அருள்வாயே! – 6 (Post No.11,507)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,507

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! – 6

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

46) திருத்தணிகை

    வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்

      அமையு மெனக்கிட முனது பதச்சரண்

        மருவு திருப்புக ழருள எனக்கினி   யருள்வாயே

பாடல் எண் 263 –   ‘குருவி என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப் பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். ஆகவே அந்தத் திருவடியைச் சேருதற்குரிய திருப்புகழ்ப் பாக்களை நான் பாட எனக்குத் தந்தருள்வாயாக!

47) திருத்தணிகை

    பொருள் தீரில்

  ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்

     பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட

       ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே

பாடல் எண் 266 –   ‘கூந்தல் அவிழ்த்து’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கையில் கொடுப்பதற்குப் பொருள் தீர்ந்து போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்களான பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே! எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்வாயாக!

48) திருத்தணிகை

   கனத்த தத்துவமுற் றழியாமற்

     கதித்த நித்தியசித் தருள்வாயே 

பாடல் எண் 278 –   ‘நினைத்தது எத்தனை’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்த நிலையை நீ அருள்வாயாக.

49) திருத்தணிகை

   பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்

      குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே 

பாடல் எண் 280 –   ‘பருத்தபற் சிரத்தினை’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கட்டுப்பட்ட இந்த நோய்ப் பையை, வாழும் போது தாங்குவதும், சாவில் ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்தருள்வாயாக!

50) திருத்தணிகை

   ஆரணத் துக்க ணத்து னான்மலர்ப் பொற்ப தத்தை

     யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே

பாடல் எண் 283 –   ‘பூசலிட்டு’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள்வாயாக!

51) திருத்தணிகை

 கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் 

  கழற்புணை நீதந் தருள்வாயே

பாடல் எண் 284 –   ‘பெருக்க உபாயம்’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (ஆசை, பிறவி, நூல் ஆகிய) கடல்களைக் கடக்க, கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள்வாயாக!

52) திருத்தணிகை

    அற்பர மட்டைகள் பால்சென்

றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை

  அற்றிட வைத் தருள்வாயே

பாடல் எண் 287 –   ‘பொற்குடம் ஒத்த’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  அற்பர்கள், அந்தப் பயனற்றவர்களாகிய பொதுமகளிரிடம் போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செது அருள்வாயாக!

53) திருத்தணிகை

    பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன

        பதத்து மலரினை யருள்வாயே

பாடல் எண் 293 –   ‘முடித்த’குழலினர்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே

வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்தருள்வாயாக!

54) திருத்தணிகை

அவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட  

   உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே

பாடல் எண் 299 –   ‘வரிக்கலையின்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  ஒருவருடன் பகை, வேறு ஒருவரிடம் விருப்பம் என அவர்களோடு  சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தைத் தந்தருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

Leave a comment

Leave a comment