
WRITTEN BY S NAGARAJAN
Date: 21 October 2018
Time uploaded in London – 7-17 AM (British Summer Time)
Post No. 5569
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வைச்ச பொருள் – 5
ச.நாகராஜன்
13
திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலிலும் சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இரு முறை அவர் குறித்த பொருளைப் பற்றி நமது சிந்தனை ஒரு தெளிவுக்கு வரும் போது அதை உறுதிப் படுத்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
‘தமிழ் ஞானசம்பந்தனின்’ நமச்சிவாயப் பதிகம் தான் அது.
காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
வள்ளுவப் பிரான் கூறிய மெய்ப்பொருள் பற்றி அருமையாக திருஞானசம்பந்தர் விளக்கி விட்டார். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் தான் என்று.
அப்பர் பிரான் இதை உறுதிப் படுத்துகிறார்;
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே (நான்காம் திருமுறை)
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.
வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.
மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.
வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்தப் பொருளை நாம் அடைகிறோம்.

14
வள்ளுவரின் இதர பொருள் சம்பந்தமான குறள்களையும் படித்தால் சகல பொருள்களும் விளங்கும்.
இது சம்பந்தமாக நன்கு ஆராய விரும்புவோருக்காக பொருள் வரும் குறள்களின் எண் இங்கு தரப்படுகிறது:
5,63,91,122,128,141,171,176,178,199,212,226,241,246,247,248,249,252,254,285,307,351,355,356,358,371,423,424,434,462,477,507,583,592,615,644,660,695,741,746,751,753,754,755,756,757,759,760,857,870,897,901,909,911,913,914,925,933,938,1001,1002, 1009,1046,1230
பொருள் என்று ஆரம்பிக்கும் குறள்கள் : 199,246,248,252,351,675,751,753,913,914,938,1002,1230
பொருள் என முடியும் குறள்கள்:
178,509,741,751,756,
பிறன் பொருள், தம் பொருள், நற்பொருள், செம்பொருள், மெய்ப்பொருள், கைப்பொருள்,எண்பொருள்,பொருள் பெண்டிர்,பொருளாயம்,தேறும் பொருள், நன்பொருள்,பொருளாட்சி,பொருளுடைமை, உறுபொருள், தெறுபொருள், ஆன்ற பொருள்,பெரும் பொருள், பொருள்மாலையாளர், அரும் பொருள், ஒண் பொருள், சிறு பொருள், வான் பொருள், வேண்டாப் பொருள் என இப்படி பொருள் என்ற சொல்லைப் பல வித கோணங்களில், பலவித பரிமாணங்களுடன் கையாளும் வள்ளுவரின் திறன் வியக்கற்பாலது. அதற்கு இடம் தந்து பொருளுக்கு வலுவூட்டும் அற்புதத் தமிழ் மொழியின் அருந்திறனும் எண்ணி எண்ணி வியத்தற்குரியது.
இவற்றையெல்லாம் விரிவாகச் சொல்வதென்றால் அது ஒரு நூலாகவே அமையும்.
ஆகவே நேரம் கிடைத்த போதெல்லாம் திருக்குறளை ஓதி உணர்ந்து, நுணுகி ஆராய்ந்து செம்பொருளையும் மெய்ப்பொருளையும் காணுதல் வேண்டும்.

15
வள்ளுவரும் செம்பொருள், மெய்ப்பொருள் எனக் கூறி இறைவனின் உண்மைத் தன்மையை விளக்குகிறார். அதை அறிவதே உண்மை அறிவு என்கிறார்,
பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358)
பிறப்பு என்னும் பேதைமையை நீக்கிக் கொள்ள சிறப்பு என்னும் வீடு பேற்றை அளிக்க வல்ல செம்பொருளாம் பரம் பொருளைக் காண்பது அறிவு.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5)
கடவுளின் பெரும் புகழைச் சொல்லி வருவோர்க்கு பிறப்பு, இறப்பு ஆகிய இருவினையும் சேரா.
அந்த இறைவனின் நாமமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி ஓதி அதை தன் வைப்பு நிதியாக ஆக்கிக் கொண்ட அப்பர் பிரான் நமக்கும் அந்த இரகசியத்தைச் சொல்லி அருள்கிறார்.
நமச்சிவாய என்று வைச்ச பொருள் நமக்கு என்றும் ஆம்!
நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
– கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.
***