
Written by LONDON SWAMINATHAN
Date: 17 JUNE 2018
Time uploaded in London – 10-03 am (British Summer Time)
Post No. 5121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை! (Post No. 5121)
ஜப்பானுக்கு எப்படி சர்க்கரை வந்தது? இக்ஷ்வாகு வம்சம் இந்தியாவில் புராண வம்ச பரம்பரையில் முதலில் நிற்பர் ; இக்ஷ்வாகு என்றால் கரும்பு. அவர்தான் கரும்பு என்னும் பயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் வழியில் வந்தவர் புறநானூற்றுப் பாடலில் புகழப்படும் அதியமான். சத்தியவான் என்பதை தமிழில் அதியமான் என்பர். அவரைக் கரும்பு கொண்டு வந்ததாக அவ்வையாரும் பாராட்டுகிறார் புறநானூற்றில்! ( எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் உளது); சிந்து சமவெளியிலும் சர்க்கரை கண்டு பிடிக்கப்பட்டதால், சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகம், வேத காலத்துக்கும் பிற்காலத்தியது என்பது உறுதியாகிறது.
ஜப்பானியர்களுக்கு இனிப்பும் சர்க்கரையும் தெரியாது-டாங் (Tang) வம்ச காலத்தில் கஞ்சின் (Ganjin) என்ற குரு சர்க்கரையைக் கொண்டுவந்தார் (கி.பி.753). பின்னர் 806-ல் கோபோ டாய்ச்சி (Kobo Daichi) சில இனிப்புப் பண்டங்களைக் கொணர்ந்தார். இப்படியாக இக்ஷ்வாகு மன்னர் கண்டு பிடித்த கரும்பு, பாரத தேசத்திலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்றது இனிப்பான- சுவையான செய்தி.

British PM Margaret Thatcher with Daruma Doll in 1986
தர்மபோதி
ஜப்பானியர் இல்லங்களில் தொழிற்சாலைகளில் உள்ள அதிர்ஷ்ட பொம்மை தர்மா பொம்மை. இது இந்தியத் துறவி தர்ம போதியின் சிலை ஆகும்.
ஆறாவது நூற்றாண்டில் சீனாவுக்கு ஜென் புத்தமதத்தைக் கொண்டு சென்ற இந்தியத் துறவி தருமபோதி ஜப்பானியரின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டார். ஜப்பானின் லக்கி/ அதிர்ஷ்ட பொம்மை தர்மா (Daruma Doll) பொம்மை. இதயத்தைத் தொடும் கொள்கைகளை உரைப்பது ஜென் கொள்கை.
தர்மபோதி எட்டு ஆண்டுகளுக்கு அல்லும் பகலும் அனவரதமும் தியானம் செய்தார். இப்படி வால்மீகி முனிவர் தியானம் செய்ததால் அவர் மீது புற்று வளர்ந்து, அவர் பெயரே ‘புற்று’ என்று ஆகிவிட்டது. ஆனால் தர்மபோதியின் கால்களோ, சுருங்கிவிட்டன. ஒரு உறுப்பை நீண்ட காலம் பயன்படுத்தாவிடில் அது செயல் இழந்து விடும். இதனால் கால்கள் இல்லாத உருட்டு வடிவமாக — தர்மா பொம்மை உருவானது. அது வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இன்று வரை அது வணிக நீதியில் பலவகையாக உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
தர்மா பொம்மையின் கண்ணில் வர்ணம் பூசுவது அதிர்ஷ்டத்தைக் கொணரும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உளது. அரசியல்வாதிகளும் இதை எல்லோர் முன்னிலையிலும் செய்வர். க்யோடோ பிராந்தியத்தில் 28 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த யூகியோ ஹயசிடா இப்படிச் செய்தார். தேர்தலுக்கு முன்னர் ஒரு கண்ணில் அவர் மை பூசினார். வெற்றிக்குப் பின்னர் தர்மா பொம்மையின் மறு கண்ணில் மை தீட்டினார்.
பிரிட்டனில் ஸண்டர்லாண்ட் என்னும் இடத்தில் மிகப்பெரிய ஜப்பானிய கார் (நிஸ்ஸன்) தொழிற்சாலை உளது; அங்கே 1986-ல் கார் தொழிற்சாலையைத் துவக்கிவைத்த பிரதமர் மார்கரெட் தாட்சர் ஒரு தர்மா பொம்மையின் கண்ணில் மை தீட்டினார். . சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற பிரதமர் டேவிட் காமெரோன் மின்சார கார் உறபத்தியைத் துவக்கி வைத்தார். அந்தத் தொழிற்சாலையின் வெற்றியைக் குறிக்கும் முகத்தான் அதே தர்மா பொம்மையின் இன்னொரு கண்ணில் மை தீட்டினார்.
1990 பிப்ரவரி 21-ல் ஜப்பானிய லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் டொஷிகு கைப்பு வெற்றி பெற்றார். அவர் மிகப்பெரிய தர்மா பொம்மையில் வர்ணம் பூசி வெற்றி விழா நடாத்தினார்.

ஜப்பானில் லெட்சுமி
இந்துத் தெய்வமான லக்ஷ்மி ஜப்பானில் கோவில் கொண்டுள்ளார். அவளுடைய ஜப்பானியப் பெயர்- கிச்சிஜோடன். 1997ல் இந்தியாவின் ஐம்ப தெய்தாவது சுதந்திரக் கொண்டாட்டங்கள் ஜப்பானிலும் நடந்தன. துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன், பிரிட்டிஷ் மஹாராணி எலிசபெத் ஆகியோர் வருகை புரிந்தனர். அப்பொழுது பிரிட்டிஷ் மியூஸியம் 300 கலைப் பொருட்கள், சிலைகளை அனுப்பி வைத்தது. அதில் ஒன்று ஜப்பானிய லக்ஷ்மி. ஒரு கை, வரத முத்ரை காட்டும் மறு கையில் சிந்தாமணி ரத்தினம் இருக்கும். இது ஹையன் (Heiyan Period) கால பொம்மை.
இந்த விழாவில் இந்திய ஜப்பானிய அறிஞர் லோகேஷ் சந்திரா உரை ஆற்றுகையில் “ராணியாரே, நன்றி; உங்கள் நாட்டில் செல்வம் செழிக்க நாங்கள் லக்ஷ்மியை (பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு) அனுப்பிவைத்தோம் ; செல்வம் பாய்ந்து ஓடுகிறது; இப்பொழுது அதை அடையாள பூர்வமாக இந்தியாவுக்கு இலாவிடினும் இந்திய சுதந்திர விழாவுக்கு அனுப்பினீர்களே; நன்றி” என்றார். உடனே இந்திய துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன்— லோகேஷ் சந்திரா கைகளை நைஸாக அமுக்கி ‘சபாஷ்’ கொடுத்தார்.

–SUBHAM–