
லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)
Written by London Swaminathan
Date: 13 May 2018
Time uploaded in London – 14-21 (British Summer Time)
Post No. 5006
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
லண்டன் க்ரோய்டன் தமிழ்க் கழக (பள்ளி) மூன்றாவது ஆண்டு விழாவில் (Croydon Tamil Kazakam) பேசுவதற்கு என்னை நேற்று (May12, 2018) அழைத்திருந்தார்கள். நானும் க்ரோய்டன் டெபுடி மேயர் மைக்கேல் செல்வநாயகமும், க்ரோய்டன் எம். பி. சாரா ஜோன்ஸுல் (Sara Jones, M. P.) பேசினோம். எங்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நினைவுப் பரிசுகளும் அளித்தனர்.


Shawl to london swaminathan
நான் ஆற்றிய உரையின் சுருக்கம்
(முதலில் தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களை வைத்து— அ, க,
ஆ, பை, கை, மை, வை, வா, போ, தீ, பூ– ஒரு விளையாட்டு விளையாடினேன். தமிழை சுவைபடக் கற்பிக்க இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இது போல தினமும் மாணவர்களுக்கு விளையாட்டு, விடுகதை முதலியன சொல்லி சுவையுடன் வகுப்பை நடத்துங்கள்; மாணவர்களை ஈடுபடுத்தும் இன்டெர் ஆக்டிவ் கேம்ஸ் (Inter Active Games) இருந்தால் ஆர்வத்துடன் தமிழ் படிப்பார்கள் என்றேன்.
பின்னர் சொற்பொழிவைத் துவக்கினேன்:-
எல்லோருக்கும் முதற்கண் வணக்கம்.
நான் ஈராண்டுகளுக்கு முன்னர் உங்கள் ஆண்டு விழாவுக்கு வந்தபொழுது 40 மாணவர்கள் இருந்தனர். இன்று அது எண்பது மாணவர்களாக உயர்ந்து விட்டது என்பதைக் கேட்டு மகிழ்ந்தேன்.
ஒவ்வொரு முறையும் எல்லோரும் தமிழ் கற்கச் சொல்லும் காரணங்கள்:–
தமிழ் பழைய மொழி, வளமான மொழி, தாய் மொழி, இனிமையான மொழி என்றெல்லாம் சொல்லுவர். நான் இன்று உங்களுக்கு- இங்குள்ள பெரியோர்களுக்கும்தான். — ஒரு புதிய காரணத்தையும் சொல்கிறேன்.

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி என்னும் (British Library) பழைய நூலகம் உள்ளது. 20,000 க்கும் அதிகமான நூற்றாண்டுக்கும் முந்தைய பழைய — தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இது அதிசயமான விஷயம். இவைகளைப் படிக்க- பயன்படுத்த, கட்டணம் ஏதுமில்லை; நீங்கள் முகவரியுடன் கூடிய 2 யுடிலிட்டி பில்கள் (two utility bills) , கையெழுத்துடைய ஒரு பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸுடன் போனால் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பாஸ் பெறலாம். நான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி சென்று புஸ்தகங்களை விளம்பரப்படுத்தி வருகிறேன்.
‘300 ராமாயணங்கள்’– என்று ஒருவர் புஸ்தகம் எழுதினார். ஆனால் பழைய புஸ்தகங்களைப் பார்த்தபோது அது தவறு; 3000 ராமாயணங்கள் இருக்கும் என்று தெரியவந்தது. எவ்வளவு கவிதைகள், நூல்கள், நாடகங்கள் – ராமாயணத்தை வைத்தே! அது மட்டுமல்ல; ஏரளமான பெண்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நூல்களை எழுதியுள்ளனர் . அவர்கள் பெயர்களை நாம் கேட்டதே இல்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இது தவிர, ஏராளமான தமிழ் நாடகங்கள் உள்ளன.
இவைகளை எல்லாம் யாருக்காக சேமித்து வைத்தனர்? எழுதியோரும் இவைகளை எல்லாம் யாருக்காக எழுதினர்? பல புஸ்தகங்களைக் கைகளில் எடுத்தால் அவைகள் உளுத்துப்போன நிலையில் உதிர்ந்தே போகின்றன. இவைகளைப் படிக்கவாவது நாம் தமிழ் கற்க வேண்டும்’



