
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9557
Date uploaded in London – – 2 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 2-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
வாத்ஸல்ய ஸஹிதா தேனு: யதா வத்ஸ மனுவ்ரஜேத் |
ததானுகச்சேத் ஸா தேவி ஸ்வபக்தம் சரணாகதம் ||
தன்னைச் சரணாகதி அடைந்தவனை, கன்றை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து போகும் பசு போல வாத்ஸல்யத்துடன் அனுசரித்து தேவி ரக்ஷிக்கிறாள்
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் யோனி பீடமாகத் திகழும் காமாக்யா ஆகும். அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப்படும் காமரூபத்தில் அமைந்துள்ள இது அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலாச்சல் மலையில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில், இந்த மலை மீது அமைந்துள்ள காமாக்யா தேவி ஆலயம் பழம் பெரும் சரித்திரத்தைக் கொண்டது. இதை காளிகா புராணமும் யோகினி தந்த்ரமும் விரிவாக விளக்குகிறது. வேத வியாஸரின் தேவி பாகவதமும் இந்தத் தலத்தைப் பற்றிக் கூறுகிறது. நான்கு ஆதி சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். பழைய காலத்தில் காமரூபம் என்று மிக பிரசித்தமாக இருந்த இது, பூமியின் மிகப் புனிதமான ஸ்தலம் என்று தந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் விக்ரஹம் ஏதும் இல்லை. மாறாக யோனி வடிவத்தில் உள்ள ஒரு பாறை மட்டுமே இங்கு வணங்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு நீரூற்றிலிருந்து தொடர்ந்து நீர் சுரக்கிறது. அதைத் தீர்த்தமாக பக்தர்கள் போற்றுகின்றனர்.
ஒரு மலையின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு பூர்த்தியாகாத படிக்கட்டுகள் உள்ளன. இதைப் பற்றிய புராண வரலாறும் ஒன்று உண்டு. நரகாசுரன் என்னும் அசுரன் தேவியை மணக்க எண்ணினான். அதற்கு தேவி ஒரு நிபந்தனையை விதித்தாள். ஒரே இரவில் தன் கோவிலுக்கு நீலாச்சல் மலையில் படிகள் அமைக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அசுரன் படிக்கட்டுகளை அமைக்கும் போது தேவி காக்கையின் குரலை எழுப்பவே அசுரன் விடிந்து விட்டது என்று எண்ணி படிக்கட்டுகளைப் பூர்த்தியாக்காமல் விட்டுச் சென்றான். ஆகவே பூர்த்தியாகாத படிக்கட்டுகளே இன்றும் உள்ளன.
பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவள் என்பதால் காமாக்கியா தேவி என்ற பெயரை அம்பாள் பெறுகிறாள்.
தச மஹா வித்யா என்று சொல்லப்படும் கமலாத்மிகா, தூமாவதி, தாரா, காளி, திரிபுரசுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, மாதங்கி, பகளாமுகி ஆகிய பத்து தேவியரில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய மூவரின் விக்ரஹங்கள் பிரதான கோவிலில் இருக்க, மீதி ஏழு தேவியருக்கும் தனித் தனி கோவில்கள் அமைந்துள்ளன. தேவி உபாசகர்களுக்கு மிக முக்கிய ஸ்தலமாகத் திகழும் இந்த ஆலயம் தாந்திரீகர்களுக்கு பிரதானமான கேந்திரமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அம்புபச்சி மேளா என்ற திருவிழாவில் பல்லாயிரக்கணக்கில் தாந்திரீகர்களும் பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
காமாக்யா தேவியை பாண்டவர்கள் வழிபட்டதை மஹாபாரதம் கூறுகிறது. பீஷ்மபர்வத்தில் அர்ஜுனனும் யுதிஷ்டிரரும் காமாக்யா தேவியைப் பிரார்த்தித்ததைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.

பல்வேறு காலங்களில் படையெடுப்புகளால் கோவில் தகர்க்கப்பட்டாலும் கூட, அவ்வப்பொழுது ஆண்ட அனைத்து மன்னர்களும் ஆலயத்தைப் புதுப்பித்து வந்ததை வரலாறு விவரித்துக் கூறுகிறது.
காமாக்யா ஆலயத்தின் கீழே முன்னூறு அடி தூரத்தில் பைரவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. 1971இல் ஸ்ரீ ராமகாந்த தேவ் சர்மா என்பவர் பைரவருக்கு ஒரு கோவிலை எழுப்பினார். அதற்கு அருகே அவர் கூர்மப்ரிஷ்த சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இது ஒரு அபூர்வமான வகை ஸ்ரீ சக்ரமாகும். தேவிக்கே உரித்தான ஸ்ரீ சக்ரம் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ காமாக்யா தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
கங்கா பவானி காயத்ரீ ஸ காளீ லக்ஷ்மீ ஸரஸ்வதி ராஜராஜேஸ்வரி பாலா ச்யாமளா லலிதா தச: || தஸ்மாத் ஸங்கீர்த்தயேன் நித்யம் கலி தோஷ நிவ்ருத்தயே
நன்றி, வணக்கம்!


tags- காமாக்யா தேவி, ஆலயம்