத்துச் செல் என்றார் இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று இலங்கையில் தாபித்தால் நீயும் அழிய மட்டாய், இலங்கையும் அழியாது என்றார். எங்கேனும் கீழே வைத்தால் லிங்கத்தை எடுக்க முடியாது அது அங்கேயே தாபிதமாகிவிடும் என்றும் கருணை வள்ளலான சிவ பெருமான் மொழிந்தார்.
உடனே ராவணன் அந்தச் சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தனன். இதைத் தேவர்கள் கண்டனர். நடு நடுங்கினர். இந்த ஆள் ஏற்கனவே நமக்குச் சொல்லொணாத் துய ரம் தருகின்றனன். இந்த லிங்கம் ராவணனின் தலைநகருக்குச் செல்லாமல் தடுப்பது எங்கனம் என்று ஆலோசித்தனர். இவன் இலங்கைக்கு இதைக் கொண்டு சென்றால் நமக்கு எல்லாம் முன்னை விட அதிக உபத்திரவம் செய்வான் என்று அஞ்சினர்.
முழுமுதற் கடவுளான விநாயகனை வேண்டி வழி காணுவோம் என்று விரைந்தோடினர். அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் கணேசப் பெருமான். பெருமானே! மகா துஷ்டனான ராவ ணன் ஒரு சக்திவாய்ந்த லிங்கத்தினை இலங்கையில் பிரதிட்டி செய்ய விரைந்து செல்லுகிறான. அவனைத் தடுத்து நிறுத்தி இலங்கைக்கு அந்த லிங்கம் போகா வண் ணம் அருள்பாலிக்க வேண்டும் இதுவே எங்கள் விக்ஞாபனம் (appeal) என்றனர்.
உடனே பிள்ளையார் வருணனை அழைத்தார். நீ உடனே சென்று ராவணனின் உதரத்தில் (stomach) புகுந்து சலோபாதியை (மல, மூத்ர விசர்ஜன நெருக்கடி Nature’s call) உண்டாக்ககடவை. யாம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவன் உதரத்தில் இருக்கவும் (உதரம்=வயிறு) என்றார். வருணனும் அவ்வாறே செய்தான். இதற்கிடையில் தேவர்களும் கண்டு வியக்கும் வண் ணம், விநாயகப் பெருமானும் ஒரு அழகிய பார்ப்பனச் சிறுவன் வடிவம் கொண்டு ராவணனைப் பின் தொடர்ந்தார்.

ராவணன், காலைக் கடன் முடிக்கும் நெருக்கடிக்குள்ளானான்.; யாராவது ஆள் கிடைத்தால் அவன் தலையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு குளத்தையோ ஏரிக் கரையையோ நோக்கி ஓடலாமே என்று வெண்ணிச் சுற்றிப் பார்க்கையில் விநாயகப் பெருமான் முஞ்சிப் புல்லரைஞாணும், முன் கையிலேந்திய தண்டமுமாக, ஒரு பிரம்மாச்சரியைப் போல ராவணன் முன் தோன்றினார்.
பையா! நீ தூய்மை உடைய பிரம்மச்சாரியாகக் காணப்படுகிறாய். நான் சலமோசனம் செய்துவருங்காறு இச் சிவலிங்கத்தினை நீ வைத்திரு. ஸ்நான முதலிய சுசி (சுத்தம்) இலாதவர் இதைத் தொடப்படாது; தரையிலும் வைக்கப்படாது என்றனன்.
பிள்ளையாரும், அதற்கென்ன, பேஷாய்ச் செய்கிறேன். ஆனால் நேரம் தாழ்த்தக் கூடாது; நான் நேரம் ஆகிவிட்டால் மூன்று முறை விளிப்பேன். அதற்குள் வராவிடில், வாங்கிக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன் என்றார். ராவணன் , இதோ ஒரு நொடியில் திரும்புவேன் என்று சொல்லி ஓடினன். ஆனால் அவன் வயிற்றுக்குள் இருந்து வருணன் குடைந்த குடைவில் நேரம் போனதே தெரியவில்லை. விநாயகரும் முன்று முறை விளித்துவிட்டு சிவலிங்கத்தினை சுத்தமான தரையில் வைத்துவிட்டார். அதற்குப் பின் ராவணன் வயிற்றில் இருந்த வருணன், தன்னிடம் போய்ச் சேர்ந்தார்.
ராவணன் திரும்பி வந்தான் பிரம்மச்சாரி கையில் (விநாயகன்) சிவலிங்கம் இல்லாமை கண்டு திகைத்தான்; பதறினான். சிவலிங்கம் எங்கேடா? என்றான். அதற்கு அந்தப் பையன் நானோ துர்பலனுள்ள சிறுவன்; நெடுநேரம் ஆகியும் நீர் வராததால் உன்னை மூன்று முறை கூப்பிட்டேன். அப்படியும் உம்மைக் காணமாட்டோமாய் அந்த இடத்தில் வைத்துவிட்டேன். நீவீர் அதை எடுத்துக்கொண்டு போம் என்றான்.

