
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,951
Date uploaded in London – 30 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஃப்யூஸ் போன பல்புகள்!
ச.நாகராஜன்
அவர் ஒரு மூத்த அரசு அதிகாரி. பணி ஓய்வு பெற்று விட்டார்.
ஆடம்பரமான அரசு சொகுசு பங்களாவிலிருந்து அவர் முன்பே வாங்கி வைத்திருந்த இந்த ஹவுஸிங் சொசைடி ஃப்ளாட்டுக்கு – குடியிருப்பு சங்க அடுக்குமாடி வீட்டிற்கு – வந்து விட்டார்.
தன்னை அவர் ஒரு பெரிய ஆளாக நினைத்திருந்ததால் யாருடனும் பேச மாட்டார்.
குடியிருப்பு பூங்காவில் காலையிலும் மாலையிலும் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது கூட கம்பீரமாகத் தனியே தான் நடப்பார்.
யாருடனும் பேசமாட்டார்.
அங்கிருக்கும் மேடைகளில் தனி இடத்தில் உட்காருவார்.
ஒரு நாள் தற்செயலாக அவர் பக்கத்தில் இன்னொருவர் வந்து உட்கார நேர்ந்தது. வந்தவர் பேச ஆரம்பித்தார்.
ஆனால் அவர் தான் பேசிக் கொண்டிருந்தார். அந்த கம்பீரமான அரசு அதிகாரியோ ஒரு வார்த்தை அல்லது இருவார்த்தைகள் தான் கூறுவார். “நான் எவ்வளவு பெரிய ஆள்; இந்த இடத்திற்கு ஓய்வு பெற்றதால் அல்லவா வந்தேன்” என்ற அவரது நினைப்பு அவரது நடை உடை பாவனைகளில் தொக்கி நிற்கும்.
அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேச ஆரம்பித்தால் அதை வந்த அந்த நண்பர் கேட்பார்; உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்பார்.
சில நாட்கள் அவர்கள் உட்கார்ந்து பேசுவது வழக்கமானது.
ஒரு நாள் அந்த அரசு அதிகாரி சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, “அவர் யார்?” என்று கேட்டார்.
அதற்கு அவரது தற்காலிக நண்பர் பதிலளித்தார் : “ பணி ஓய்வுக்குப் பின்னர் நாம் ப்ஃயூஸ் போன பல்புகள் போலத் தான். எவ்வளவு அதிகமான வாட் இருந்தாலும் ப்யூஸ் போனது போனது தான். அதில் வித்தியாசமே இல்லை. நாந் இந்த காலனியில் ஐந்து வருடமாக வசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எவரிடமும் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன் என்று சொன்னதே இல்லை. இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இதோ இப்போது தான் முதல் தடவையாக உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.
நமது அரசு அதிகாரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. எம்.பி.யா? அவரிடமா தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறோம்?

எம்பி தொடர்ந்தார். “ உங்கள் வலது பக்கம் போய்க் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் வர்மா. இந்திய ரயில்வேயில் ஜெனரல் மானேஜராகப் பதவி வகித்தவர்.”
நமது அரசு அதிகாரி அரண்டு போனார். ரயில்வேயின் ஜி.எம். மா?
எம் பி தொடர்ந்தார். “அதோ இருக்கிறாரே, சிங் சாஹப், அவர் நமது ஆர்மியில் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.”
அரசு அதிகாரிக்குத் தலை சுற்றியது.
“இதோ, இந்தப் பக்கம் போகிறாரே, இவர் தான் இஸ்ரோவின் தலைவராக இருந்தவர். யாரிடமும் அதை இவர் சொன்னதில்லை. ஆனால் எனக்குத் தெரியும்”
எம்பி தொடர்ந்தார்.
“எந்த வாட் இருந்தாலும் 10லிருந்து நூறு வரை எதாக இருந்தாலும் சரி இப்ப்போது அது எவ்வளவு என்பது முக்கியம் இல்லை. எல் டி- யா அல்லது சிஎஃப் எல்- லா ஹாலோஜனா அல்லது இன்காண்டஸ்சென்டா. ஃப்ளோரெஸெண்டா, டெகோரேடிவா- எதுவும் முக்கியமில்லை. நண்பரே, இந்த விதி உமக்கும் பொருந்தும், சரி தானே?”
அர்சு அதிகாரிக்கு சற்றுப் புரிந்தது. அவர் விழித்துக் கொள்ள ஆரம்பித்தார்.
சூரியன் உதிக்கிறான், மறைகிறான். உதயத்தில் உதயமாகும் சூரியனைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அதே போல மறைவதையும் பார்க்கிறோம்.
ஆனால் உதய சூரியனைப் பார்க்கும் அதே சந்தோஷம், உத்வேகம் அதை மறைவதைப் பார்க்கும் போது ஏற்படுவதில்லை.
சதுரங்க விளையாட்டு முடிந்த போது அரசனோ அரசியோ, அல்லது பான் – ஓ எதாக இருந்தாலும் அவற்றைச் சதுரங்கப் பெட்டிக்குள் போட வேண்டியது தான்!
ஆங்கிலத்தில் உள்ள மேற்படி கட்டுரையின் மூலத்தை (13-12-2022) சமூக ஊடகத்திலிருந்து எடுத்து டாக்டர் சுபிர் சௌத்ரி கொல்கத்தா ‘ட்ரூத்’ வார இதழ் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தன் குறிப்பையும் சேர்த்துள்ளார் இப்படி:-
நாம் ஃப்யூஸ் போன பல்புகள் இல்லை. ஆனால் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். பேரண்ட ப்ரக்ஞையுடன் தொடர்பு கொண்டு அதன் ஒளியைப் பெறுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. ஹரி ஓம்.”
உண்மை தான், தற்காலிக இணைப்புத் துண்டிப்பிற்காக அலட்டிக் கொள்ளாமல் இன்னும் அதிக ஒளியை உலகிற்கு முடிந்த வரை தர உரிய இணைப்பைப் பெறலாம்; காலமும் நிறைய இருக்கும்.
***
ஆதாரம், நன்றி “ TRUTH KOLKATA WEEKLY 30-12-2022 Vol 90 N0 36