இனி விண்வெளியில் மனிதன் வாழ முடியும்!(Post No.6161)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com


Date: 7 March 2019


GMT Time uploaded in London – 12-37


Post No. 6161

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா  1-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு ஐம்பத்தி இரண்டாம் கட்டுரை)அத்தியாயம் 416  

 இனி விண்வெளியில் மனிதன் வாழ முடியும்!

ச.நாகராஜன்

விண்வெளியின் பல தனித்தன்மைகளைக் கருதி அங்கு மனிதன் வாழ முடியுமா என்ற விவாதம்  பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மார்ச் 2015 முதல் மார்ச் 2016 முடிய அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி மொத்தம் 357 மணி நேரங்கள் விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (Internatinal Space Station)பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டு சாதனை படைத்திருக்கிறார். தனது கடைசிப் பயணத்தையும் சேர்த்துப் பார்த்தால் அவர் விண்வெளியில் இருந்த நாட்கள் மொத்தம் 520. (இந்த சாதனையை ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் பெக்கி விட்ஸன் ஆகியோர் முறையே 534 நாட்கள் மற்றும் 665 நாட்கள் இருந்து முறியடித்திருக்கிறார்கள்).

கெல்லியின் அச்சு அசலான இரட்டை பிறவியான மார்க் கெல்லியும் ஒரு முன்னாள் விண்வெளி வீரர் தான்!

கெல்லி 2016இல் விண்வெளி நிலையத்தில் இருந்த போது செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது வெளி உலகிற்கு வரத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து இவர் விண்வெளியில் இருந்ததால் மனிதன் விண்வெளியில் இருப்பது சாத்தியம் தானா என்பதை ஆராய்ந்து கொண்டிருந்த நாஸா விஞ்ஞானிகளுக்கு அப்பாடா என்ற நிம்மதி மூச்சு வந்தது; பல ஆய்வுகளை நடத்தி விண்வெளியில் மனிதன் இருப்பது சாத்தியம் தான் என்ற முடிவுக்கு அவர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

ரஷியா தனது விண்வெளிவீரர்கள் ஆறு பேரை விண்வெளி நிலையமான மிர் ஸ்டேஷனுக்கு அனுப்பி ஆய்வுகளை மெற்கொண்டது. ஆனால் அதைப் பற்றி ஒரு விவரமும் வெளி உலகிற்கு இன்றளவு தெரியாது.

கெல்லி ரஷிய விண்வெளிவீரரான மிஹெயில் கோர்னியன்கோவுடன் 11 மாதங்கள் இருந்த போது நாஸா மிக முக்கியமான 17 ஆய்வுகளை மேற்கொண்டது.

விண்வெளியில், மைக்ரோ கிராவிடி நிலையில்,  மனித உடலில் இருக்கும் திரவங்கள் எப்படி இயங்குகிறது என்பதை அறிவது ஆய்வின் முக்கிய நோக்கம். உடலில் உள்ள மைக்ரோப்கள் விண்வெளி வாழ்வை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பதையும் ஆய்வு மேற்கொண்டது. விண்வெளியில் நீண்ட காலம் தங்கி இருந்த பின் அவர்களது உடல் என்ன மாறுதலை அடைந்திருக்கிறது, இப்படிப்பட்ட ஒரு நீண்ட கால வாழ்க்கையை அவர்களது உடல் தாக்குப் பிடித்திருக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய நோக்கம் ஒரு மனிதனால் விண்கலத்தில் ஏறி செவ்வாய் கிரகத்திற்குச் சென்று திரும்ப முடியுமா என்பதைப் பார்க்கவும் தான்!

ஆகவே இப்போது விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் அடிப்படையில் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். இன்னும் சில நீண்ட கால ஆய்வுகள் தேவை என்பதும் அவர்கள் கருத்து. இந்த ஆய்வின் முடிவுகளை வைத்து ஆறு மாதம் விண்வெளியில் தங்கும் வீரர்கள் 10 பேர், ஒரு வருடம் தங்குவோர் 10 பேர், இரண்டு  மாதம் தங்குவோர் 10 பேர் என முப்பது வீரர்களை அனுப்பி அவர்களின் மீது புதிய ஆய்வுகளை நாஸா மேற்கொள்ள இருக்கிறது.