தமிழால் இணைவோம்
சமீப காலமாக ஒரு வாசகம் பிரபலமாகி வருகிறது – ‘தமிழால் இணைவோம்’ — அதன் பின்னாலுள்ள அரசியலை மறந்து விட்டு வாசகத்தை மட்டும் கவனியுங்கள். தமிழுக்கு அபாரமான இணக்கும் சக்தி இருக்கிறது. நான் பத்து நிமிட சொற்பொழிவுக்காகவா (மூன்று + மூன்று) ஆறு மணி நேரப் பயணத்தை இன்று செய்கிறேன்; இல்லை. தமிழ் என்று சொன்னவுடன் நாம் ஆர்வம் அடைந்து சிரமத்தைப் பார்க்காமல் வருகிறோம். ஜல்லிக்கட்டு போன்ற கிளர்ச்சிகளின் போது தமிழர்கள் ஒன்றுபட்டதைக் கண்டோம்.
தமிழில் இன்னும் என்ன செய்ய வேண்டும்?
‘தமிழ் வாழ்க’ என்று கோஷம் போடுகிறோம். தமிழில் எல்லாம் உளது என்கிறோம். ஆனால் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. பாரதியார் பாடல் போன்ற பல நூல்களுக்கு இன்டெக்ஸ் (INDEX) தேவைப்படுகிறது.
பாரதியார் ‘காக’த்தைப் பற்றி எங்கெல்லாம் பாடி இருக்கிறார் என்றால் அதைக் கண்டுபிடிக்க, நமக்கு நேரம் பிடிக்கிறது;
அவர் ‘காக்கைச் சிறகினிலே நந்த லாலா’, என்றும் ‘எத்தித் திருடும் அந்தக் காக்கை’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றும் பல இடங்களில் பாடுகிறார். ஒரு இண்டெக்ஸ் இருக்குமானால் இது போன்ற விஷயங்களை விரைவில் கண்டு பிடிக்கலாம்.
இது போலத் தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்ப வந்த மூன்று வெள்ளையர் 20, 000 பழமொழிகளைத் தொகுத்து புஸ்தகங்களாக வெளியிட்டனர். ஆனால் இன்னும் 10, 000 பழமொழிகளாவது தொகுக்கப்படாமல் உள்ளன.
அவைகளை எல்லாம் ஸப்ஜெக்ட் (Subject wise) வாரியாக ‘ஆல்பபெட்’ வாரியாக (alphabetical order) வகைப்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் நான்சென்ஸ் ரைம்ஸ் (Nonsense Rhymes ) உள்ளது போல தமிழில் நிறைய உள்ளன.
சூரியன் தங்கச்சி
சுந்தர வள்ளிச்சி
நாளைக் கல்யாணம்
மேளக் கச்சேரி
ஈக்கையாம் பிரண்டையாம்
ஈயக்காப்பு திரண்டையாம்
…………
இது போன்ற பல பொருளற்ற பாடல்களைத் தொகுக்க வேண்டும்.
இதோ பாருங்கள் சென்னையில் இருந்து வெளிவரும் கிரியா (creA) தமிழ் அகராதி. உங்கள் தமிழ் பள்ளிக்குக் கொடுப்பதாற்காக கொண்டு வந்துள்ளேன். இதில் பல புதிய தமிழ் சொற்களையும் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் வழக்குகளையும் காணலாம். இது போல ஆக்கபூர்வமான பணிகள் நிறைய உள்ளன. தமிழ் கற்கும் நாம் இவற்றைப் பிற்கால சந்ததியனருக்காக update ‘அப்டேட்’ செய்யலாம். புதிய சொற்களைச் சேர்க்க உதவலாம்.
எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் பத்தே நிமிடங்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
என்னை இங்கு அழைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி; வணக்கம்.
(( நான் எழுதிச்சென்ற குறிப்புகளில் இருந்தும், நேரம் போதாமையால் சொல்லாமல் விட்ட விஷயம்:

Member of Parliament Sarah Jones addressing the gathering
பழந்தமிழ் புத்தகங்களும் புதிய அகராதிகளும் தேவையா? எல்லாம் கூகிள் GOOGLE செய்தால் கிடைக்குமே என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.அது ஓரளவே உண்மை. நான் காயத்ரீ மந்திரத்தைத் தேடி ‘காயத்ரி’ என்று போட்டால் கடவுளுக்குப் பதிலாக ஒரு அரை நிர்வாணப் பெண் படம் தான் வருகிறது; அவள் பெயர் காயத்ரீயாம்! ‘மந்தரா’ என்று போட்டாலுமொரு நடிகையின் படம் வருகிறது. அவள் ஒரு நடிகையாம்! ஆக, சரியான ‘ஸ்பெல்லிங்’ போடாவிட்டால் கூகிள் google விபத்தில் முடியும். மேலும் தமிழில் 10,000 பிளாக்குகள் இருக்கின்றன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல பேனா கிடைத்தவன் எல்லாம் எழுதத் துவங்கி விட்டான்; தமிழ் தட்டச்சு தெரிந்தவன் எல்லாம் பிளாக் BLOG கட்டுரை எழுதுகிறான். அதில் எது சரி, எது தவறு என்பதை விஷயம் அறிந்தவரே வேறுபடுத்த இயலும். நிறைய தவறுகள் — சொற் குற்றம், பொருட் குற்றம், எழுத்துப் பிழைகள்— மலிந்துள்ளன. சில காலம் அதை மட்டுமே படித்தால் நாமும் ‘தமிழ்க் கொலை’யில் பங்கு கொண்ட பாவம் வந்து சேரும்.

