அதிசய பூமி அயோத்தி!(Post No. 6404)

Written  by S Nagarajan
swami_48@yahoo.com


Date: 18 May 2019


British Summer Time uploaded in London –  8-59 am

Post No. 6404

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மே 2019 ஞான ஆலயம் மாத இதழில் எனது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.அவற்றில் ஒன்று இது:

அதிசயங்கள் பல கண்ட அற்புத பூமி  அயோத்தி!

ச.நாகராஜன்

அயோத்தி ராம ஜென்ம பூமி என்ற சிறப்பை மட்டும் கொண்டதல்ல; அவதாரத்தின் அடிப்படையிலான ஏராளமான அற்புதங்களைக் கொண்ட பூமியுமாகும்.

ஒரே ஒரு அற்புதத்தை மட்டும் இங்கு பார்ப்போம்:

அப்துல் பர்கர் என்ற ஒரு முஸ்லீம் ஹவில்தார் ராம ஜென்ம பூமியில் அவுட்போஸ்டில் இரவு நேரக் காவல் காத்து வந்தார்.

அவர் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் முன் ஒரு வாக்குமூலத்தைத் தானே முன்வந்து தந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறிய அற்புத சம்பவம் இது:

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி.

இரவு நேரக் காவல் பார்த்து வந்த அவர் அன்று இரவு 2 மணிக்கு ஒரு பேரொளியை ஆலயத்தின் உள்ளே கண்டார். பொன்மயமான அந்த ஒளி ஒரு நான்கு அல்லது ஐந்து வயதுடைய தங்க நிற பாலகன் ஒருவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட பேரொளியை அவர் தன் வாழ்க்கையில் கண்டதே இல்லை. ஒளி வெள்ளத்தில் மூழ்கி அவர் சமாதி நிலையை எய்தி விட்டார். தனக்கு உணர்வு வந்த போது ஆலயத்தின் பிரதான வாயிலின் பூட்டு உடைந்து கிடந்தது. ஏராளமானோர் கோவிலின் வாயிலில் குழுமி இருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்து பக்தி பரவசத்துடன் ஆரத்தியை எடுத்துக் கொண்டிருந்தனர்.

     டவுன் போலீஸ் ஸ்டேஷனும் ஒரு அதிகாரபூர்வமான பதிவைச் செய்திருந்தது. ஆறாயிரம் பேர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பக்தி பரவசத்துடன் ராம விக்ரஹத்திற்கு ஆரத்தி எடுத்ததை அந்த ரிகார்டும் உறுதிப் படுத்தியது.

ஆக ராம ஜென்ம பூமியில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்த வழிபாடு 1949 வரை தொடர்ந்திருக்கிறது.

ராம ஜென்ம பூமி ராம ஜெனனத்தை மட்டும் கொண்ட பூமி அல்ல; அவனது சரிதத்தை உலகியல் மொழியில் ராமசரித மானஸ் என்று துளஸிதாஸர் (1532 – 1623) இயற்றிய இடமும் கூட அயோத்தி தான்!

துளஸிதாஸரின் வாழ்க்கை அற்புதமான சம்பவங்களைக் கொண்டது.

அவர் கர்ப்பத்தில் 12 மாதம் இருந்தது, பிறக்கும் போது 32 பற்களுடன் பிறந்தது போன்ற  ஏராளமான அதிசய விஷயங்களைப் பொதுவாக அனைவரும் அறிவர். அவர் ராம பக்தராக மாறிய சம்பவமும் அதிசயமான ஒன்று தான். 

அவரது மனைவி மீது கொண்ட ஆசையால் அவர் மனைவி தனது பிறந்தகம் சென்ற போது அவரைத் தொடர்ந்து பின்னால் சென்றார் துளஸிதாஸர்.

அதைப் பார்த்த அவர் மனைவி, “எனது இந்த சதை மீதும் எலும்பின் மீதும் கொண்டிருக்கும் பற்றைப் போல ராமபிரானின் மீது கொண்டால் பிறப்பு இறப்பு பயம் நீங்குமே” என்று சொல்ல கண நேரத்தில் உலக வாழ்க்கையைத் துறந்து மஹா ஞானியானார் அவர்.

பாரத தேசமெங்கும் சுற்றி அலைந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மேலிட நெகிழ்ந்தார்; உருகினார்.

பின்னர் வாரணாசிக்கு அவர் வந்த போது அயோத்திக்குச் செல்லுமாறு இறைவனின் திருவருள் ஆணை பிறந்தது.

அயோத்தி சென்றார் அவர்.

அவர் துளஸி ராமாயணத்தை இயற்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

வால்மீகி ராமாயணத்தை இயற்றிய போது அதைப் படித்து அதற்கு தனது கையெழுத்திட்டு அங்கீகாரம் தந்தார் ராமபிரான்.

ஹனுமானும் ராம சரிதத்தை எழுத ஆசைப்பட்டு கற்களில் தன் நகங்களால் ராம சரிதத்தை எழுதினார்.

தனது ராமாயணத்தை ராமபிரானிடம் அவர் காண்பிக்க,

ராமபிரான், அதுவும் சரிதான் என்று கூறி விட்டு,, “ஆனால்ஏற்கனவே வால்மீகி ராமாயணத்தில் கையெழுத்திட்டு விட்டதால் அதில் தன்னால் கையெழுத்திட முடியாது என்றும் வால்மீகியிடம் சென்று அதைக் காண்பிக்குமாறும் அருளுரை பகர்ந்தார்.

