
Written by S NAGARAJAN
Date: 8 December 2016
Time uploaded in London: 4-36 AM
Post No.3428
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 13
பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி
‘பாரதியும் திலகரும்’
ச.நாகராஜன்
இதுவரை வந்த கட்டுரைகள் பற்றி

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவை பற்றிய சுருக்கமான விவரங்களை இந்தத் தொடரில் பார்த்தோம்.
புதிதாக இந்தக் கட்டுரையைப் படிப்போருக்கும் இதைத் தொடர்ந்து படிப்போருக்கும் முந்தைய கட்டுரைகளில் சொல்லப்பட்ட நூல்/கட்டுரை/வானொலி உரை தலைப்பை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
- என் தந்தை – பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதியுள்ள நூல்
- பாரதி நினைவுகள் – திருமதி யதுகிரி அம்மாள் அவ்ர்களின் புதுவை வாச நினைவுக் கோவை
- என் கணவர் – மஹாகவி பாரதியாரின் மனைவியார் செல்லமா பாரதி அவர்கள் 1951இல் திருச்சி வானொலியில் ஆற்றிய உரை
- நான் கண்ட நால்வர் – வெ.சாமிநாத சர்மா அவர்களின் நூல்
- பாரதி புதையல் மூன்றாம் தொகுதி – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
- பாரதியார் பிறந்த நாள் – அரவிந்த ஆஸ்ரமவாசியான அமுதன் புதுவை வானொலியில் ஆற்றிய உரை
- மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்
- Subrahmaniya Bharati – Partiot and Poet – Prof P.Mahadevan
- பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
- கண்ணன் என் கவி – கு.ப.ரா. சிட்டி ஆகியோர் எழுதிய நூல்
- பாரதி நான் கண்டதும், கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்
- பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்
இது தவிர ‘மஹாகவி பாரதியாருக்குச் செய்யும் மஹத்தான துரோகம்’ என்ற எனது கட்டுரையில் பாரதியின் கட்டுரைகள், கவிதைகளை மனம் போல மாற்றி வெளியிடும் போக்கு பற்றி எழுதப்பட்டிருந்தது.
அடுத்து ‘பாரதியார் கவசம் அணியுங்கள்’ என்ற கட்டுரையில் இன்றைய ஊழல் நிறைந்த வாழ்க்கை முறையில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் பாரதியாரின் பாடல்களைக் குறிப்பிட்டு இந்த பாரதி கவசத்தை அணியலாம் என்ற ஆலோசனை தரப்பட்டிருந்தது.
இவற்றைப் படித்தால் மஹாகவி பாரதியார் என்ற பிரம்மாண்டமான கடல் எவ்வளவு பெரியது என்ற உணமை தெரியும்.
இப்போது மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் தொடரில் மேலும் சில நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியும் திலகரும்
தினமணி சுடரில் 1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் பாரதியை ஒட்டிய நினைவுகள் என்ற தொடரில் பல்வேறு தலைப்புகளில் பாரதியைப் பற்றி பிரபல எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமி எழுதி வந்தார்.
இந்தத் தொடரில் 22-6-1982, 29-6-1982, 4-7-1982 ஆகிய தேதியிட்ட இதழ்களில் ‘பாரதியும் திலகரும்’ என்று பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்த ஒன்று.
பச்சையப்பன் கல்லூரிக்கு விடுமுறை விட்ட ஆங்கிலேயர்
இதில் சென்னையில் நட்ந்த ஒரு சம்பவத்தை பெ.நா.அப்புஸ்வாமி நினைவு கூர்கிறார்.
அவரது சொற்களில் அப்போதிருந்த நாட்டு நிலைமை இது தான்:
“பாரதியின் மனம் பொதுவாக வன்மை முறைகளை ஆதரிக்காத மனமாக இருந்த போதிலும், ஓரளவு திலகருடைய வன்மைமுறைச் சார்பான கட்சியை ஆதரித்தது என்றே கருத வேண்டும். பாரதி கோகலேயையும் (கோகலே சாமியார் பாடல்), திலகரையும் (வாழ்க திலகர் நாமம்) பற்றிப் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட பின்னணி நாட்டில் நிலவிய பொழுது திலகர் காலமானார். அப்பொழுது, பாரதி அரங்கசாமி ஐயங்காரின் பாராட்டைப் பெற்று, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில், செய்தித் துறை முதலியவற்றைக் கவனித்து வரும் குழுவில் ஒருவராக இருந்து வந்தார்.”
