
WRITTEN BY S NAGARAJAN
Date: 15 October 2018
Time uploaded in London – 6-33 AM (British Summer Time)
Post No. 5541
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.com –இன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.
வைச்ச பொருள்?! – 2
ச.நாகராஜன்
5
பொருள் என்பதைச் செல்வம் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கையாளும் போது பல சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார், வெவ்வேறு குறட்பாக்களில்.
அருள், பொருள் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் தந்த அரும் வார்த்தைகள். அருள் என்ற வார்த்தைக்கு ஈடு இணையான இன்னொரு வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது.
பால் பிரண்டன் உள்ளிட்ட மேலை நாட்டோர் வியந்து போற்றிய வார்த்தை இது. பொருள் என்பதும் அதே போன்ற அருமையான வார்த்தை.
இந்த இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கும் வள்ளுவரின் பான்மை வியத்தற்குரியது.
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள – குறள் 241
மிகத் தெளிவாக அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும் பணத்தால் பெறப்படும் சகல சௌகரியங்களும் அற்பர்களிடத்தும் உள்ளன என்கிறார்.
ஆனால் அந்தப் பொருளைக் கொண்டே அருளைப் பெறலாம் என்பதும் அவர் முடிபு.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு – குறள் 757
அன்பானது பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித் தாயால் வளரும்.
பெற்ற பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் அருளை அடையலாம்.
பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்
அற்றார் மற்றாதல் அரிது – குறள் 248
பணம் இல்லாவிட்டாலும் கூட ஒருவேளை பின்னால் வரக் கூடும்; ஆனால் அருள் இல்லையெனிலோ ஒன்றுமே இல்லாதவர்கள் தாம் அவர்கள்; அவர்கள் வளத்தைப் பெறுதல் அரிது.

ஆனால் அந்த அருள் மறு உலகத்தில் செல்லுபடியாகும் ஒன்று; பொருள் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை இல்லை! அருள் அவ்வுலகிற்குத் தேவை;பொருள் இவ்வுலகத்திற்குத் தேவை!
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு – குறள் 247
இந்தப் பொருள் இருந்தால் பொருளற்றவர் கூடப் போற்றப்படுவர். பொருளற்றவர் என்றால் இங்கு மதிக்கவே தகாதவர் என்று அர்த்தம்.
பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் – குறள் 751
அருமையான இந்தக் குறளில் பொருள் என்னும் வார்த்தை பல பரிமாணங்களைக் காட்டுகிறது.
உலகியல் ரீதியான பொருள் தான் – பணம் தான் – சிறப்புடைய பொருள். அதுவன்றி வேறு எதுவும் ஒரு பொருள் அல்ல. மதிக்கத் தகாதவரைக் கூட மதிக்கும்படி வைக்கும் ஒரு அற்புதம் செல்வமே.

காசே தான் கடவுளடா!
பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று -குறள் 753
பொருள் மட்டும் இருந்தால் போதும். அதுவே நந்தா விளக்கு. நினைத்த தேசத்திற்கெல்லாம் சென்று வெல்வதோடு இருளை ஒழித்து விடும். இருள் என்பது இங்கு பகை உள்ளிட்ட பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.
ஆகவே வள்ளுவரின் கட்டளை ‘செய்க பொருளை’
எப்படியாவது பணத்தை சம்பாதித்துக் கொள். பகைவரின் கர்வத்தை அடக்க வல்ல கூர்மையான வாள் அதை விட வேறில்லை.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல் – குறள் 759
ஆனால் இந்தப் பொருளை நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டும்.பிறரை அழவைத்துப் பெற்றால் நீ அழப்போவது நிச்சயம் (குறள் 659)
சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று – குறள் 660
சலத்தால் – கெட்ட வழியால் – வஞ்சனையால் – பொருளைப் பெற்றால் அது நிலைக்காது; அது பச்சை மண்பாண்டத்தில் நீரை ஊற்றி வைப்பதற்குச் சமம்.
சம்பாதித்த பணம் குறையாமல் இருக்க ஒரு வழி உண்டு.
பிறனுடைய கைப்பொருளைக் கைப்பற்றாமல் – கவராமல் – வஞ்சனையால் அடையாமல் இருத்தல் வேண்டும்.

இப்படி வழி காட்டும் குறள் இது:-
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 178
ஆனால் இப்படிப் பெரும் செல்வத்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம்? அதனை நன்கு அனுபவிக்க அல்லவா வேண்டும்?
அனுபவிக்காமல் செத்துப் போனால் அந்தச் செல்வத்தைக் கொண்டு செத்தபின் அவன் என்னதான் செய்யப் போகிறான்?
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 1001
சேர்த்த பணத்தால் – செல்வத்தால் – எல்லாம் அடையலாம் என்று எண்ணி அதைச் சேர்த்து வைத்து யாருக்கும் கொடுக்காமல் செத்தொழிந்தால் அடுத்த பிறப்பு இழிந்த பிறப்பாகவே அமையும்.
பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு – 1002
அப்பாடா!
தலை சுற்றும் அளவுக்குப் பொருளைப் பற்றிய பொருள் வாய்ந்த குறள்கள் இவை.
செல்வம் என்ற அர்த்தத்தில் எப்படிப் பொருளைச் சேர்க்க வேண்டும், அப்படிச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம், அதைக் காக்கும் வழி என்ன, அடுத்த பிறவி நல்லதாக அமைய வழி என்ன என்பன உள்ளிட்ட அற்புத உண்மைகளை அள்ளிக் கொட்டுகிறார் வள்ளுவப் பிரான்.
இதில் அப்பர் கூறிய வைச்ச பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லை.

அதற்கு இன்னும் பல குறட்பாக்களை ஆராய வேண்டும்.
ஆராய்வோம்!
–தொடரும்
***