கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை! (Post No.3484)

Written by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  7-12 AM

 

Post No.3484

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தேனினும் இனிய திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்:-

 

உண்டோ ஒண்பொருளென்றுணர் வார்க்கெலாம்

பெண்டி ராணலி யென்றறி யொண்கிலை

தொண்டனேற்குள்ள வாவந்து தோன்றினாய்

கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே!

—-திருச்சதகம் 42, திருவாசகம்

 

பொருள்:-

ஒப்பற்ற ஒளிவடிவான முதற்பொருள் உண்டு என்று அறிந்தோருக்கும் நீ ஆணா, பெண்ணா, அலியா என்று துணிந்து அறிய முடியவில்லை. ஆனால் அடியேனுக்கு காட்சி தந்தாய்; அப்படி இருந்தும் என்னுடைய அறியாமையினால் உன்னைக் கண்டும் காணதவன் போல் இருந்துவிட்டேன்; இது என்ன வகை கண் மயக்கமோ!

 

சில் நேரங்களில் நாம் ஒருவரையோ, ஒரு பொருளையோ கண்டாலும், கவனம் வேறு புறம் இருந்தால் அதை உணர மாட்டோம். இறைவன் எங்கும் உளன். ஆயினும் அவனைக் காணும் பக்குவமும் அதிர்ஷ்டமும் நமக்கு வரவேண்டும்.

 

இதற்கு திருவாசக உரைகாரர்கள் ஒரு கதை சொல்லுவர்:-

 

ஒரு ஏழை நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது பார்வதியும் பரமசிவனும் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். ஒரு ஏழையைக் கண்டால் தாயின் உள்ள உருகத்தானே செய்யும்? சிவபெருமானை கேள்வி கேட்கத் துவங்கினார் பார்வதி:

ஐயோ பாவம், இந்த ஏழைக்கு மனம் இரங்கி ஏதேனும் கொஞ்சம் பணம் தரக்கூடாதா?

சிவன் சொன்னார்: அதற்கு காலமும் சூழ்நிலையும் இடம்தரவில்லையே; அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இவ்வளவு நேரம் எல்லாம் கிடைத்திருக்குமே என்றார்.

பார்வதி விடவில்லை; சிவ பெருமானை நச்சரித்தார்.

அன்பே, ஆருயிரே! உன் சொல்லை நான் என்றாவது தட்டியதுண்டா? என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவன் முன்னால் ஒரு  தங்கக் காசு மூட்டையைத் தூக்கி எறிந்தார். சற்று முன்வரை முழித்துக் கொண்டு நடந்த அந்த மனித்தனுக்கு அப்போதுதான் ஒரு திடீர் யோசனை — விபரீத யோஜனை தோன்றி இருந்தது.

 

உலகில் பலருக்குக் கண் இல்லையே; அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நாமும் செய்து பார்ப்போம் என்று கண்களை இறுகி மூடிக்கொண்டு சென்றான். பரமசிவன் அவன் வழியில் போட்டிருந்த தங்கக் காசு மூட்டை அவன் காலில் இடறியது. சீ, சீ, கண்ணில்லாதோர் வழியில் இப்படி மூட்டை இருந்தால் என்ன கஷ்டப்படுவர் என்று கண்களை மூடியவாறே அதை ஒரு எத்து எத்திவிட்டுச் சென்றான்.

பார்வதிக்கோ ஒரே வருத்தம்; பரமசிவனுக்கோ ஒரே சிரிப்பு.

இதுதான் மாணிக்க வாசகரின் நிலையும்; நீ என் முன் காட்சி அளித்த போது உன்னை உணரவில்லையே! கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமோ? என்று வியக்கிறார்.

 

உண்மையில் மாணிக்க வாசகர் இறைவனைக் கண்டவரே. அவர் இப்படிப் பாடுவது எல்லாம் நம்மைப் போன்ற கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவரை மனதிற் வைத்துதான்.

 

ஒருவன் கோவிலுக்குச் சென்றான். இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தீவாரதனை நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் அந்த அரிய காட்சியினைக் கண்டு பரவசம் அடைந்து கண்களை அகல விரித்துப் பார்த்துப் பரவசப்பட்டனர். ஒருவர் மட்டும் அதீத பக்தியினால் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு மூர்த்திக்கு முன்னே நின்றார். இவரது கவனக் குறைவைக் கண்ட ஒரு ஜேப்படித் திருடன், அவருடைய பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு நழுவிவிட்டான். அடடா, கண்ணிருந்தும் குருடனாக இருந்தேநே என்று அவர் வருந்தினார். இதுதான் நம்முடைய நிலை!! கடவுள் கண் முன் தோன்றினாலும் அந்த நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு வாய்ப்பை நழுவ விடுவோம்.

 

இறைவனை அனுதினமும் வழிபடுவோருக்கு இத்தகைய கஷ்டங்கள் வராது.

 

 

–Subham—

 

 

Leave a comment

Leave a comment