
Written by S.Nagarajan
swami_48@yahoo.com
Date: 14 March 2019
GMT Time uploaded in London – 10-57 am
Post No. 6192
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
8-3-2019 பாக்யா இதழில் வெளியாகியுள்ள அறிவியல் துளிகள் தொடரில் ஒன்பதாம் ஆண்டு முதல் கட்டுரை – அத்தியாயம் 417
2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1
ச.நாகராஜன்
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விஞ்ஞான விநோதங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்கின்றனர்; வெளி உலகிற்கு அறிவிக்கின்றனர். 2018ஆம் ஆண்டும் ஏராளமான விநோதமான கண்டுபிடிப்புகளை வெவ்வேறு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் சில:
யுரேனஸுக்கு மட்டும் போகாதீர்கள்!
எந்த கிரகம் போனாலும் யுரேனஸுக்கு மட்டும் போக வேண்டாம் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய அறிவுரை. ஏனெனில் நாற்றம் தாங்க முடியாதாம்.ஹைட்ரஜன் சல்பைடு தரும் நாற்றம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பூமியில் எல்லா சாக்கடைகளிலும் அடிக்கும் நாற்றம் தான் இது. ஹவாயில் அமைக்கப்பட்டுள்ள ஜெமினி நார்த் டெலஸ்கோப் யுரேனஸின் வளிமண்டலம் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்து தந்த விவரங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் யுரேனஸ் நாற்றம் பிடித்த ஒரு கிரகம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன் தான் அங்கு போவான் என்று ஜோக் வேறு அடிக்கின்றனர் அவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாட்ரிக் இர்வின் என்ற ஆய்வாளர் தனது அறிக்கையில் இந்த விவரங்களைத் தந்து விட்டு, “அங்கு மைனஸ் 328 டிகிரி பாரன்ஹீட் இருப்பதாலும் அந்த வளிமண்டலம் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் மெதேன் வாயுக்கள் நிரம்பி இருப்பதாலும் ஒரே நாற்றமாக இருக்கும்” என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.
முகமில்லாத தவளை
கனெக்டிகட் காடுகளில் ஜில் ஃப்ளெமிங் என்ற பெண் ஆய்வாளர் ஒரு விசித்திரமான பிராணியைப் பார்த்து அதிசயித்தார். அது ஒரு தவளை. அதற்கு முகமே இல்லை. ஆனால் தாவித் தாவி இதர தவளைகளைப் போல அது அங்கும் இங்கும் போகிறது!
இதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பார்த்தார்; தொடர்ந்து ஆராய்ந்தார் – இப்படி ஒரு பிராணி இருக்க முடியுமா என்று. வெவ்வேறு விதமான விளக்கங்கள் அவருக்கு வந்தாலும் எதுவும் திருப்திகரமான ஒன்றாக இல்லை. அது தூங்கிக் கொண்டிருக்கும் போது பறக்கும் பூச்சி ஒன்று அதைத் தாக்கி அதன் முகத்தை அழித்திருக்கலாம் என்பதும் ஒரு விளக்கம். முகம் மட்டுமே அழிக்கப்பட்ட நிலையில் இதர உடல் பகுதிகள் இருப்பதால் அதனால் தாவ முடிகிறது! அவருக்கு பல விளக்கங்கள் வந்தாலும் அதிசயமான முகமற்ற தவளை தாவித் தாவிக் குதிப்பதை வியப்புடன் தான் அவர் பார்க்கிறார்!
கல்லறையில் காண்பது புதுவகை உயிரினமா?
2004ஆம் ஆண்டு சீனாவில் சீன சக்கரவர்த்தி க்வின் ஷி ஹுவாங்கின் பாட்டியான லேடி ஜியாவின் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது கி.மு. 259 முதல் 210 முடிய உள்ள காலம் ஆகும். அவர் கல்லறையில் ஏராளமான எலும்புக்கூடுகளும் எலும்புகளும் இருந்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில்,அவரது வளர்ப்புப் பிராணிகளாக அவை இருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதில் ஒரு எலும்புக் கூடு மட்டும் உலகில் அறிந்திராத ஒரு வகை உயிரினத்தின் எலும்புக்கூடாக இருப்பது விஞ்ஞானிகளுக்கு பிரமிப்பை ஊட்டுகிறது. ஐஸ் காலத்தில் வாழ்ந்து அருகி மறைந்து விட்ட உயிரினமான ஜுஞ்ஜி இம்பெரியலிஸ் (Junzi Imperialis)ஆக இது இருக்கலாமோ என விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இதன் எடை 6 கிலோ தான். இது பலவித இலைகள் மற்றும் பழங்களைத் தின்று வாழும் பிராணி. லண்டன் யுனிவர்ஸ்டி காலேஹ் புரபசரான ஹெலன் சாட்டர்ஜி என்ற பெண்மணி இதில் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்.

நாயிடமிருந்து வந்த புது வகை பாக்டீரியா!
