
Date: 9 FEBRUARY 2018
Time uploaded in London- 20-53
WRITTEN by London swaminathan
Post No. 4721
PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் உள்ள பல சுவையான படங்களில்
மேலும் மூன்று படங்களைக் காண்போம். ஒரு படம் அவுரங்கசீப்பின் மகனின் காதல் பைத்தியத்தைத் தீர்க்க ஆலோசனை செய்யும் படமாகும். மொகலாயப் பேரரசின் அஸ்திவாரத்தை தன் மதவெறியால் பெயர்த்தெடுத்த அவுரங்கசீப்புக்கு புதிய பிரச்சனை ஒன்று தோன்றியது. அவரது மகன் பேரழகி, இளவரசி மல்லிகே மல்க் மீது காதல் கொண்டான். இந்தக் காதல் பைத்தியம் அளவுக்குப் போனவுடன், அவுரங்கசீப், யுனானி வைத்தியரை (ஹகீம்) அழைத்தார். அவர் (படத்தில் சிவப்பு வண்ண உடை) ஒரு யுனானி களிம்பை சிபாரிசு செய்தார். இந்தப் படம் பாரசீக எழுத்துக்களுடன் உள்ளது. அவுரங்கசீப் கவலையில் ஆழ்ந்திருக்க ஹகீம் களிம்பு பற்றிச் சொன்னவுடன் அவருக்கு கொஞ்சம் திருப்தி!
யுனானி மருத்துவம் என்ற சொல் கிரேக்க சொல்லான ஐயோனிய, யவன என்ற சொல்லில் இருந்து வருகிறது. கிரேக்க மருத்துவர்களான ஹிப்போக்ரடீஸ், காலன் (HIPPOCRATES AND GALEN) ஆகியோரின் சிகிச்சை முறைகளை அராபிரய அறிஞர்கள் இஸ்லாமிய முறைகளுடன் கலந்து தெற்காசிய, மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் பரப்பினார்கள். மொகலாயப் பேரரசில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
முதல் பெண் டாக்டர்

கண்காட்சியில் இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மா பாயின் படமும் உள்ளது. இவர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியில் படித்தபின்னர் பல நாடுகளுக்குச் சென்று பயின்றார். பின்னர் பம்பாய்க்குத் திரும்பி வந்து டாக்டராகப் பணி புரிந்தார். அவ்வகையில் இந்தியாவில் பணி யாற்றிய முதல் இந்தியப் பெண் டாக்டர் இவர்தான். ஆனால் இவருடைய திருமண வாழ்வு, சர்ச்சைக்குள்ளாகி, பின்னர் முறிந்தது. இவர் 11 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். பருவம் அடைந்தவுடன் சாந்தி முகூர்த்தத்துக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவரது கணவர் கோர்ட்டை அணுகி வெற்றியும் கண்டார். கோர்ட் அவரை, கணவருடன் வாழ உத்தரவிட்டது. அவர் மறுத்தார். பால கங்காதர திலகர் போன்றோர் கணவர் சொல்வதே இந்து தர்ம விதிகள் என்றனர். கோர்ட்டும் அதையே சொன்னது. ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார். இறுதியில் ருக்மா பாய், விக்டோரியா மஹாராணியை அணுகி கோர்ட் உத்தரவை ரத்து செய்தார். அந்தக் காலத்தில் மஹாராஷ்டிரத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட விஷயம் ஆகவிருந்தது.
யோகிகளும் அபினியும்

இந்து யோகிகள், குறிப்பாக இமயமலைப் பகுதியில் வசிக்கும் யோகிகள், அபினி (கஞ்சா) சாப்பிடுவதாகச் சொல்லுவர். யோகிகள் அபினி தயாரிக்கும் ஒரு படம் வெல்கம் சென்டர் ஆயுர்வேதக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அதில் சொல்லப்பட்ட விஷயமானது:
“தெற்காசிய மருத்துவ சிக்கிச்சையில் அபினி என்பது ஒரு விஷப் பொருள் அல்ல; அதை மருந்தாகவே கருதுகின்றனர். இது பழங்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் இல்லை என்றும் இஸ்லாமிய தொடர்பு மூலம் வந்தது என்றும் கருதப்படுகிறது. இது மிகவும் கெட்ட பெயர் எடுத்த போதைப் பொருள் என்றாலும், மேலை நாட்டு, கீழை நாட்டு மருத்துவத்தில், மலேரியா, காலரா, வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது
எனது கருத்து:
இந்த 200 ஆண்டுக்கு முந்தைய ஓவிய படத்தின் தலைப்பு சந்யாசிகள் அபினி தயரிப்பதாக சொல்கிறது. இது யோகிகளுக்குக் கடவுள் வைக்கும் ஒரு பரீட்சை. இங்கு லண்டனில் பெரிய இன்வெஸ்ட்மென்ட் வங்கியில்(Investment Bank) வேலை வேண்டுமானால், பல இன்டெர்வியூக்கள் இருக்கும்; பல்வேறு குழுக்கள் பல கோணங்களில் ஒரே ஆளை கேள்வி கேட்பர்; அத்தனை இன்டெரியூக்களிலும் பாஸ் செய்பவரே/ தேறுபவரே வேலையில் அமர்த்தப்படுவர். இதே போல விஸ்வாமித்ரர் கதையிலும் பல சோதனைகளில் அவர் தோற்று கடைசீயில் வெற்றி பெற்று வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அந்த வகையில் இந்த ஓபியம் Opium எனப்படும் அபினி/ கஞ்சாவும் கடவுள வைக்கும் ஒரு சோதனை. சமாதி நிலை அல்லது தியானத்துக்கு உதவும் அபினி என்று சில யோகிகள் எடுக்கத் தொடங்குவர். பெரும்பாலோர் அந்த நிலயில் இருந்து மீண்டு அபினி இல்லாமலேயே தியானம் செய்யப் போய்விடுவர்; சிலர் மட்டும் சேற்றில் அழுந்திய பன்றிகள் போல போதைப் பொருளுக்கு அடிமை ஆகிவிடுவர். ஆகவே அபினி என்பது கடவுள் வைக்கும் சோதனை; யோகிகள் எவரும் அபினி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுமில்லை; எழுதியதுமில்லை. ஆகவே அபினியுடன் யோகிகளை இணைத்துக் காண்பது அறியாமையே.
–சுபம்–