

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 22 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-59 am
Post No. 6914
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.
ஞான ஆலயம் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
ரிஷிகள் பூமி!
ச.நாகராஜன்


ரிஷி என்றால் சுயநலமின்றி தெளிவான திருஷ்டியுடன் உள்ளதை உள்ளபடி காண்பவர் என்று பொருள். த்ரஷ்டா என்று அவர்களைக் கூறுவது வழக்கம். சூஷ்ம திருஷ்டி மூலம் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்பதும், அந்தர்திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து அவரது நடத்தையின் ஆதிகாரணத்தை அறிவதும், திவ்யதிருஷ்டி மூலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தை அறிவதும் ரிஷிகளின் இயல்பு. மந்த்ர திருஷ்டா என்றால் என்றுமுள்ள மந்திரங்களைத் தங்கள் தவத்தால் கண்டு உலக நன்மைக்காகத் தருபவர் என்று பொருள்.
வசிஷ்டர் விஸ்வாமித்திரர், யாக்ஞவல்க்யர் உள்ளிட்டோர் ப்ரம்ம ரிஷிகள், ஜனகர் போன்ற அபூர்வமான பிரம்மஞானம் உடைய ராஜாக்கள் ராஜ ரிஷிகள் என்ற வரிசையில் சேர்வர். நாரதர் போன்றோர் தேவரிஷிகளாவர்.
ரிஷிகள் எண்ணிலடங்கார். பாரத தேசம் முழுவதும் ரிஷிகளின் காலடித் தடம் படாத இடம் இல்லை எனலாம். அதிலும் தமிழகத்தை ரிஷிகளின் பூமி என்றே சொல்லலாம். இங்கு அடிக்கு அடி ஒரு ரிஷியின் அபூர்வமான அற்புதமோ அல்லது ரிஷி சம்பந்தப்பட்ட சம்பவமோ நடந்திருக்கிறது.
ஆதி காவ்யமான வால்மீகி முனிவரின் ஆசிரமம் இன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம் இருந்த இடத்தில் பண்டைய காலத்தில் இருந்தது. அங்கு தான் சீதையும் லவ குசரும் வாழ்ந்தனர் என்பது எத்துணை அபூர்வமான செய்தி.
சென்னையில் உள்ள திருவான்மியூரில் வான்மீகி முனிவருக்கான சிறு ஆலயம் ஒன்று உள்ளது. மார்க்கண்டேய மஹரிஷியின் கட்டளையின் பேரில் வான்மீகர் இங்கு வந்து வழிபட்டமையால் வான்மியூர் என்ற திருநாமத்தைப் பெற்றது திருவான்மியூர்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற தலம். புரு என்னும் முனிவரின் யாகத்தின் பயனாகப் பிறந்த சாலிஹோத்ரர் என்னும் ரிஷி இங்கு தான் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு உணவு படைத்த பின்னரே தான் உண்ணும் பண்பைக் கொண்ட இந்த முனிவரிடம் பெருமாளே வயோதிகராக வந்து உணவு பெற்றார். பசி தீராமல் முனிவரின் பங்கையும் சேர்த்து உண்ட பெருமாள், படுக்க இடம் எது என்ற பொருளில்,’படுக்க எவ்வுள்’ என்று கேட்டதால் இந்த ஊரின் பெயர் எவ்வுள்ளூர் என்று ஆகி இப்போது திருவள்ளூர் ஆகி விட்டது.
அகத்திய முனிவருக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கத் தேவையே இல்லை.அகத்தியருடன் தொடர்பு கொண்ட திருத்தலங்கள் எத்தனை எத்தனையோ!
மான் பூசித்த தலமான அகத்தியான் பள்ளியில் தான் அகத்தியர் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். வேதாரண்யத்தில் ஈஸ்வரனின் கல்யாண கோலத்தைத் தரிசிக்க வந்த போது இங்கு இப்படி தங்கியதால் இந்த ஊருக்கு அகத்தியான் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அகத்தியர் மற்றும் 49 சங்கப் புலவர்களின் திருவுருவங்கள் உள்ளன. அகத்தியர் பளிங்குத் துண்டு ஒன்றைக் கலைப்பீடமாக இங்கு வைத்தார் என்று திருவையாற்றுப் புராணம் கூறுகிறது.

