
WRITTEN BY S NAGARAJAN
Date: 28 September 2018
Time uploaded in London – 5-35 AM (British Summer Time)
Post No. 5481
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 28-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு தாம்) கட்டுரை
விண்வெளி ஆயுதங்கள் – 2
ச.நாகராஜன்
விண்வெளியில் உள்ள அபாயகரமான ஆயுதங்களில் சிலவற்றைப் பார்த்தோம். மேலும் சில:
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தரும் தகவலின் படி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles) தரையிலிருந்து ஏவி விடப்படுபவை. 3500 மைல்களுக்கும் அப்பால் பறந்து குறித்த இலக்கைத் தாக்கக் கூடியவை. முதலில் சோவியத் யூனியன் 1958இல் இதை வானில் செலுத்தியது. உடனே 1959இல் அமெரிக்கா தனது பங்கிற்கு ஒன்றை வானில் செலுத்தியது. இந்தியா, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளும் இந்த வகை ஏவுகணைகளை செய்து வருகின்றன. இது கணிணி மூலமாகவோ அல்லது சாடலைட் மூலமாகவே ஏவப்படக்கூடியது. ஒரு குறிப்பிட்ட நகரைத் தாக்கித் தரைமட்டமாக்க வேண்டுமா, இது தயாராக இருந்து அந்தப் பணியைச் செய்து விடும். இவை அணுகுண்டுகளை மட்டுமல்ல, அபாயகரமான கெமிக்கல் மற்றும் உயிரியல் ஆயுதங்களையும் கூட ஏந்திச் செல்லக் கூடியவை. 1991இல் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி அமெரிக்காவும் ரஷியாவும் இந்த வகை ஏவுகணைகளைக் குறைத்துக் கொள்வது என்று பரஸ்பரம் ஒப்புக்கொண்டன.
அமெரிக்க விமானப்படையின் எக்ஸ் – 37 பி கலம்
அமெரிக்காவின் இந்த விண்கல ஆயுதம் பற்றி சரியான தகவல் வெளிவரவில்லை. இது ஒரு விமானப்படை ஆயுதம் என்ற அளவில் மட்டும் விவரம் அறியப்படுகிறது.

நாஸா அமைக்கின்ற விண்கலம் போலக் காணப்படும் இது ரொபாட்டினால் இயக்கப்படும் ஒன்றாகும். ஒரு வருடத்திற்கும் மேலாக இது விண்ணில் நிலை கொண்டிருக்கும் வடிவமைப்பைக் கொண்டது. 2015ஆம் ஆண்டு வெளியான ஒரு தொழில்நுட்பத் தகவல் ஏடு இது பற்றிச் சில தகவல்களைத் தந்துள்ளது. இது விண்ணிலிருந்தவாறே குண்டு மழை பெய்யும் வல்லமை கொண்டது. எதிரி விண்கலங்களைத் தாக்கி அழிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்க இராணுவம் இதையெல்லாம் மறுத்து, இந்த விண்கலம் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான ஒரு சோதனைக் கலம் தான் என்று கூறி வருகிறது.
சாடலைட்டுகளை அழிக்கும் அமைப்புகள்
Anti- Satellite Systems எனப்படும் இவற்றில் ஒன்றை 1985ஆம் ஆண்டு அமெரிக்கா தனது F-15A ஜெட் விமானம் ஒன்றிலிருந்து ஏவிப் பார்த்தது. ஆனால் இதில் உள்ள சாதனங்கள் சரிவர இயங்காததால் இது அழிக்கப்பட்டது. சோல்விண்ட் பி 78 -1 என்ற இந்த விண்ணிலிருந்து ஏவப்படும் சிறிய கலம் சோதனைக் காலத்தில் 250 துண்டுகளை விண்ணில் சிதற அடித்தது. அமெரிக்க காங்கிரஸ் இந்தச் சோதனையை நிறுத்தச் சொல்லி உத்தரவிடவே இந்தத் திட்டம் 1987இல் நிறுத்தப்பட்டது.
இதை உருவாக்குவதில் அமெரிக்காவின் நோக்கம் என்னவெனில் எந்த வித உடன்படிக்கையையும் மீறாமல் ஆனால் அதே சமயம் எதிரி சாடலைட்டுகளை எப்படி அழிப்பது என்பதை சோதனை செய்து பார்ப்பது தான். இது பற்றி ஏராளமான சோதனைகள் நடந்து வருகின்றன.
எதிரி சாடலைட்டுகளை அழிக்கும் அமைப்புகள் பற்றி சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் ஆராய்ந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. சீனா 2007ஆம் ஆண்டு ஏவிய ஒரு கலம் விண்வெளியில் பெரிய விண்வெளிக் குப்பையை உருவாக்கி விட்டது. 2013இல் விண்வெளிக் குப்பை கூளங்களில் ஒன்று ஒரு ரஷிய விண்கலத்தின் மீது மோத ரஷிய விண்கலம் சுக்கு நூறாகி உடைந்தது.
விண்கல்லை ஆயுதமாக்கிப் பயன்படுத்துவது

