
Written by S NAGARAJAN
Date:22 April 2017
Time uploaded in London:- 6-29 am
Post No.3839
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ரமண சாரல்
அருணாசல மலை சாக்ஷாத் சிவனே தான்!
ச.நாகராஜன்

பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் ஆசிரமத்தின் அதிகாரபூர்வமான போட்டோகிராபராக இருந்தவர் டாக்டர் டி.என்.கிருஷ்ணஸ்வாமி. பகவானின் அருளுபதேசங்களை விட அவரைப் பல விதமாக போட்டோ எடுப்பதையே தன் விருப்பத்திற்குரிய ‘தொழிலாக’ அவர் கொண்டிருந்தார். பகவான் மறைந்த பிறகு தான் அவரது அருள் தன் மீது எப்படியெல்லாம் பொழிந்திருக்கிறது என்பதை அறிந்து அவர் உபதேசங்களின் மீது அவர் நாட்டம் கொண்டார்.
டாக்டர் கிருஷ்ணஸ்வாமி எடுத்த புகைப்ப்டங்கள் அரிய புகைப்படங்கள். பகவான் நிற்கும் போதும், நடக்கும்போதும், உண்ணும்போதும், அமரும்போதும், ஏன் சமாதி நிலையில் இருக்கும் போதும் பல நிலைகளில் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இன்று அரிய பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன.
அவர் கூறியுள்ள சம்பவம் இது.
ஒரு நாள் அருணாசலத்தில் அவர் மஹரிஷியுடன் நடந்து கொண்டிருந்த போது மஹரிஷி வழியில் இருந்த ஒரு சிறு கல்லை எடுத்துக் கொண்டார்.
டாக்டரைப் பார்த்து அவர், “வெளிநாட்டிலிருந்து ஒருவர் இந்த மலையின் புனிதமான பகுதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மலை முழுவதுமே புனிதமானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இது சாக்ஷாத் சிவனே தான்! நாம் எப்படி நமது உடலுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு காண்பிக்கிறோமோ அதே போல இந்த மலையுடன் சிவன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அருணாசலம் மலை வடிவில் இருக்கும் சுத்த அறிவு. (PURE AWARENESS) அவரைக் காண விரும்புவோருக்கு வெளிப்படையாக கண்களில் காணும் படியாகத் அவர் இந்த மலை வடிவாகக் காண இதைத் தன் கருணையினால்அவர் தேர்ந்தெடுத்துள்ளார். சாதகர்கள் இந்த மலை அருகில் இருப்பதன் மூலமாக வழிகாட்டுதலையும் ஆறுதலையும் பெறுவர்,” என்றார்.
ரமணரைப் புகைப்படம் மூலமாக தரிசித்து பக்தர்கள் இன்று ஆறுதலையும் வழிகாட்டுதலையும் பெறுகின்றனர். அந்த போட்டோக்களை நமக்குத் தந்தவர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி. அவரிடமே, எப்படி ஒரு பௌதிக பொருள் தெய்வீகமாக ஆகி அதன் மூலமாக ஆறுதலையும் வழிகாட்டுதலையும் பெறலாம் என்று பகவான் ரமண மஹரிஷி கூறியது பொருள் பொதிந்த ஒன்றாக அல்லவா அமைகிறது!
எல்லையற்ற, வடிவமே இல்லாத, பிரம்மாண்டமான பேரருள் சக்தியை இனம் காண உருவ வழிபாடு ஒரு உதவும் சாதனமாக அமைகிறது.
அதை அருணாசலேஸ்வர் மலையாக அமைந்து நமக்கு உபதேசிப்பது உய்வதற்கான வழி அல்லவா!
அந்த அருள் இரகசியத்தை ஆசிரமத்தின் அதிகாரபூர்வமான போட்டோகிராபரிடம் பகவான் “போட்டு உடைத்தது” அவரது அருள் லீலைகளில் ஒன்று போலும்!
*