london swaminathan speaking; Deputy Mayor of Croydon Michael Selvanayakam standing behind.
ஆகவே, முறையாகத் தமிழ் பயில, ஆசிரியரைக் கலந்தாலோசிக்க இத்தகைய பள்ளிகள் தேவை)

–சுபம்–
R.Nanjappa (@Nanjundasarma)
/ May 13, 2018பாரதியார் கவிதை போன்ற நூல்களுக்கு இண்டெக்ஸ் தேவை என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மை.
பொதுவாக தமிழ்ப் புத்தகங்களில் விரிவான பொருளடக்கமோ, இண்டெக்ஸோ, கடினச் சொற்கள்/கலைச் சொற்களுக்கான விளக்கமோ glossary இருப்பதில்லை. சில பழைய புத்தகங்களில் கூட “விஷய சூசிகை” என்ற பெயரில் விளக்கமாக பொருளடக்கம் இருக்கும். இதுவே ஓரளவு இண்டெக்ஸ் போல பயன்படும்; ஆனாலும் அகரவரிசைப்படி இல்லாததால் வேண்டிய விஷயத்தை மிகவும் தேடவேண்டி வரும்.
தமிழ்ப்புத்தகங்களில் காணும் இன்னொரு முக்கிய குறை, அவற்றைச் சரியாக “Edit” செய்யாததே ஆகும். யாரும் எதையும் எழுதி விடலாம். இன்றைய கூகிள் போல தமிழ்ப் புத்தகங்களில் வரும் கருத்துக்களின் நம்பகத் தன்மைக்கு உத்திரவாதமில்லை.
இந்தியப் புத்தக வெளியீட்டாளர்கள் வெளியிடும் ஆங்கில மொழி நூல்களிலும்
இந்த “எடிட்” செய்யாத குறை இருக்கிறது. [ Recent editions of Rt. Hon’ble V.S.Srinivasa Sastri’s “Lectures on Ramayana”, and Dr,Nagaswamy’s book on Tirukkural are two glaring examples.]
மேலும் இவற்றில், ஆசிரியர் ஆதாரமாகக்கொண்ட நூல்கள் அல்லது தொடர்புடைய பிற நூல்கள்/ஆதாரங்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. மேலும் படிக்கவும் ஒருலிஸ்ட் கொடுப்பதில்லை. [ No lists of books consulted, no books of reference or books for further reading.]
ஆங்கிலக் கலைச் சொற்கள், பெயர்கள் , விஞ்ஞான சம்பந்தமான சொற்கள் ஆகியவற்றையும் தம் விருப்பப்படி தமிழில் எழுதுகின்றனர். மூலச் சொற்களை அப்படியே தராததால், மேலும் படிப்பவர்களுக்கு சிரமமாகிறது. எந்த விஷயத்தையும் தமிழில் மட்டுமே படித்து புரிந்துகொள்வது என்பது கடினம் மட்டும் அல்ல, இயலாத செயலே.
பழைய இலக்கியத்திற்கு உரை என்று எழுதுபவர்களும் யாரை மனதில் கொண்டு எழுதுகிறார்களோ தெரியவில்லை; இந்த உரைகள் பொருளை விளக்காதது மட்டுமில்லை; அவற்றைப் புரிந்துகொள்வதே கடினம். பெரும்பாலும் மூலச் செய்யுளையே அன்வயப் படுத்தி உரை என்று எழுதிவிடுகிறார்கள்! ஆங்கிலக் கவிதைகளுக்கு எத்தனை எத்தனை எளிய உரைகள் வந்திருக்கின்றன! இவற்றையெல்லாம் இவர்கள் அறிவார்களோ இல்லையோ ! நடையைக் கடினமாக்கினால் மொழி வளர்வதாக ஆகிவிடுமா?
புத்தகத்தில் காணும் ( நிறை) குறைகளைப்பற்றி ஆசிரியர்களுக்கும் (ஈமெயில் தெரிந்தால்) வெளியீட்டாளர்களுக்கும் எழுதுவது என் வழக்கம். உலகெங்கிலும் உள்ள வெளியீட்டாளர்களும் ஆசிரியர்களும் பதில் தருகிறார்கள்; ஆனால் தம் தமிழ் நாட்டில் பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை.
tskraghu
/ May 13, 2018While there are many many reasons to be truly proud of Tamizh, unfortunately jingoistic outburst is one hears from people who are incapable of enjoying the nuances of the language and whose purpose is merely to stoke up passions of one against another making most ridiculous claims.
Like satan preaching sermons.