ராவணனுக்கு ஒரே கோபம்; விழிகளை உருட்டினான்; பிள்ளையாரை மிரட்டினான்; அதட்டினான்
அவசர புத்திக்காரனே! இன்னும் சிறிது நேரம் பொறுக்கப்படதா? என்று சொல்லிக்கொண்டே கயிலை மலையையே பெயர்த்தெடுத்த எனக்கு இந்த சின்ன சிவலிங்கம் ஒரு பொருட்டா? என்று எண்ணி அதைத் தூக்க முயற்சித்தான். அதுவோ பாதாள ம் ஏழினும் கீழே படந்து வேரூன்றிவிட்டதனை அறியான். அதை பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஒரு பக்கம் மட்டும் பசுவின் காதினைப் போல இழுபட்டு உருக்கொண்டது. ஆயினும் அது இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அந்த இடத்திலேயே அதை விட்டுச் சென்றான் இன்று வரை அந்த இடம் கோகர்ணம் (பசுவின் காது) என்றே அழைக் கப்படுகிறது. சிவனுக்கு மஹாபலநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மச்சாரி சிறுவனைப் பர்ர்த்து (பிள்ளையாரைப் பார்த்து) அடா! உன்னாலன்றோ இக்கேடு உண்டாயிற்று, என்று சொல்லி அவன் தலையில் குட்டவே, விநாயகப் பெருமான் சுயரூபம் கொண்டார். யானை முகத்துடன் தோன்றி துதிக்கையினால் அவனைப் பிடித்து கறகரவென்றுசுழற்றி விண்ணுலக பரியந்தம் செல்லுமாறு தூக்கி வீசினார். அவன் மேலே சென்று தலை கீழாக கீழே விழுகையில் அவனைப் பிடித்து மீண்டும் தூக்கி எறிந்தார். இவ்வாறு அநேக முறை பிள்ளையார் அவனைப் பந்தாடினார். ராவணனுக்கு மூச்சு முட்டியது. என்னை மன்னிக்க வேண்டும், என்று பலமுறை சொல்லிக் கதறினான்.
உடனே விநாயகப் பெருமான் பந்தாடுதலை நிறுத்தி அவனை பூமியில் நிறுத்தினார். ராவணன் நடுநடுங்கி, விநாயப் பெருமானை துதித்தார். தவற்றுக்காக நெற்றியை பலமுறை நிலத்தில் மோதி மன்னிப்பு கேட்டார். அவரும் களி கூர்ந்து நின்னை மன்னித்தனம் நீ இப்போது குட்டிக்கொண்டது போல யார் குட்டிக் கொள்கிறாரோ அவர் குறைகளை எல்லாம் போக்குவன் என்றும் சொன்னார்.இதை கணேசப் புராணச் செய்யுளால் அறிக:

மெல்லிய ஆக்கை யேனான் விழுச் சிவலிங்கந் தாங்கும்
வல்லமை யுடையேனல்லேன் வலிதினீதருதிதந்தா
னல்லதே முக்காற்கூவ நண்ணிடாயாயின் மண்மேற்
செல்லுற விடுப்பனென் றான்றேவர் கடேவதேவன்
குட்டலும் மறைச் சிறான் போற்குறுகிய நாதன் வலே
யட்டும் மும்மத மாலயானை யானனாகி விண்ணின்
முட்டவொள்ளொளி கான்மோலி முதிர்ந்தபேருருவு கொண்டு
சட்டவல்லரக்கன் றன்னைத் தடக்கைப் பந்தாடினானே.

You must be logged in to post a comment.