குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

Written by London Swaminathan

 

Date: 3 October 2017

 

Time uploaded in London-16-07

 

Post No. 4267

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

ஆண்டாள் பாடிய திருப்பாவை அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் பாடிய நாச்சியார் திருமொழி , தமிழ் வைஷ்ணவர்களிடம் பிரபலமான அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலமாகவில்லை. ஒவ்வொரு பாடலிலும் உள்ள பக்திச் சுவை ஒரு புறம் இருக்க, சொல்லழகும் இருக்கிறது. ஓரிரு பாடல்களைக் காண்போம்.

 

திருவரங்கத்து அழகன்மேல் காதல் கொண்ட ஆண்டாள், அவனைப் பலவகையில் வருணிக்கிறாள். குழல் அழகர், வாயழகர், கண்ணழகர், பூவழகர் என்று புகழ்ந்து தள்ளுகிறாள்.

 

எழிலுடைய அம்மனைமீர்!

என்னரங்கத் தின்னமுதர்;

குழல் அழகர் வாயழகர்;

கண்ணழகர்; கொப்பூழில்

எழுகமலப் பூவழகர்;

எம்மானார் என்னுடைய

கழல்வளையைத் தாமும்

கழல்வளையே ஆக்கினரே!

—ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி

 

பொருள்:-

அழகை உடைய அன்னையீர்! எனக்குரிய திருவரங்கத்தே வீற்றிருக்கும் அரங்கநாதர் இனிமை நல்கும் அமுதம் ஒத்த உருவத்தை உடைய அழகர்; அவர் சுருட்டி முடித்த கூந்தலை உடைய அழகர்; புன்சிரிப்பைக் காட்டும் சிவந்த திருவாயை உடைய அழகர். காண்பாரை ஈர்க்கும் கண்ணழகர்; புதிதாக மலர்ந்தெழும் தாமரை மலரின் மென்மையையும்  அழகையும் பெற்ற உந்திச் சுழிகொண்ட திருவயிற்றைப் பெற்ற அழகர்; என்னை ஆட்கொண்ட அழகுருப் பெற்றவராகிய அத் தலைவர் காதல் பித்தேற்றி என்னை மெலிவித்தார். என்னுடைய கழற்றவும் பின் சேர்க்கவும் இயல்புடைய கை வளைகளை கையைவிட்டே கழன்றோடும்படி செய்து விட்டனரே! பார்த்தீர்களா? என்கிறாள்.

இன்னொரு பாசுரத்தில் கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனை என்று வருணிப்பாள்

 

அதாவது, மென்மையான பெண் உள்ளத்தை அழகால் மயக்கிக் கொள்ளை கொள்ளும் குறும்புச் செயல்புரிபவனும் — என்பதாகும்.

 

இதை திருஞான சம்பந்தரின் தேவாரத்தின் முதல் பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு மகிழலாம்:

உள்ளம் கவர்கள்வன் என்று உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனான சிவ பெருமானை வருணிக்கிறார்.

 

யஜூர்    வேதத்தில் உள்ள ருத்ரத்திலும் தஸ்கரானாம் பதி= திருடர் தலைவன், அதாவது உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் கள்வர் தலைவனாக சிவனை வருணிக்கிறார்கள் வேத கால ரிஷிகள்.

 

ஆண்டாளையும், சம்பந்தரையும் வேத கால ரிஷிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு தனி ஆனந்தம் கிடைக்கும்.

–SUBHAM–

Leave a comment

Leave a comment