விபூதியின் மஹிமை! – 3 (Post No.7560)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7560

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதி மஹிமை பற்றிய குறுந்தொடரில் கடைசிக் கட்டுரை இது

விபூதியின் மஹிமை! – 3

ச.நாகராஜன்

 மதுரையில் உள்ள திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில் 291-வது குருமகா சந்நிதானமாகப் புகழுடன் திகழ்ந்தவர் திருவருள் தவயோக               ஸ்ரீஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும் என்ற சிறிய நூலை எழுதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் 20 காசு விலையில் வெளியிட்டார். (இரண்டாம் பதிப்பு 1973 ஜூலையில் வெளி வந்தது – 28 பக்கங்கள்)

(இவருடனான நேரடி பரிசயம் எனக்கு மிகவும் உண்டு. என்னை ‘நாடி ஜோதிடம் பார்க்குமாறு பணித்து அதற்கு ஏற்பாடு செய்தவர் இவரே. இவரை அடிக்கடி சந்தித்து 1968ஆம் ஆண்டு ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி சம்பந்தமாக பல அறிவுரைகளைப் பெறுவதுண்டு. சேலத்தில் நடந்த அந்த பெரிய மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கியவர்களுள் ஒருவர் இவர். இப்போதுள்ள ஆதீனகர்த்தர் இல்லை இவர். அதற்கு முந்தியவர்.)

அதில் அவர் கூறுவதன் சுருக்கம் இது:

‘திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்

  1. உடல் நாற்றத்தைப் போக்கும்
  2. தொத்துநோய்க் கிருமிகளைக் கொல்லும்
  3. தீட்டுக் கழிக்கும்
  4. உடலைச் சுத்தம் செய்யும்
  5. வியாதிகளைப் போக்கும்
  6. பில்லி, சூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்
  7. முகத்திற்கு அழகைத் தரும்
  8. ஞாபகசக்தியை உண்டாக்கும்
  9. புத்திகூர்மையைத் தரும்
  10. ஞானத்தை உண்டாக்கும்
  11. பாவத்தைப் போக்கும்
  12. பரகதியைத் தரும்

மிகச் சுருக்கமாக வேதங்கள், புராண இதிஹாஸங்கள் தரும் நன்மைகளை இப்படிப் பட்டியலிட்டதோடு அவற்றின் விளக்கத்தையும் இந்த நூலில் ஆதீனகர்த்தர் தந்துள்ளார்.

திருநீறு தயாரிக்க மூலப்பொருளாக அமைவது பசுஞ்சாணம். சாணத்திற்குப் பிற நாற்றங்களைப் போக்க வல்ல சக்தி உள்ளதால் விபூதி உடல் நாற்றத்தைப் போக்கும்.

சாணியும் சாணியை பஸ்மம் செய்த சாம்பலும் சிறந்த கிருமி நாசினிகள். ஆகவே விபூதி தொத்துநோய்க் கிருமிகளைக் கொல்லும்.

தீட்டு என்பது தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களிடமும் அல்லது தொற்று நோய் உண்டாகக் கூடிய இடங்களிலும் உள்ள அசுத்தமாகும். ஆக, விபூதி தொற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதால் தீட்டைப் போக்கும்.

 மேலே கண்ட மூன்று வழிகளில் திருநீறு நாற்றத்தைப் போக்கி தொற்றுநோயைப் போக்குவதால் விபூதி சுத்தம் செய்யும். ஆகவே தான் தேவாரத்தில், ‘துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு என்று சம்பந்தப் பெருமான் பாடியருளியிருக்கிறார்.

திருநீற்றைப் பூசி கூன்பாண்டியனின் கடும் சுரத்தைப் போக்கினார் ஞானசம்பந்தர். பல இடங்களிலும் பெரியோர் அளித்த விபூதி பல வியாதிகளைக் குணமாக்குவது கண்கூடு. ஆகவே விபூதி வியாதிகளைப் போக்கும்.