நாயை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்கள் ஒரு போதும் கடிக்காது என்று பெருமை பாராட்டுவது வழக்கம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக க்ரெக் மண்ட்யூஃபெல் என்ற விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கர் தன் நாயைத் தன் மேல் நக்க விட்டது தப்பு என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. அவரது நாய் அவரை நக்கவே அவர் காப்னோசைடோபாகா (Capnocytophaga) என்ற ஒரு புதுவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரது கால்களைத் துண்டிக்க வேண்டி வந்து விட்டது. கைகளிலும் ஒரு பகுதியைத் துண்டிக்க வேண்டி நேர்ந்தது. இந்த பாக்டீரியா வீட்டு வளர்ப்பு பிராணிகளில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. ஆனால் எந்த ஒரு பிராணியும் மனிதனை அளவுக்கு அதிகமாகச் சுரண்டி அந்த பாக்டீரியாவை இரத்தத்தில் கலக்கச் செய்தால் அபாயகரமான விளைவுகள் ஏற்படுமாம். இதில் நிபுணரான டாக்டர் சில்வியா முனோஸ் பிரைஸ் என்ற பெண்மணி, “இப்படி நேர்வது அரிதிலும் அரிது; என்றாலும் இப்படி நேர்ந்தால் விளைவு விபரீதம் தான்” என்கிறார். 99 சதவிகிதம் இப்படி ஏற்பட சான்ஸே இல்லை என்பதும் அவர் தரும் குறிப்பு.
இன்னும் சில விநோதக் கண்டுபிடிப்புச் செய்திகளை அடுத்துக் காண்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
சார்லஸ் டார்வின் (பிறப்பு 12-2-1809 மறைவு 19-4-1882) தென் அமெரிக்காவிற்கு ஹெச். எம். எஸ். பீகிள் என்ற கப்பலில் 1831 முதல் 1836 முடிய பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு தனது 27ஆம் வயதில் பிரிட்டனுக்குத் திரும்பினார். அதன் பின்னர் அவர் பிரிட்டனை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் 1842ஆம் ஆண்டு டவுன் ஹவுஸில் தனது சொந்த வீட்டிற்குச் சென்று விட்டார். அங்கிருந்த தோட்டம் வீடு உள்ளிட்டவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தலானார். நாற்பது ஆண்டுகள் கழித்து அவர் இறக்கும் வரை அவர் அந்த வீட்டை விட்டு வேறெங்கும் செல்லவில்லை.
எல்லா விதைகளும் உரங்களும் அவர் இல்லத்திற்கே வருமாறு செய்யப்பட்டன. அவர் இயல்பாகவே ஒரு தாவர இயல் நிபுணர். மலர்கள் மட்டும் ஏன் விதவிதமான வண்ணங்களுடனும் இதழ்களுடனும் அமைப்புகளுடனும் தோன்றுகிறது என்பதை எண்ணி எண்ணி வியந்தார். இந்த ஆராய்ச்சியில் வெகுவாக கவனம் செலுத்திய அவர் இது ஒரு இயல்பான தேர்வு (Natural Selection) என்ற முடிவுக்கு வந்தார். இதில் தெய்வீக கர்த்தாவின் கற்பனா வேலைக்கு இடமில்லை (natural selecation rather than the imaginative work of a Divine Creator) என்றார். இது கடும் எதிர்ப்புக்குள்ளானது.அனைவரும் அவரது இந்தக் கருத்தை எதிர்த்தனர்.
ஆனாலும் தன் வாழ்நாள் முழுவதும் இதே கொள்கையுடன் இருந்த அவர் இடைவிடாது மலர்களின் மீதும் அதன் விதவிதமான அமைப்புகளின் மீதும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த மலர் ஆராய்ச்சியைப் பற்றி அவர் தனது சுயசரிதையில் கூறுகையில், ‘எனது அறிவியல் வாழ்க்கையில் பல வண்ணமுடைய பசுமை மாறாச் செடிகளினுடைய அமைப்புகளின் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் இருந்த ஒரு திருப்தி வேறெதிலும் எனக்குக் கிடைக்கவில்லை’ என்று எழுதினார். (“I do not think anything in my scientific life has given me so much satisfaction as making out the meaning of the structure of these plants.”).

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பாக்யாவில் கடந்த எட்டு வருடங்களாக வெளியாகி வரும் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள அறிவியல் செய்திகளைக் காணொளிக் காட்சியாகக் காணலாம் என்பதே அந்தச் செய்தி.
ஆம், டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெற்று வருகின்றன. எனது 3000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் 108 புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுவையான செய்திகளைத் தரும் இந்த முயற்சியில் கடந்த இரு மாதங்களில் இந்த சேனலில் சுமார் 150க்கும் மேலான காணொளிக் காட்சிகள் (20 ஆங்கிலத்திலும் ஏனையவை தமிழிலுமாக) இடம் பெற்றுள்ளன. உலகின் தலை சிறந்த 4000 விஞ்ஞானிகளில் 10 பேரே இந்தியர்கள் என்ற செய்தி (டைம்ஸ் ஆஃப் இந்தியா 4-1-2019 இதழ்) வெளியாகியுள்ள இன்றைய நாட்களில் அறிவியல் வளர்வது இன்றியமையாத தேவையாகிறது. அன்பர்கள் அனைவரும் இந்தக் காணொளிக் காட்சிகளின் மூலம் பயன்பெற வேண்டுகிறேன். உலகெங்கிலுமிருந்து இவற்றிற்குப் பெருகி வரும் ஆதரவு நல்ல ஊக்கத்தை அளிக்கிறது. அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன் ச.நாகராஜன்
****