
Painting by Stephen Wiltshire
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 14 June 2019
British Summer Time uploaded in London – 6- 35 am
Post No. 6545
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-6-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்துள்ள ஒன்பதாம் ஆண்டு ஒன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 425
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3
ச.நாகராஜன்
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3
ச.நாகராஜன்
அபூர்வ ஓவியர் – ஸ்டீபன் வில்ட்ஷைர் (Stphen Wiltshire)
ஒரே ஒரு முறை பார்த்தால் போதும் எந்த இயற்கை காட்சியாக இருந்தாலும் சரி, நகர்ப்புறத் தோற்றமானாலும் சரி, கட்டிடமானாலும் சரி அப்படியே துல்லியமாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட அபூர்வ கலைஞர் ஸ்டீபன் வில்ட்ஷைர். லண்டனில் 1974, ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த ஸ்டீபன் குழந்தையாக இருந்த போது ஊமை போல இருந்தார். ஆனால் எதையும் பார்த்தவுடன் வரையும் தன் அபூர்வ ஆற்றலை மூன்று வயதிலேயே வெளிப்படுத்தி விட்டார்.ஐந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள க்வீன்ஸ்மில் பள்ளிக்கு அனுப்பினர். அங்கு அவரது அபூர்வ ஓவியத் திறமை கண்டறியப்பட்டது. பள்ளியில் அவரிடம் அவரது ஓவியம் பற்றி அனைவரையும் கேட்க வைக்கவே இறுதியில் பேப்பர் என்ற வார்த்தையை முதன் முதலாகப் பேசினார். ஒன்பது வயதில் பேச ஆரம்பித்தார். உலகெங்கும் அவர் பெயர் பிரபலமானது. அமெரிக்க கார்களைப் பற்றிய என்சைக்ளோபீடியா என அவர் புகழப் படுகிறார். உலகெங்கும் அவரது ஓவியங்களைப் பார்க்காதவர்கள் இல்லை; பாராட்டாதவர்கள் இல்லை!
இசை மேதை – டெரிக் பரவிசினி (Derek Paravicini)
ஹ்யூமன் ஆர்கெஸ்ட்ரா என புகழப்படுபவர் டெரிக் பரவிசினி.

ஒரே ஒரு முறை ஒரு இசையைக் கேட்டால் போதும் அதை அப்படியே இசைப்பார் அவர். 1979, ஜூலை 26ஆம் தேதி பிறந்த பரவிசினி லண்டனில் வசித்து வருகிறார். பார்வையில்லாத இவர் பிரபல எழுத்தாளரான சாமர்செட் மாமின் கொள்ளுப் பேரன். இவரது அதிசயத் திறமை இளம் வயதிலேயே வெளிப்பட்டது. ஒன்பதாம் வயதில் லண்டனில் பொது அரங்கம் ஒன்றில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 2010, ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ஹிஸ்டரி சேனலில் உலகப் புகழ் பெற்ற ஸ்டான் லீயின் சூப்பர் ஹ்யூமன்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பல சோதனைகளையும் எதிர்கொண்டு தன் திறமையைக் காண்பித்து அனைவரையும் அயரச் செய்தார். பி.பி.சியும் இவரது நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இவரது அபாரத் திறமை இன்றும் தொடர்கிறது.
வேகமாகப் படிக்கும் பெண்மணி – ஆன்னி டோன்ஸ் (Anne Tones)

உலகின் அதி வேகமாகப் படிக்கும் பெண்மணி என்ற புகழைப் பெற்றவர் ஆன்னி டோன்ஸ்! பிரபல நாவல் தொடரான ஹாரி பாட்டர் தொடரில் ஏழாவது நாவல் 608 பக்கம் உடையது. அதை அவர் 47 நிமிடம் ஒரு வினாடியில் படித்து முடித்தார். இப்படியும் படிக்க முடியுமா என்ற வியப்பை உலகெங்கும் ஏற்பத்துபவர் இந்த அதிசயப் பெண்மணி.

