பாரதியார் நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர் கவிதைகள்! (Post. 4157)

Written by S.NAGARAJAN

 

Date: 24 August 2017

 

Time uploaded in London- 4-59 am

 

Post No. 4157

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

 

ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் என்று நாடறியும் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

திராவிட மாயையில் வீழாது தனது சமச்சீர் தன்மையைக் கொண்டிருக்கும் அபூர்வ தமிழர்களில் நாமக்கல் கவிஞரும் ஒருவர்.

அவர் காந்தியைப் பாடினார்; உலகம் வேண்டும் சாந்தியைப் பாடினார். இவரது பாடல்களுள் பெரும்பாலானவை காந்தியைப் போற்றிப் பாடியதே என்று கூறலாம்.

ஆரிய-திராவிட வாதம் என்பதெல்லாம் பொய் என்று உரக்கக் கூவியவர் என்பதாலும் அதைப் பற்றி அருமையான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதாலும் இவர் தமிழருள் தலை சிறந்து நிற்கிறார்.

தேசமும் தெய்வமும் ஒன்று என்ற கொள்கையை உடைய இவர் ஒரு சிறந்த பாரதி பக்தர்.

பாரதியாரைப் போற்றி இவர் பாடிய ஏழு சிறந்த பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தொகுப்பில் அடங்கி உள்ளன.

மூன்று பாகங்களைக்கொண்ட இந்தத் தொகுப்பு நூலில் மொத்தம் 251 கவிதைகள் உள்ளன.

முதல் பாகத்தில் பாரதி பாட்டு மற்றும் உலகம் வாழ்க ஆகிய இரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் பாரதி ஓர் ஆசான், பாரதிக்கு வெற்றி மாலை, பாரதி நினைவு, பாரதி எனும் பெயர் ஆகிய நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

எளிய சொற்களால் அரிய பெரிய கருத்துக்களைச் சொல்லும் வன்மை படைத்தவர் நாமக்கல் கவிஞர்.

பாரதியின் பாட்டு என்ற கவிதையில் பாரதியாரின் சொல் வன்மையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

    பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

 

காந்தியடிகளின் சிறந்த பக்தரான நாமக்கல் கவிஞர் அவரைப் பற்றி உரிய விதத்தில் கவி பாட கம்பனோ, காளிதாஸனோ தியாகராஜரோ அல்லது பாரதியோ இல்லை என்று அங்கலாய்க்கிறார் இப்படி:
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

     தேசீய பாரதியின் திறமும் இல்லை

“இமயம் முதல் குமரி முனை” வரை உள்ள இந்திய நாட்டின் ஒற்றுமையை பாரதியார் வலியுறுத்தினார். அதை நாமக்கல் கவிஞர் தன் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

     ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

                               (பாரதி ஓர் ஆசான் என்ற பாடல்)

தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதியின் புகழை நாமக்கல் கவிஞர் பாடும்போது அந்தப் பாட்டில் நம் உள்ளம் குளிர்கிறது:

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்

சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி

சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை

அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்

பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்

அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்

     கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.
(பாரதிக்கு வெற்றி மாலை என்ற பாடல்)

பாரதி நினைவு என்ற பாடலில் பாரதி என்று நினைத்தவுடன் என்ன நடக்கும் என்பதைக் கவிஞர் கூறுகிறார்:

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்

சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;

இந்தியன்நான்என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;

எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரியதமிழன்எனும் உவகை ஊறும் ;

     உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

தமிழர்களுக்கு நாமக்கல் கவிஞரின் அறிவுரை இது தான்:

சுப்ரமண்ய பாரதியின் பாட்டுபாடிச்

    சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.

                     (பாரதி எனும் பெயர் என்னும் பாடல்)

சுப்பிரமணிய பாரதியின் நாமம் பற்றிச் சொல்ல வரும் கவிஞர் அது கவலையை நீக்கும் சூத்திரம் என்கிறார்:

அனுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!
         (ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்னும் பாடல்)

பாரதியைப் போற்றும் அன்பர்களுக்கு நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தேன் வந்து பாயுது காதினிலே என்ற ரகத்தைச் சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களாகும்.

