ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் (Post No.4029)

Written by London Swaminathan
Date: 27 June 2017
Time uploaded in London- 7-19 am
Post No. 4029
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

 

உலகின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று ராக்பெல்லர் குடும்பம். எண்ணெய், எரி வாயு ஆகிய இரண்டு  தொழில்களிலும் கோடிக் கணக்கில் சம்பாதிப்பவர்கள். ஒரு முறை ஒரு அமெரிக்க பத்திரிக்கை  நிருபர் அவரிடம் கேள்வி கேட்டார்.

 

மிஸ்டர் ராக்பெல்லர், பில்லியன் டாலர் கணக்கில் சம்பாதிக்கிறீர்கள். இன்னும் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன? என்று கேட்டார்.

 

ராக்பெல்லர் சிறிதும் தயங்கவில்லை; தனது கை விரல்களை ஒரு அங்குல இடைவெளிக்கு ( கட்டை விரல் கீழே, மற்ற நான்கு விரல்களும் மேலே) விரித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம்தான் என்றார். எவ்வளவு பொருள் பொதிந்த வாசகம்; எவ்வளவு அர்த்த புஷ்டியான வாக்கியம்! அக்ஷர லக்ஷம் பெறும்.

 

ஆசைக்கு அளவே இல்லை என்பதை சிறு விரல்களால் காட்டி விட்டார். அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்தவனும் இல்லை; போதும் இனிமேல், எனக்கு வேண்டாம் என்று சொல்லும் பணக்காரனும் இல்லை.

 

ஆர். எஸ்.எஸ் தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் மதுரை முகாம் ஒன்றில் பேசுகையில் கூறினார்; ஆசையே கூடாது; எல்லாம் பொது மக்களுடையது என்பதை உணர்த்தும் முகத்தான் நம் முன்னோர்கள் யாகத்தில் நெய்யை விடும் போது “இதம் ந மம” (இது என்னுடையது அல்ல) என்று சொல்லி விடுவர். அது மட்டுமல்ல. ஆசைத் தீயை அணைக்க முடியாது என்பதையும் இந்த யாக யக்ஞங்கள் உணர்த்தும். எப்படி நெய்யை  விட விட அக்னி சுவாலை விட்டு எரியுமோ அதே போல ஆசைக்குத் தீனி போடப் போட, ஆசைத்தீயும் வளரும் என்றார்.

ராம கிருஷ்ண பரமஹம்சர் இதை ஏழு ஜாடி அம்பட்டன் கதையில் இன்னும் அழகாக விளக்குகிறார். மஹாத்மா காந்தியும் போதும் என்ற எண்ணம் வளர வேண்டும் ;எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்றார். தமிழர்களோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று சொல்லி வைத்தனர்.

நான் முன்னரே எழுதிய ஏழு ஜாடி அம்பட்டன் கதையைப் படிக்கவில்லையானால் இதோ படியுங்கள்:–

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பேய்க்கதையை வள்ளுவன் குறள் 565-ல் சொன்னதை 20 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் இருந்து வந்த ‘’மேகம்’’ பத்திரிக்கையில் எழுதினேன்.

ஏற்கனவே எழுதிவிட்டதால் பேய்க் கதையை மிகவும் சுருக்கமாகப் பார்போம்:

‘’ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை.

ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. முகம் வாடியது, உடலும் மெலிந்தது. இவனது நடத்தையில் மாற்றம் வந்தது ராஜாவுக்கும் தெரிந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். ஒரு வேளை நாடே சீர் கெட்டுப் போய்விட்டதோ என்று ராஜாவை வேறு வகை பயம் பிடித்துக்கொண்டது.. இவன் எவ்வளவு கேட்டும் சொல்லாமல் எப்போது பார்த்தாலும், கூடக் காசு வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு நாள் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘’ஏ, சனியனே, என்ன? எங்கேயாவது ஏழு ஜாடித் தங்கத்தை எடுத்துவந்து விட்டாயா?’’ இப்படிப் பணத்துக்காக பேயாகப் பறக்கிறியே!’’ என்று திட்டினார்.

 

நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது, ‘’ராஜா, மன்னித்துவிடுங்கள், புதையல் கிடைத்ததை உங்களிடம் சொல்லவில்லை. மன்னித்துவிடுங்கள். வீட்டுக்கு ஓடிப்போய் கொண்டுவந்து 7 ஜாடி தங்கத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன் என்றான் நாவிதன். ராஜாவோ, சிரித்துக் கொண்டே, ‘’அந்த ஏழு ஜாடி தங்கத்தை இங்கே கொண்டுவந்து விடாதே. ஓடிப்போய் மரத்துக்கு அடியில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விடு’’ என்றார்.

நிறையாத ஏழாவது ஜாடி என்பது மனிதனின் பேராசையைக் குறிக்கும். அது எப்போதுமே நிறையாதது. அதுதான் வள்ளுவர் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’. ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன இக்கதை, நாடு முழுதும் நிலவிய கதை. அதைத் தமிழ்நாட்டோரும் அறிந்திருந்தனர். வள்ளுவன் இதை

‘’அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து’’ (குறள் 565)—என்றார்.

பொருள்: மக்களால் எளிதில் காண முடியாத, கோபம் கொண்ட மன்னனிடம் இருக்கும் செல்வம், பேய் காத்த செல்வம் போலப் பயன்படாது.

ஆசைத் தீயை அணைப்போம்; அமைதியாக, இன்பமாக வாழ்வோம்.

–subham–

 

The above story is from my old post —வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள்; posted on 18 July 2012

Tiruvalluvar statue in London | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/tiruvalluvar-statue-in-london/

 

மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடிதங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது?

 

இதம் ந மம | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/இதம்-ந-மம/

 

31 Oct 2016 – இந்த,” இதம் ந மம” ( என்னுடையது அல்ல) என்பது புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற மன்னர் பாடிய பாட்டிலும் …

 

 

–subham–

 

 

 

 

Leave a comment

Leave a comment