
Written by S.NAGARAJAN
Date: 13 September 2017
Time uploaded in London-5-14 am
Post No. 4207
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!
ச.நாகராஜன்
வள்ளுவரின் காமத்துப் பாலில் தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள் இது:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து (குறள் 1085)
உயிரை எடுக்க வருவதால் யமனோ?
கூர்மையாகப் பார்ப்பதால் கண்ணோ?
மருண்டு பார்ப்பதால் மானோ?
இம்மூன்றின் தன்மையும் இப்பெண்ணின் கண்களில் உள்ளன.
பெண்களின் கண்களுக்குள்ள சக்தியை வள்ளுவர் அழகுற வர்ணித்து விட்டார் ஒரே குறளில்.

அழகிய பெண் ஒருத்தியைப் பார்க்கிறார் புலவர் ஒருவர்.
அவள் கண்ணழகில் அசந்து போகிறார்.
விளைவு ஒரு பாடல்.
பாடியவர் நமச்சிவாயப் புலவர்.
பாடல் இது தான்:
மஞ்சுமஞ் சுங்கைப் பரராஜ சேகர மன்னன்வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே
(தனிப்பாடல் திரட்டுப் பாடல்)
சொற்கள் கொஞ்சிக் கொஞ்சி விளையாடும் இப்பாடலின் பொருளைப் பார்ப்போமா:
மஞ்சும் – மேகமும்
அஞ்சும் – அஞ்சும்படியான
கை – கொடைக் கையினை உடைய
பரராஜ சேகர மன்னன் வெற்பில் – பரராஜ சேகரன் என்னும் அரசனது மலையில் உள்ள
பஞ்சும் – செம்பஞ்சும்
அஞ்சும் – அஞ்சும்படியான
பதம் – பாதங்களை உடைய
பாவை நல்லாய் – பிரதிமை போன்ற பெண்ணே
படை – சேனையை உடை
வேள் – மன்மனது
பகழி அஞ்சும் அஞ்சும் – பாணங்களும் அஞ்சும் அஞ்சும்
கயல் அஞ்சும் அஞ்சும் – சேல் மீன்களும் அஞ்சும் அஞ்சும்
கடல் அஞ்சும் அஞ்சும் – கடலும் அஞ்சும் அஞ்சும்
நஞ்சும் அஞ்சும் – விஷமும் அஞ்சும்
உனது நயனங்கள் – உனது கண்கள்
வெற்றி வேலோ – வெற்றி வேல்களோ?!!

பாடலில் அஞ்சும் என்ற சொல் ஒன்பது இடங்களில் வருவதோடு மஞ்சு, பஞ்சு, நஞ்சு போன்ற சொற்கள் வேறு இணைந்து வ்ருவதால் சொல்லழகும் பொருளழகும் ஓசை நயமும் கூடி இன்பம் தருகின்றது.
பெண்ணின் கண்ணழகை வர்ணிக்க வந்த புலவரின் பாடலின் சொல்லழகில் சொக்கிப் போகிறோம் நாம்!
***