எகிப்திய, சுமேரிய, இந்திய நாகரீகத்தில் காளை மாடு (Post No.3631)

Picture of Indus Bull Seal

 

Written by London swaminathan

 

Date: 12 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-02

 

Post No. 3631

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகில் காளை மாடு முத்திரை இல்லாத பழைய நாகரீகம் இல்லை. காளை மாட்டின் படத்தையோ முத்திரையையோ பொம்மையையோ எல்லா நாகரீகங்களிலும் காணமுடிகிறது.

 

காளை விஷயத்தில் எல்லா நாகரீகங்களிலும் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. அரசனும் தலைவர்களும் காளை என்று அழைக்கப்பட்டனர்.

 

வேதத்தில் காளை

 

ரிக்வேதத்தில் இந்திரனை காளை என்றும் காளை போல பலம் வாய்ந்தவன் என்றும் வருணிக்கின்றனர்.

வேதங்களில் ஏனைய தெய்வங்களும்  காளை என்று போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் காளையே சிவனின் வாஹனமாகப் போற்றப்படுகிறது. திமில் உடைய நந்தி எல்லாக் கோவில்களிலும் சிவன் சந்நிதியில் இடம்பெறுகிறது.

சிந்து சமவெளியில் அதிக முத்திரைகள் காளை மாட்டு படத்துடன் உள்ளன. வேதத்தில் இந்திரன் காளை என்று புகழப்படுகிறான். வால்மீகி ராமயணத்தில் ராமனை, காளை என்று வருணிக்கின்றனர்.

 

சிந்து சமவெளியில் காளை மாடு படம் தாங்கிய முத்திரை அதிக அளவில் காணப்பட்டாலும், ஒரு பசு மாட்டின் படம் கூடக் காணப்படாதது வியப்பூட்டுகிறது.

பசு மாடு புனிதமானது என்பதால் இப்படி விட்டனரோ என்று எண்ணுவாரும் உளர்.

 

சுமேரிய நாகரீகம்

சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே (Water Buffaloes) நீர் எருமைகளை முத்திரைகளில் பொறித்துள்ளனர். ஆயினும் இவை இந்தியாவிலிருந்து இறக்குமதியான மிருகங்கள் என்று அறிஞர்கள் சொல்லுகின்றனர்.

 

இதே போல யானைகளின் எலும்பும் தந்தமும் ஆங்காங்கே தோண்டும் போது கிடைக்கின்றன. இவைகளை சிரியன் (சிரியா நாட்டு) யானை என்று வகைப்படுத்தினாலும், ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அங்கே வளர்க்கப்பட்டதாகவே அறிஞர்கள் கருதுவர்.

ஆதிகாலத்திலேயே இந்தியாவுக்கும் மெசபொடோமியா (இராக்) பகுதிக்கும் தொடர்பு இருந்ததை நீர் எருமைகளும், யானை எலும்பு-தந்தங்களும் நிரூபிக்கின்றன.

 

 

எகிப்திய நாகரீகம்

எகிப்தில் அரசனை “பலம் பொருந்திய காளை” (Mighty Bull) என்ற பட்டத்துடன் அழைத்தனர். மக்களை கடவுளின் மேய்ப்புக்குட்பட்ட காலநடைகள் (Cattle of the God) என்று அழைத்தனர்.  நூபியா (Nubia) பகுதியில் துஷ்கா என்னுமிடத்தில் 14,000 ஆண்டுப் பழமையான கல்லறைகளில் காட்டு (Wild Bulls) காளை மாடுகளின் மண்டை ஓடுகளும் புதைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எகிப்தின் புதிய ராஜ்யத்தின் அரசர்கள் அந்தக் காட்டுமாடுகளை  வேட்டையாடி, அடியோடு அழித்துவிட்டனர்.

 

 

எகிப்தில் ஏபிஸ் (Apis) என்ற காளை தெய்வமாக வழிபட்டது. பல இடங்களில் புதையலில் காளையும் மம்மி போல பதனிடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.

 

கிரீட் (Crete) தீவில் காளை மாடு நடனம் பயிலப்பட்டது.

மித்ராயிஸ (Mithraism) சடங்குகளில் காளை மாடு கொல்லப்பட்டது/ பலியிடப்பட்டது.

இந்துக்கள் பிற்காலத்தில் காளை பிடித்தல்/ மஞ்சுவிரட்டு/ ஜல்லிக்கட்டு ஆகிய வீர விளையாட்டுகளில் காளை மாடுகளைக் கொல்லவில்லை. கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கிய செய்தி பாகவதத்தில் கிடைக்கிறது. இதுவே பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக உருவாயிருக்கலாம்.

 

 

(எனது ஜல்லிக்கட்டுக் கட்டுரையில் இது பற்றிக் கூறியுள்ளேன்)

 

காளிதாசனில்

 

காளிதாசனும் காளைமாட்டு உவமைகளைப் பயன்படுத்துகிறார். ரகுவம்ச காவியத்தில் மன்னன் திலீபனின் புஜபலம், (1-13) காளைமட்டின் வலிமை உடையன என்பார். இதே போல ராமபிரானின் புஜபலமும் பேசப்படுகிறது (12-34)

 

சித்ரகூட மலையும் அதன் குகைகளும் நீர்வீழ்ச்சிகளின் ஒலியும் கோபமடைந்த காளை மாட்டுடன் உவமிக்கப்படுகின்றன.(13-47)

 

இளம் கன்று காளையானது போல, ரகு பருவம் எய்தினான் என்கிறார்(3-32)

தமிழிலும் ஏறு, அடலேறு என்பன சங்க காலத்திலேயே 70 இடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலித்தொகை 103-108, அகம்.36, 64 முதலியன சில எடுத்துக் காட்டுகள்.

 

–subham–

Leave a comment

Leave a comment