சிவபிரான் விபூதியைத் தரித்திருப்பதாலும் அது புருவ மத்தியை மூடிக் கொள்வதாலும் விபூதி பில்லி சூனியம் கண்ணேறு ஆகியவற்றிலிருந்து அணிபவரைப் பாதுகாக்கும்.

டால்கம் பவுடரை விட விபூதி உடல் நாற்றத்தைப் போக்கி அழகுக்கு மெருகூட்டுகிறது. நீறில்லா நெற்றி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று ஔவை பிராட்டியும் விபூதி அழகைத் தருவதைக் கூறி இருக்கிறார். சம்பந்தரோ, ‘காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு என்று பாடி அருளியிருக்கிறார். (கவின் என்றால் அழகு)

நெற்றியில் ஞாபகசக்தி இருப்பதால் அங்கு விபூதி பூசுவது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

ஞாபகசக்தியோடு புத்திகூர்மையைத் தருவதும் விபூதியே. ஞானசம்பந்தர், ‘மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு என்று பாடி அருளியிருக்கிறார்.

திருநீறைக் கையில் எடுக்கும் போதே ஆடி அடங்கிய  பின் பிடி சாம்பலாகப் போவோம் என்ற பேருண்மை புலப்பட்டுக் கொண்டே இருக்கும். ஞானசம்பந்தர், ‘பராவணம் ஆவது நீறு, பாவம் அறுப்பது நீறு என்று கூறியிருப்பதால் புண்ணியம் தந்து ஞானத்தையும் தருவது விபூதியாகும்.

திருமூலர்,

‘கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வாரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே

என்று திருமந்திரத்தில் கூறி இருப்பதால் வினைகள் அனைத்தும் போய், சிவகதி வரை அனைத்துப் பேறும் தரவல்லது திருநீறே என்பது பெறப்படுகிறது.

கடைசியாக, திருநீற்றுப் பதிகத்தைத் திருநீறு பூசி தினமும் ஓதி அதன் நன்மைகளை மனதிலிருத்துவது பெரும் பேறாகும்.

திருநீற்றுப் பதிகம் கீழே தரப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்



மந்திர மாவது நீறு   வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு   துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு   சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்   திருஆல வாயான் திருநீறே.  1



வேதத்தி லுள்ளது நீறு   வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு   புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு   உண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே.  2



முத்தி தருவது நீறு   முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு   தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு   பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே.  3



காண இனியது நீறு   கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம்   பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு   மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே.  4



பூச இனியது நீறு   புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு   பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு   வந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு   திருஆல வாயான் திருநீறே.  5



அருத்தம தாவது நீறு   அவலம் அறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு   வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு   புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே.  6



எயிலது வட்டது நீறு   விருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு   பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு   சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்   தாலவா யான் திருநீறே.  7



இராவணன் மேலது நீறு   எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு   பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு   தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி   ஆலவா யான்திரு நீறே.  8



மாலொ டயனறி யாத   வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள்    மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும்   இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம்   மாலவா யான்திரு நீறே.  9



குண்டிகைக் கையர்க ளோடு   சாக்கியர் கூட்டமுங்கூட

கண்டிகைப் பிப்பது நீறு   கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார்   ஏத்துந் தகையது நீறு

அண்டத்த வர்பணிந் தேத்தும்   ஆலவா யான்திரு நீறே.  10



ஆற்றல் அடல்விடை யேறும்   ஆலவா யான்திரு

நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும்   பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்னனுடலுற்ற   தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும்   வல்லவர் நல்லவர் தாமே.  11

  
திருநீறு பூசுவோம்; வல்லவர் ஆவோம்; நல்லவர் ஆவோம். வினைகள் ஒழிந்து, சிவகதி பேறைப் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

***

இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறுகிறது

நன்றி : திருஞானசம்பந்தர் மடம், மதுரை

tags- விபூதி, மஹிமை

Leave a comment

Leave a comment