ஹனுமான் வால்மீகியிடம் சென்றார்; தனது ஹனுமத் ராமாயணத்தைக் காட்டினார்.’அதைப் படித்து வியந்த வால்மீகி தனது ராமாயணம் அதற்கு முன் நிற்காது என்ற முடிவில் ஹனுமனது ராமாயணத்தைக் கடலில் போடுமாறு கேட்டுக் கொண்டார்.

வால்மீகி கூறியபடி தனது ராமாயணத்தைக் கடலில் போட்ட ஹனுமார் இனி வரும் காலத்தில் தானே துளஸி என்ற பெயருடைய ஒரு பிராமணருக்கு உத்வேகம் ஊட்டி, தனது ராமாயணத்தை எல்லா மக்களும் எளிதில் அறியும் மொழியில் இயற்றச் செய்யப் போவதாக அருளுரை பகர்ந்தார்.

அதன் படியே நடந்தது. அயோத்திக்குச் சென்ற துளஸிதாஸர் அங்கு ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். அந்த இடம் அவருக்கு ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது. ஒரு சாது அந்த இடத்தைப் பீடத்தால் அலங்கரித்து துளஸிதாஸர் அங்கு வருவதைத் தன் குரு முன்னதாகவே கணித்துச் சொல்லி விட்டார் என்று கூறினார்.

1575ஆம் ஆண்டு ராம நவமி நாள். அறிஞர்களின் கூற்றுப்படி திரேதா யுகத்தில் ராமர் பிறந்த நாளில் எந்த கிரக நிலைகள் இருந்தனவோ அதே கிரக சேர்க்கை அமைந்த நாள் அது. ராமரைத் துதித்து தன் ராமசரிதமானஸ் காவியத்தைத்த் தொடங்கினார் துளஸிதாஸர்.

ஏழு காண்டங்களை எளிய மொழியில் பாடினார். மானஸ சரோவருக்கு ஏழுபடிகள் வழியே செல்வதாக உள்ள கருத்துப்பட ராமசரித மானஸ் என்ற பெயரை தான் இயற்றிய ராமாயணத்திற்குச் சூட்டினார்.

இரண்டு வருடம் ஏழு மாதம் 26 நாட்களில் அற்புதமான காவியம் முடிந்தது. அது முடிந்த நாள், சீதா கல்யாணம் நடந்த அதே ஆண்டு விழா நாள்.

சரிதத்தைப் பூர்த்தி செய்த துளஸிதாஸர் வாரணாசி திரும்பினார்.

அங்கு அவரது காவியத்தின் பெருமை பரவியது. இது பொறுக்காத பண்டிதர்கள் சிலர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுவடிக் கட்டை எடுத்து வருமாறு இருவரை அனுப்பவே அவர்கள் ஆலயத்திற்கு இரவு நேரத்தில் சென்றனர்.

ஆனால் அங்கு இருவர் வில்லும் அம்புடனும் காவல் காத்து வருவதைப் பார்த்து அதிசயித்த அவர்கள் மறுநாள் துளஸிதாஸரை வணங்கி மன்னிப்புக் கேட்டு நடந்ததைக் கூறினர்.

அமிர்தமே நாணமடையும் படியான சுவையான சொற்கள் கொண்டது எனப் புகழப்படும் காவியம் மக்களிடையே பரவி ராம பக்தியை வளர்த்தது.

சித்ரகூடத்தில் ராம தரிசனம் பெற்ற துளஸிதாஸர் சமாதி நிலையை எய்தினார்.

ஆக அயோத்தி ராம ஜென்ம பூமி என்ற சிறப்புடன் கோடிக் கணக்கான மக்கள் அன்றாடம் பய பக்தியுடன் போற்றும் ராம சரித மானஸ் காவியம் பிறந்த இடமும் கூட என்பதனால் அதன் சிறப்பு மேலும் கூடுகிறது.

12 நூல்களைப் படைத்த துளஸிதாஸர் சம்ஸ்கிருத பண்டிதரும் கூட.

ராமசரித மானஸ் காவியத்தில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம் அதிசயமானது. வால்மீகியின் ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரமாவது ஸ்லோகத்திலும் ஒரு காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்து தோன்றும். ராமசரித மானஸிலோ ஒவ்வொரு செய்யுளிலும் ச, த, ர, ம வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து வரும்.சீதாராமன் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் இந்த ச, த, ர, ம வர்க்க எழுத்துக்கள். ஆக சீதை அல்லது ராமனை ஒவ்வொரு செய்யுளிலும் துதிக்கும்படியான ஒரு அற்புத அமைப்பு துளஸி ராமாயணத்தில் உள்ளது. காவியத்தின் கதையையும் சொல்ல வேண்டும், சந்த சாஸ்திரத்தின் படியும் அமைக்க வேண்டும், சீதாராமன் என்ற சொல்லில் உள்ள வார்த்தைகளில் ஏதேனுமொரு வார்த்தையைக் குறிக்கும் வர்க்க எழுத்தையும் தர வேண்டும் என்றால் அது மனித யத்தனத்திற்கு அப்பாற்பட்ட இறை செயல் அல்லவா? ராமனே தனது ஜென்ம பூமியில் தன் நினைவை மக்களுக்கு ஒவ்வொரு செய்யுளிலும் தரும் வரம் அல்லவா இது!

ஆக இப்படி ஆயிரக்கணக்கில் அற்புதங்கள் நிரம்பிய பூமி அயோத்யா. அதில் ராமனை பிரதிஷ்டை செய்து காலம் காலமாகச் செய்து வந்த வழிபாட்டை வழக்கம் போல செய்ய சீதாராமன் அருள் புரிவாராக!

****

Leave a comment

Leave a comment