Written by London Swaminathan
Date: 2 October 2017
Time uploaded in London- 6-30 am
Post No. 4264
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ராமாயணத்தில் சுந்தர காண்டம் சிறப்பிடம் பெறுகிறது. இதைப் பாராயணம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்று நீண்ட காலமாக நம்பிக்கை உளது.
சுந்தரகாண்டம் பாஸிட்டிவ் எண்ணங்களுடன், விரைவில் கிடைக்கப்போகும் வெற்றியை அறிவிக்கும் காண்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அது மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், Fபேண்டம் கார்ட்டூன்களை எல்லாம் விஞ்சும் வீரதீரச் செயல்களை அனுமன் செய்கிறான். இது இளைஞர்களுக்கு படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. அது மட்டுமல்ல அனுமன் கடலைத் தாண்டுகையில் எதிர்கொண்ட இடையூறுகள் நாம் எல்லோரும் எதிர்நோக்கும் கஷ்டங்களே. (இதை முன்னொரு கட்டுரையில் விளக்கினேன்)
சுந்தர காண்டம் இறுதியில், அனுமன் தன் முகக்குறிகளால், நல்ல செய்தி வ ந்தைக் குறிக்கிறான். பின்னர் நேரடியாகவே,
“கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்” என்று தெளிவுபடக் கூறுகிறான்.
சீதை கற்பு நெறி தவறாதவள் என்பதைச் சில பாடல்களால் சொல்கிறான். இறுதியில் ராமனுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட அதிசய நிகழ்ச்சிகளை உரைக்கிறான்.
இது நம்புவதற்குக் கடினமான ரசாயன — வேதி இயல் அதிசயங்களாகும். ஆகவே கம்பன் மிகைப்படுத்தும் செய்திகளில் ஒன்றாகவே இதைக் கொள்ளலாம். ராமாயணத்தில் எவ்வளவோ அதிசயங்கள் பற்றி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று என்றும் கொள்ளலாம். தங்கத்தின் உருகு நிலை எவ்வளவு டிகிரி செல்ஸியஸ் என்று வேதியியல் புத்தகததைப் புரட்ட வேண்டாம்.
அது என்ன இரண்டு அதிசயங்கள்?
அனுமனையும், வேடம் மாறும் ராக்கதர்களில் ஒருவர், என்று எண்ணி சீதை பயந்து விடக்கூடாதே என்று
கருதிய ராமன், தனது மோதிரத்தைக் கொடுத்து அனுப்புகிறான். அதைப் போல அனுமன் விடைபெற்றுச் செல்கையில் ராமனிடம் அளிக்க சீதையும் ஒரு மோதிரத்தை அனுப்புகிறாள்.
ராமன் கொடுத்த மோதிரத்தை (சூடாமணியை) சீதை அன்பின் காரணமாக மார்போடு மார்பாக அனைத்த போது அது உருகிவிட்டதாம். இதை அனுமன், அதிசயத்தோடு பார்க்கிறன். ஆனால் மோதிரத்தைக் கட்டி அணைத்த மாத்திரத்தில் அவளுடைய உளம் குளிர்ந்தது. இப்படி உடல் குளிர்ந்ததால் அந்த மோதிரம் இறுகி பழைய வடிவத்திலேயே நின்றதாம். நல்ல கற்பனை!!!
புலவர்களுக்கு மிகைப் படுத்தும் உரிமை உண்டு. ஆகையால் மிகைப்படுத்திய கூற்றாகவே கொள்ள வேண்டும். இப்படி ஒரு அதிசயத்தை வால்மீகி ராமாயணத்தில் படித்த நினைவு இல்லை!
இதோ பாடலும் பொருளும்:–
ஒருகணத்து இரண்டு கண்டேன்;
ஒளிமணி ஆழி, ஆன்ற
திருமுலைதத்தடத்து வைத்தாள்;
வைத்தலும், செல்வ! நின்பால்
விரகம் என்பதனின் வந்த
வெங்கொழுந்தீயினால் வெந்து
உருகியது; உடனே ஆறி
வலித்தது; குளிர்ப்பு உள் ஊற
பொருள்:
எல்லாச் செல்வங்களையும் உடைய பெருமானே! ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். ஒளிவீசும் மணிகள் பதித்த அந்த மோதிரத்தை வாங்கிய சீதாப் பிராட்டி தன் அழகிய கொங்கையில் வைத்துக் கொண்டாள்; அவ்வாறு வைத்தும் உன்னைப் பிரிந்ததனால் உண்டான வெப்பமாகிய நெருப்பினால் மோதிரம் வெந்து உருகியது. மீண்டும் அம்மோதிரம் உடலில் பட்ட மகிழ்ச்சியால், குளிர்ந்த தன்மை உடலில் மிகுதியாகி, உருகிய அந்த மோதிரம் உடனே இறுகி முன்போல் ஆய்விட்டது.
TAGS:– அனுமன், 2 அதிசயங்கள், சீதை மோதிரம், உருகியது, இறுகியது
–Subham–