Research Article No.1736; Date:- 21 March, 2015
Written by London swaminathan
Uploaded at London time 6-05 am
விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் எந்த தேதியில் (திதியில்) நிகழும் என்று நம் முன்னோர்கள் அழகாக எழுதி வைத்துள்ளார்கள். அதைப் படிக்கையில் அடுத்த அவதாரம், அதாவது மிலேச்சர்களை ஒடுக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் என்று தெரிகிறது.
1.சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:
உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம் அவனேர்ஹரி:
பொருள்:–சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் (அமாவாசைக்குப் பின் 13-ஆவது நாள்), ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவத்தில் பிறந்தார்.
2.ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம் பகவான் அஜ:
மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ
பொருள்:– ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் (பௌர்ணமிக்குப் பின்னர் 12-ஆவது நாள்) பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.
3.சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்
புவம் வராஹரூபேண ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்
பொருள்:– சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் (ஐந்தாவது நாள்) பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.
4.வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே
உத்பபூவ அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:
பொருள்:– வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று (14-ஆவது நாள்), சூர்ய அஸ்தமன காலத்தில் அசுரர்களின் எதிரியான பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.
5.மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:
அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா
பொருள்:– புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.
6.மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:
துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:
பொருள்:– மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை (இரண்டாம் நாள்) திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.
7.சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:
தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:
பொருள்:– சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய
சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.
8.வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:
சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:
பொருள்:– வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்
9.மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே
ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்
பொருள்:– ஆவணி மாத அஷ்டமி (எட்டாம் நாள்) திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.
10.மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:
ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி
பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.
மிலேச்சர்கள் யார்?
ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வேற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.
தமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ — என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.
யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.
தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:
அ)அரேபியா நாட்டு மிலேச்சர்
ஆ)யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்
இதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புகளும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.
‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.
பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.
சிந்துவெளி ஆய்வை திசை திருப்பிய சொல்
சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.
இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வேல்ஸ் மக்களையும் ஜெர்மானியர்களையும் எப்படி மிலேச்சர்களாக கருதினர் என்ற எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்
மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட (சாத்யகியால் கொல்லப்பட்ட சால்வன் ஒரு மிலேச்ச மன்னன்;கௌரவர்கள் தர்ப்பில் போரிட்ட அங்க என்பவனும் மிலேச்சன் என்கிறது மாபாரதம்) பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.
சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் வரலாறு காட்டும்.
ஆகவே சிந்து சமவெளி ‘மிளக்கா’வும் இல்லை, அங்கே பேசப்பட்ட மொழி ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு.
முந்தைய கட்டுரைகள்:–
MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)
“மிலேச்ச” என்றால் என்ன? (Posted on 6 September,2012)
You must be logged in to post a comment.