அகத்தியருக்குக் கல்யாண கோலமாக, ஸ்வாமி தரிசனம் தந்த தலங்களாக அமைந்துள்ளவை: நல்லூர், திருமணஞ்சேரி, திருவீழிமலை, ருத்திர கங்கை, அம்பல், திருமறைக்காடு, இடும்பாவனம், பாபவிநாசம் ஆகியவவை.
மார்க்கண்டேய மஹரிஷியின் ருத்ராக்ஷம் அழுந்தியுள்ள தலம் திருக்கடையூர். சிவனைத் தழுவிக் கொண்ட தலம் என்பதாலும் காலனைச் சிவபிரான் கடிந்து கொண்ட தலம் என்பதாலும் இது மிகவும் பிரசித்தி பெற்றது.
அத்திரி மஹரிஷி இருந்த தலம் இரும்பைமாகாளம். அவர் பூஜித்த தலம் சிவசைலம்.
தப்பளாம்புலியூர் என்னும் மண்டூகவியாக்கிரபுரத்தில் தான் மாண்டூக ரிஷிக்கு தரிசனம் கொடுத்த நிகழ்வு நடந்தது.
வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய தலங்களாக விளமர், ருத்ரகங்கை, புலியூர் உள்ளிட்ட ஏராளமான தலங்கள் தமிழகத்தில் உள்ளன.வியாக்ரபாதருக்கு அருளிய தலம் திருவெண்காடு.
வியாக்ரபாதர் தமிழில் புலிக்கால் முனிவர் என்ற பெயரால் பெரிதும் போற்றப்படுகிறார். வண்டு முதலியன பூக்களிலிருந்து மதுவை எடுப்பதால் அதன் தூய்மை போய்விடுகிறது என்று கருதிய வியாக்ரபாதர் தூய்மையானவை தானா என்று மலர்களை நன்கு ஆராய கூர்மையான கண்களை வேண்டி புலிக் கண்களையும் மரங்களின் மீது ஏறிப் பறிக்க புலிக்கால்களையும் பெற்றார். ஆகவே வியாக்ரபாதர் என அழைக்கப்பட்டார்.
ஒன்பது தலங்கள் நவவியாக்கிரபுரம் என அழைக்கப்படுகின்றன.
அவையாவன : 1) பெரும்பற்றப்புலியூர் 2) திருப்பாதிரிப்புலியூர் 3) கானாட்டாம்புலியூர் 4) ஓமாம்புலியூர் 5) தப்பளாம்புலியூர் 6) அத்திப்புலியூர் 7) முனிபுலியூர் 8) சிறுபுலியூர் 9) பெரும்புலியூர். இந்த ஒன்பது புலியூர்த் தலங்களும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றவை.
பதஞ்சலி ரிஷியும் வியாக்ரபாதரும் சிதம்பரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவம் காணத் தவமிருந்தனர். அவர்களது தவத்தை மெச்சியே நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி அருள் பாலித்தார்.
வியாக்ரபாதரின் ஜீவ சமாதி திருப்பட்டூரில் உள்ளது.

ஸனகாதி நால்வர் பூஜித்த தலங்களோ ஏராளம் – திருவாவடுதுறை, திருக்கோழம்பம், திருநல்லம், திருக்கோகர்ணம் உள்ளிட்ட தலங்கள்.
தத்தாத்ரேய மஹரிஷி பூஜித்த தலங்கள் : திருவிடைமருதூர், சிவசைலம்.
48000 மஹரிஷிகள் ஒன்றாகச் சேர்ந்து பூஜை செய்த தலங்கள் : பெருஞ்சேரி, வழுவூர், தாருகாவனம்.
காளஹஸ்தி முதல் இராமேஸ்வரம் வரையும், காவேரி தீரத்தில் ஸமுத்ரம் முதலாக கரூர் வரையும், ஒவ்வொரு திடலிலும், தலங்களிலும் இருக்கும் லிங்கங்கள் எல்லாம் ரிஷிகளால் அவை ஆரண்யமாக இருந்தபோது ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டவை. காட்டுப் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் அவ்வப்பொழுது கிடைக்கும் இவை இப்படி பூஜிக்கப்பட்டவையே. இவை இன்னும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்; அவ்வளவு சிவ லிங்கங்கள்!!
ஸப்தரிஷிகளும் சேர்ந்து பூஜித்த தலங்கள் : திருத்தவத்துறை,ரிஷியூர், நல்லூர் ஆகிய தலங்கள்.
பழைய காலத்தில் தான் ரிஷிகள் இருந்தனர் என்பதில்லை; இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் அவர்கள் ஆங்காங்கே தோன்றி அதிசயிக்க வைக்கின்றனர்; அருள் பாலிக்கின்றனர்.

காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த மஹா பெரியவாள் இதற்குச் சிறந்த உதாரணம்; அடுத்து திருவண்ணாமலையில் ஆன்மீக அரசோச்சிய ரமண மஹரிஷி ரிஷிக்கான இலக்கணத்தை சம காலத்தவருக்குக் காண்பித்தவர்; இதே போல சேஷாத்ரி மஹரிஷி உள்ளிட்ட பலரையும் நாம் பட்டியலிடலாம். ஆக அருள் பூமிக்கு ரிஷிகள் பஞ்சமே இல்லை; நாம் தான் அவர்களைப் பக்தியுடன் வணங்கி அருள் பெற வேண்டும்.!
ஆன்மீக பூமியாக விளங்கிய தமிழகத்திலேயே பக்தி பிறந்ததாக பக்தி தேவதை தானே கூறுவதை பாகவதம் தெரிவிக்கிறது.
ஆக பக்தித் தாயகமான தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டம் கூட்டமாக ரிஷிகள் தவம் இருந்து அருள் பெற்ற வரலாறுகள் ஏராளமாக இருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தை ரிஷிகள் பூமி என்று சொல்லித் திருப்திப்படுவதோடல்லாமல் அவர்கள் எங்கெல்லாம் அருள் பெற்றார்களோ அந்த இடங்களில் எல்லாம் நாமும் வழிபட்டு உய்யலாம்; அவர்களின் ஆன்மீக சக்தி அங்கு இருப்பதால் சிறிய முயற்சிக்கும் நாம் பெரும் பயனை அடையலாம் என்பதே சத்தியமாகும்!
வாழ்க ரிஷிகள் பூமி; ரிஷிகளை வணங்கிப் பெரும் பேறு பெறுவோம்!
***



DR.S.RAMESH SADHASIVAM
/ September 1, 2019அருமை!நன்றி!
On Thu, Aug 22, 2019 at 12:30 PM Tamil and Vedas wrote:
> Tamil and Vedas posted: ” WRITTEN BY S NAGARAJAN swami_48@yahoo.com
> Date: 22 AUGUST 2019 British Summer Time uploaded in London – 7-59 am
> Post No. 6914 Pictures are taken from various sources; this is a non-
> commercial, educational ”
>