இந்தச் செய்திகளை எல்லாம் 2019, ஜனவரி முதல் தேதியன்று வெளியான ஜர்னல் ஏரோஸ்பேஸ் மெடிசின் அண்ட் ஹ்யூமன் பெர்ஃபார்மன்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆக இனி விண்வெளி வாழ்க்கையும் மனிதர்களுக்கு உண்டு.

பூமி வாழ் மக்கள், விண்வெளி வாழ் மக்கள் என மனித குலம் அகண்ட இரு பெரும் பிரிவுகளாக ஆகப் போகும் காலம் விரைவில் மலரும்!

ஒரு சின்ன ரிவியூ!

கடந்த எட்டு ஆண்டு காலமாக அறிவியல் துளிகள் தொடரில் நாம் படித்ததை ஒரு மதிப்பீடு செய்து பார்க்கலாமா?

வெவ்வேறு இயலைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், அவர்களது சாதனைகள், நோபலுக்குப் போட்டியான வேடிக்கையான இக்நோபல் பரிசு பெற்றோர், விண்வெளி வீரர்கள், அவர்களது பயணங்கள், காலப் பயணம் சாத்தியமா, காட் பார்டிகிள், ஆவிகள் பற்றிய ஆய்வு, புனர்ஜென்ம ஆய்வு, சைபர்னெடிக்ஸ், க்வாண்டம் பிஸிக்ஸ், பட்டர்ஃபிளை தியரி உள்ளிட்ட பல புது கொள்கைகள், இசை தரும் மேன்மைகள், அறிவியல் மூலம் ஆரோக்கியம், சினிமாவில் நடைமுறைக்கு வந்துள்ள புது உத்திகள், ஆன்மீகத்தை நிரூபிக்கும் அற்புதமான அறிவியல் சோதனைகள்,விஞ்ஞான உலகில் உள்ள பெண் விஞ்ஞானிகளின் சாதனைகள் என்பன உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட வித்தியாசமான பொருள்களில் கட்டுரைகளைக் கண்டோம். அறிவியல் அறிஞர்கள் வாழ்வில் என்ற பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வாழ்க்கையில் நடந்த சுவையான செய்திகளைப் பார்த்தோம். ஐன்ஸ்டீன் போன்றவர்களின் வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை வந்துள்ள 416 அத்தியாயங்களில் உள்ளன. இந்தத் தொடரை தொகுத்து பைண்ட் செய்து வைத்திருப்போருக்கு இது ஒரு சிறந்த அறிவியல் கையேடாகத் திகழும். பல்வேறு பொருள்கள், விஞ்ஞானிகள் பற்றிய இண்டெக்ஸைத் தயாரித்து வைத்துக்  கொண்டால் எந்த அறிவியல் பொருள் பற்றி எங்கு வேண்டுமானாலும் ஆதார பூர்வமாக பேச முடியும்.

இந்தத் தொடரை உருவாக்கக் காரணமாக இணைய தளத்தில் உள்ள பலநூறு தளங்கள் உதவி செய்தன. அவை தரும் செய்திகளின் உண்மைத்தன்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டி இருந்தது.

முக்கியமாக நன்றி தெரிவிக்க வேண்டியது சான்ஃபிரான்ஸிஸ்கோவில் சன்னிவேலில் உள்ள நூலகத்திற்குத் தான்! பேரறிஞர்கள் எழுதியுள்ள நூல்கள் தாம் எத்தனை! எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம்; 21 நாட்களில் திருப்பித் தர வேண்டும், அவ்வளவு தான். சுமார் 2000 ரூபாயிலிருந்து 10000 ரூபாய்க்கும் மேற்பட்ட விலை உள்ள நூல்களைப் படிக்க வாய்ப்பு தந்திருக்கும் நூலகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்; அப்படி ஒரு அற்புத அமைப்பு!

அதில் எடுத்துப் படித்த பல்வேறு நூல்களும், அந்த நூல்களை எழுதிய விஞ்ஞானிகளிடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் உடனுக்குடன் தந்த ஆதரவும் வியக்கவைக்கும் ஒன்று. அந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியா மேன்மையுற்று வல்லரசாக ஆக அறிவியல் அடிப்படையான தேவை. அதிலும் ரொபாட் இயல், விண்வெளி இயல், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு இயல், மூளை இயல்  ஆகியவையே எதிர்கால உலகை ஆளப்போகிறது. இந்திய மக்கள், குறிப்பாக தமிழர்கள் இவற்றில் தேர்ச்சி பெற்று முன்னணியில் நின்றால் நாளைய உலகம் நமதே!

***

Leave a comment

Leave a comment