மாரத்தான் மன்னர் – டீன் கர்னாஸஸ் (Dean Karnazes)
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள இங்கிள்வுட் என்ற இடத்தில் 1962, ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்த டீன் கர்னாஸஸ் உலகின் அதிவேக ஓட்டக்காரர். இவரை ‘அல்ட்ரா மாரதான் மேன்’ என்று அழைக்கின்றனர். 50 மாரத்தான்களை 50 நாட்களில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இவர் 2006இல் ஓடிக் காட்டவே உலகினர் பிரமித்துப் போனார்கள். இவரது திறமை எப்படிப்பட்டது தெரியுமா? 2005இல் 350 மைல்களை 80 மணி நேரம் 44 நிமிடங்களில் தூங்காமல் ஓடிக் காட்டினார்.
மூச்சைப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் – ஸ்டிக் செவெரின்ஸென் (Stig Severinsen)
டென்மார்க்கைச் சேர்ந்த ஸ்டிக் செவெரின்ஸென் 1973, மார்ச், 8ஆம் தேதி பிறந்தவர். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டில் நான்கு முறை மூச்சைப் பிடித்து நீந்தும் ஆற்றல் உடையவராக அறிவிக்கப்பட்டவர். 22 நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் தனது ஆற்றலைக் காட்டிய போது உலகமே வியந்தது.நல்ல ஆரோக்கியமான ஒருவர் இரு நிமிடங்களுக்கு மேல் மூச்சைப் பிடித்து நிறுத்த முடியாது. ஸ்டான் லீயின் சூப்பர்ஹ்யூமன் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது இவரைச் சோதித்துப் பார்த்தனர். அப்போது அவரது இந்த அபூர்வ ஆற்றலுக்குக் காரணம் அவரது இரத்தச் சிவப்பு அணுக்களை அவர் தனது மண்ணீரலில் சேமித்து வைத்திருப்பது தான் என்பதைக் கண்டறிந்தனர். இதே போல டால்பினும் செய்வது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்!

பல் மொழி வல்லுநர் – ஹரால்ட் வில்லியம்ஸ் (Harold Williams)
இவர் (தோற்றம் 6-4-1876 மறைவு 18-11-1928) நியூஜிலாந்தைச் சேர்ந்தவர். ஒரு மொழியை நன்கு கற்பதிலேயே அனைவரும் படும் கஷ்டம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவரோ 58 மொழிகளை நன்கு அறிந்திருந்தார். சிறந்த பத்திரிகையாளர்; தி டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியராகவும் பணியாற்றினார். சீன மொழி, ஜப்பானிய மொழி, எகிப்திய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் கொண்டிருந்த அறிவு திகைப்படையச் செய்யும் ஒன்று.
ரப்பர் பாய் – டேனியல் ப்ரௌனிங் ஸ்மித் (Daniel Browning Smith)

தன் உடலை ரப்பர் பந்து போல வளைத்து நெளித்து உலகின் மிகவும் நெகிழ்வான நபர் தான் என்பதை நிரூபிப்பவர் டேனியல் ப்ரௌனிங் ஸ்மித்! இவரது செல்லப் பெயர் ரப்பர் பாய்! 1979 மே மாதம் 8ஆம் தேதி பிறந்த இவர், தனது உடலை முன்னும் பின்னுமாக வளைப்பார். கை கால்களை 180 டிகிரி சுழற்றிக் காட்டுவார். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் இவரை வாழ்ந்து கொண்டிருக்கும் உலக மக்களில் உலகின் அதி நெகிழ்வான மனிதன் (most flexible man alive) என்று அறிவித்திருக்கிறது; ஏழு கின்னஸ் ரிகார்டுகளை வழங்கி இருக்கிறது.இவர் ஒரு நடிகர். காமெடியன்.விளையாட்டு வீரர். தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பவர். ஸ்டண்ட்மேன்.
இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
உலகம் கண்ட விசித்திரமான விஞ்ஞானிகளில் ஒருவர் ஜோஸா டெல்காடோ. (Josa Delgado). யேல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாரக்ப் பணியாற்றினாலும் கூட அவர் ஆர்வம் கொண்டிருந்தது மனம் பற்றிய ஆராய்ச்சியில் தான். ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்காடோ உயர் விலங்குகளின் மூளையில் எலக்ட்ரோடுகளைச் செருகிப் பதித்தார். தன் கையில் ஒரு ரிமோட் கண்ட் ரோலை வைத்துக் கொண்டு அந்த விலங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான் சொன்னபடி அவற்றை ஆட்டுவித்தார். கஷ்டமான இயக்கங்களை அவை செய்யுமாறு கட்டளையிட்டார். ஒரு காளையின் மூளையில் எலக்ட்ரோடைப் பதித்து அதை ஒரு ரிங்கில் தன்னுடன் சண்டை போடுமாறு செய்து அது தன்னை முட்ட வரும் போது டிரான்ஸ்மிட்டரை உபயோகித்து அது தன்னை முட்ட வருவதை நிறுத்தினார்.
25 மனிதர்களிடமும் இப்படி எலக்ட்ரோடுகளைப் பதித்தார். எப்படியேனும் அவர்களின் மனங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்று நினைத்தார். வலுச்சண்டைக்குப் போவதில் தான் அவரது ரிமோட் கண்ட்ரோல் வேலை செய்தது. ஒரு முறை அவர் இப்படிச் சொன்னார் : “நாம் மின்னணு ஆற்றலால் மூளையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் படைகளும் போர் தளபதிகளும் மூளையில் செய்யப்படும் மின்சக்தி தூண்டுதலால் கட்டுப்படுத்தப்படுவர்.”
மனக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது நோக்கம் நிறைவேறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
***
