
Written by S NAGARAJAN
Date: 15 July 2017
Time uploaded in London:- 5-38 am
Post No.4082
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
கம்பன் கவி இன்பம்
கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை!
ச.நாகராஜன்
தமிழுக்குக் ‘க-தி’ – க- கம்பன் – தி-திருவள்ளுவர்.
இருவர் புகழையும் யாராலும் முழுதும் உரைக்க முடியாது.
ஏனெனில் அப்படி ஒரு ஆழம். அப்படி ஒரு அகலம். அப்படி ஒரு வீச்சு. அதிலே தான் தமிழின் மூச்சு.
கம்ப ராமாயணத்தையோ அல்லது திருக்குறளையோ முழுதுமாக அதன் அகல்,ஆழ, வீச்சுடன் யாராலும் இன்னொரு மொழியில் மொழியாக்கம் செய்ய முடியாது.
ஏனெனில் தமிழின் திறம் அப்படி.
ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தங்களைச் சொல்லும் உன்னத மொழி தமிழ்.
கம்பனைப் போற்றி எழுந்த பாடல்கள் ஏராளம்; ஏராளம்.
அவற்றில் சமீப காலத்தில் எழுந்த ஒரு அழகிய நூல்
கம்ப ராமாயணக் கவுத்துவ மணிமாலை.
கம்பனை முழுதுமாக ரசிக்கத் துடித்த கம்ப ரசிகர் கே.என்.சிவராஜ பிள்ளை அவர்கள் இயற்றிய அற்புதமான நூல் இது.
18-6-̀1968இல் எனது குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதி வைத்துள்ள பாடல்கள் 90. (தொண்ணூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டா எனத் தெரியவில்லை)
ஒவ்வொன்றும் கம்பனின் புகழ் பாடும் சுவை மிகுந்த பாடல்.
கம்பன் என்னும் ஓர் காளமே கம்தமிழ்
அம்பு ராசி அ டங்கலும் மொண்டு வான்
பம்பும் ஆரிய மாம் இம யம்படிக்
கிம்பர் நாட்டிற் கிறைத்ததண் வாரியே
என்று தொடங்குகிறது நூல்.

கம்பன் என்னும் இயற்கை வளம் நிறைந்து இருண்ட ஒரு மேகம் எழுந்து சென்று தமிழ் இலக்கிய இலக்கணக் க்டல் முற்றிலும் உண்டு அதனோடு அமையாது வானம் அளாவி ஓங்கி நிற்கும் வடமொழியாகிய சம்ஸ்கிருதம் என்னும் இமயமலையிற் சென்று படிந்து ஆங்குச் சூல் முதிர்ந்து இந்நாட்டுள்ளார் அனைவரும் பருகித் தழைக்கும் வண்ணம் பொழிந்த குளிர்ச்சியான மழைத்தாரையாகும் – இக்கம்ப ராமாயண மகா காவியம்.
குறிப்பு: மஹாகவியாகிய கம்பன் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்தகன்ற பாண்டித்தியமுடைய ஒரு பெரும் புலவன் என்ன இங்குக் குறிப்பிடப்படுகின்றது.
இப்படித் தொடங்குகிறது நூல்.
முதல் பாடலிலேயே சம்ஸ்கிருத வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்றி
கம்பன் தொட்ட மூலத்தைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை.
முக்கியமான ஒரு விஷயம் அந்தக் காலத்தில் , அதாவது ஆயிரத்த்தி தொள்ளாயிரத்து அறுபதுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சம்ஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் எனத் தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டு வந்தது.
சம்ஸ்கிருதம் அறிந்த பான்மையினால் தமிழின் வளத்தையும் சிறப்பையும் நன்கு அனுபவிக்க முடிந்தது. தமிழின் தனிச் சிறப்பை ஓங்கிய குரலில் உலகுக்கு எடுத்துரைக்கவும் முடிந்தது.
காமர் பூவுதிர் கற்பகக் காக்கொலோ?!
பூமகள் செவ்வி பொங்கும் பயோதமோ?!
நாமகள் மெய்ந் நடம் செயும் ரங்கமோ?!
பாமகார் பதிகம்பன் நற் பாடலே
கம்பனின் காவியம் அழகிய பூக்களைச் சொரியும் கற்பகக் கா வா?
இலக்குமி தேவியினுடைய ஐசுவரிய அழகு பெருகித் ததும்பும் பாற்கடல் தானோ?
அல்லது சரஸ்வதி தேவி தன் முழு மேனியும் கொண்டு நடனம் செய்யும் ஒரு நாடக சாலையோ?
இவற்றில் எவற்றுடன் கம்பனை நான் ஒப்பிடுவேன்.
அனைத்தையும் ஒப்பிடலாம்; அதற்கு மேலும் ஒப்பிடலாம்!
என்பது கவிஞரின் கருத்து.
இப்படி தொண்ணூறு பாட்ல்களில் கம்பனின் தமிழ் அமுதத்தைச் சுவைத்த பான்மையை மிக அருமையாகச் சொல்கிறார் சிவராஜ பிள்ளை.
அவரது தமிழ் வன்மையையும் சுவைக்கும் பான்மையினையும் இந்த நூலில் காணலாம்.
கம்ப ராமாயணத்தைச் சுவைக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் ஒரு அமுத நூல்!
***
kps710
/ July 15, 2017FOR THE PAST FEW DAYS, I HAVE BEEN FORTUNATE ENOUGH TO GET, READ GO TROUGH
THESE ENJOYABLE INFORMATION. TKS A LOT. I ENJOY THESE. KINDLY CONTINUE
TO SEND ME SAME
BEST WISHES, SUBRAMANIAN, MATUNGA, MUMBAI, INDIA.
2017-07-15 10:08 GMT+05:30 Tamil and Vedas :
> Tamil and Vedas posted: ” Written by S NAGARAJAN Date: 15 July 2017
> Time uploaded in London:- 5-38 am Post No.4082 Pictures are taken
> from different sources such as Face book, Wikipedia, Newspapers etc;
> thanks. கம”
>
Tamil and Vedas
/ July 15, 2017Thanks.