விஞ்ஞானிகள் அனைவரும் விண்ணில் உலவும் விண்கற்கள் அபாயகரமான நாசத்தை விளைவிப்பவை என்பதை அறிவர். ஆறு மைல் அகலமுள்ள விண்கல் ஒன்று 660 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த அனைத்து டைனோஸர்களையும் அழித்து ஒழித்ததை அனைவரும் அறிவோம். இந்த விண்கற்களால் மனித குலம் படும் பாட்டை மெடார் (1979), டீப் இம்பாக்ட் (1998) ஆர்மெகடான் (1998) ஆகிய ஹாலிவுட் படங்கள் சித்தரிக்கின்றன. சின்னச் சின்ன விண்கல் கூட பேரழிவை ஏற்படுத்தும். பயங்கர வேகத்தில் பறப்பவை இவை. இவற்றில் சிறிதான ஒன்று ரஷிய நகரான செல்யாபின்ஸ்க் மீது 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படவே ஆயிரக்கணக்கான ஜன்னல்கள் துண்டு துண்டாய்ச் சிதறின. 1200 பேர்கள் பறந்து வந்த கண்ணாடித் துண்டுகளால் காயமடைந்தனர். இந்தக் கல் சுமார் 66 அடி அகலம் கொண்ட ஒரு சிறிய துண்டு தான்.
நாஸா பூமிக்கு அருகில் பறக்கும் ஒரு விண்கல்லைச் சோதனைக்காக எடுத்துக் கொண்டு ஆய்வது என்று திட்டமிட்டது. இப்போது திட்டத்தைச் சிறிது மாற்றியுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் இந்தத் திட்டம் சரியாக உருவாகலாம்.
ஆனால் விஞ்ஞானிகளில் பலரும் விண்கற்கள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூமிக்கு அருகில் பறந்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே இதைப் பெரிய அபாயகரமான ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்கின்றனர்.
இருந்தாலும் 1997இல் வெளியான ஸ்டார்ஷிப் ட்டரூப்பர்ஸ் என்ற ஹாலிவுட் படம், அயல்கிரகவாசிகள் போனஸ் அயர்ஸை அழித்துத் துடைத்து விடுவதைக் காண்பிக்கிறது. இதை நினைத்தாலே நடுக்கம் ஏற்படுகிறது, விண்கற்கள் செவ்வாய் கிரகத்தின் மீதும் கூட மோதி நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன.
நமக்குத் தெரிந்த அளவில் உள்ளவை மேலே நாம் பார்த்த இந்த விண்வெளி ஆயுதங்களே. தெரியாமல் ரகசியமாக உருவாகி வருபவை எத்தனையோ!
தரை, கப்பல், விமானம் ஆகிய முப்படைகளை நினைத்து நடுங்கும் மனித நெஞ்சம் இனிமேல் விண்வெளிப் படை பற்றியும் நினைத்து பயப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம் இது!!

Paul Dirac
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பெல்ஜியத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எர்னஸ்ட் சால்வே இயற்பியல் கொள்கைகளை விவாதிப்பதற்காக மாநாடு அமைப்பு ஒன்றை நிறுவினார். 1927இல் நடைபெற்ற ஐந்தாம் மாநாடானது, க்வாண்டம் தியரி பற்றி விவாதிக்கப்பட்டதாலும், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட ஏராளமான மேதைகள் பங்கு பெற்றதாலும் உலக பிரசித்தி பெற்ற மாநாடாகக் கருதப் படுகிறது..
இதில் கலந்து கொள்ள வந்த பிரிட்டனைச் சேர்ந்த பால் டிராக் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி. பெரிய நாத்திகவாதி. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சூடான சர்ச்சை ஒன்று ஆரம்பிக்க உரத்த குரலில் வாத பிரதிவாதங்கள் கிளம்பின.
பால் டிராக் கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பேசி தூள் கிளப்பினார்.
அதே மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிரபல மேதையும், பின்னால் நோபல் பரிசு பெற்றவருமான இயற்பியல் விஞ்ஞானி உல்ப்கேங் பாலி விவாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஒரு மேஜையருகில் அமர்ந்திருந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த அவரை நோக்கிக் கூட்டத்தினர், “இதில் உங்கள் கருத்து என்ன? விவாதத்தைக் கேட்டீர்களா? என்று கேட்டனர்.
அதற்கு பாலி, “ எனக்குப் புரிந்த மட்டில் நான் இப்போது அறிந்து கொண்டது கடவுள் இல்லவே இல்லை; பால் டிராக் தான் அவரால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்பதைத் தான்” (“As I understand it: there is no God and Dirac is his prophet”) என்றார்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
மிக சூடான விவாதத்தையும் கூட ஒன்றுமில்லாமல் செய்ததோடு அனைவரின் மனமும் நோகாமல் நகைச்சுவை ததும்ப தன் கருத்தை எடுத்துக் கூறிய பாலியை அனைவரும் பாராட்டினர்; இன்றும் அனைவராலும் மேற்கோள் காட்டப்படும் சம்பவமாக இது பிரபலமாகி விட்டது!
***