பெ.நா.அப்புஸ்வாமி, திலகர் இறந்த நாளில் நடந்த சம்பவம் ஒன்றை அவரது நண்பர் எஸ்.ஆர்.வெங்கடராமன் சுட்டிக் காட்ட, அதை விளக்குகிறார்.
பால கங்காதர திலகர் இந்திய நாட்டின் மாபெரும் தலைவர். 1958ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி பிறந்த திலகர் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று காலமானார்.

எஸ் ஆர். வெங்கடராமன் பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்தார். அந்தக் காலத்தில் பச்சையப்பன் கல்லூரி சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்தது.
அந்தக் கல்லூரிக்கு ரென் என்னும் ஆங்கிலேயர் தலைமை ஆசிரியராக இருந்தார்.இளைய வயதின்ரான அவர் பெரும்பானிமையான ஆங்கில மக்களைப் போன்று இந்திய சுதந்திரத்தில் விருப்பம் உடையவராக இருந்தார்.
திலகர் காலமான செய்தியைக் கேட்ட பின்னர் அவர் தம்முடைய கல்லூரி மாணவர்களை கல்லூரியின் உட்புறத்தில் உள்ள திற்ந்த கூடத்தில் கூடச் செய்தார். திலகருடைய நற்பண்புகளைப்ப் பற்றி ஐந்து நிமிஷம் போல் பாராட்டிப் பேசினார். பேசிய பின், “இது உங்களுக்கு ஒரு துக்ககரமான நாள். ஆதலால் இன்று நம்முடைய கல்லூரிக்கு விடுமுறை நாளாக் அதை மதிப்பது நமது கடமை” என்று சொல்லி கல்லூரியை மூடி விட்டார்.
அந்தச் செய்தியைப் பத்திரிகைக்கு அறிவிக்கும் செய்தி எஸ்.ஆர்.வெங்கடராமனிடம் ஒப்புவிக்கப்பட்டது.
பாரதியாரின் கூற்று
அவர் சுதேசமித்திரன் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அரங்கஸ்வாமி ஐயங்காரைக் கண்டார்.
‘செய்திப் பொறுப்பு பாரதியைச் சேர்ந்தது, அவரிடம் போ’ என்று அவர் சொல்ல வெங்கடராமன் பாரதியிடம் சென்றார்.
வெங்கடராமன் தெரிவித்த செய்தியை நம்ப முடியாமல் “யார்? ஒரு வெள்ளைக்காரனா திலகரைப் புகழ்ந்து பேசினான்? அவனா உங்களுக்கு விடுமுறை விட்டான்? என்றெல்லாம் கேட்டு விட்டு பாரதியார், ‘இந்த நாட்டில் அவன் அந்தப் பத்வியில் அதிக நாள் இருக்க மாட்டான்’ என்றார்.
விடுமுறை அளிக்கப்பட்ட செய்தி சுதேசமித்திரனில் வந்தது.
நிர்வாகத்திற்கு ரென்னுக்கும் இதனால் பிரச்சினை ஏற்பட,
ரென் கல்லூரியை விட்டு விலக நேர்ந்தது.
புலமை மிக்க அவர் இலக்கண நூல்கள், கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுத ஆரம்பித்தார்.
இப்படி ஒரு அரிய செய்தியை பெ.நா.அப்புஸ்வாமி பாரதியும் திலகரும்’ கட்டுரையில் (மூன்று பகுதிகள்) தெரிவிக்கிறார்.
பாரதியின் கணிப்பு சரியாகப் போனது. ஒரு ஆங்கிலேயர் இந்திய சுதந்திரத்தில் அக்கறை கொண்டு தேசீய்த் தலைவர் மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கல்லூரிக்கு விடுமுறை விட்டது போன்றவற்றை சுவாரசிய்மாக விளக்கியுள்ளார் பெ.நா.அப்புஸ்வாமி.
பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய ஒரு கட்டுரைத் தொடர் இது.
****