நாமக்கல் கவிஞரின் பாடல்கள் கீழ்க்கண்ட இணைய தளத் தொடுப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.72,73,85 ஆகிய தொடர் எண்களில் நாமக்கல் கவிஞரின் கவிதைகள் உள்ளன.

 

இதே தளத்தில் பாரதியாரின் அனைத்துக் கவிதைகளும் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

www.projectmadurai.org

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

 

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    நாமக்கல் கவிஞரைப் பற்றிப் படிக்க நேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
    பாரதியார் காந்திஜியைப் பற்றி மஹாத்மா காந்தி பஞ்சகம் பாடினாலும், அவர் ஸ்ரீ அரவிந்தர்-திலகர் வழி நடந்தவர். மெய்ஞ்ஞானத் துணிவினை இழிபடு அரசியலதனில் பிணைத்தார் காந்திஜி என்று பாடினாலும், இதை காந்திஜிக்கு முன்பாகவே திலகரும் ஸ்ரீ அரவிந்தரும்.செய்தனர். ஆனால் காந்திஜியின் வரவுக்குப் பிறகு, திலகரையும் ஸ்ரீ அரவிந்தரையும் நாடு மறந்துவிட்டது. காந்தீய இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே பாரதியாரும் மறைந்தார்.
    முழுதும் காந்தீய யுகத்தில் வாழ்ந்தவர் நாமக்கல் கவிஞர். காந்தீய வழியின் பல அம்சங்களைப் பல கோணங்களிலிருந்து போற்றிப் பாடியவர். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, ஆடு ராட்டே, சுழன்றாடு ராட்டே- இதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?
    ராஜாஜி முதன்முறை சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது, நாமக்கல் கவிஞரின் பாடல் தொகுப்பு ஒன்று சிறுவர்களுக்காக முன்னுரையுடன் வெளிவந்தது. “சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே, ஆரிதற்கெல்லாம் அதிகாரி, அதை நாம் எண்ணிட வேண்டாமா” போன்ற எளிய பாடல்கள் அதில் இருந்தன!
    இன்று தமிழ் நாடு காந்திஜியையும் மறந்துவிட்டது; நாமக்கல் கவிஞரையும் மறந்துவிட்டது. எளிய தமிழில் அரிய கருத்துக்களைச்சொல்லும் ஆற்றலும் அருகிவிட்டது!

  2. Santhanam Nagarajan's avatar

    நன்றி.
    அருமையான கருத்துப் பதிவுகள். சூரியன் வருவது யாராலே. சந்திரன் திரிவது எதனாலே. காரிருள் வானில் மின்மினி போல் கண்ணிற் படுவன அவை என்ன? யார் இதற்கெல்லாம் அதிகாரி? அதை நாம் எண்ணிட வேண்டாவோ. அல்லா என்பார் சில பேர்கள். அரன் அரி என்பார் சில பேர்கள்; சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சில பேர் சொல்வார்கள். …..”அந்தப் பொருளை நாம் நினைந்தே அன்பாய் வாழ்ந்திடுவோம்” என்று மிகப் பெரிய கருத்தை மிக மிக எளிமையான கருத்துக்களால் சொன்ன பெரியவர் நாமக்கல் கவிஞர். அவர் பாரதி பக்தர். காந்திஜியின் அடி பணிந்த அணுக்கத் தொண்டர். அவரது நினைவைப் போற்றும் வகையிலேயே இந்தக் கட்டுரை படைக்கப்பட்டது.
    எதிர் வரும் தலைமுறையினருக்கு நல்ல பாடல்களைத் தந்த ஒரு நல்ல தமிழர் நாமக்கல் கவிஞர். அவர் நினைவைப் போற்றுவோம்.
    திரு நஞ்சப்பா அவர்களின் அருமையான கருத்துக்களுக்கு மீண்டும் எனது உளமார்ந்த நன்றி. ச.நாகராஜன்

Leave a comment