விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 1 (Post no.12,111)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,111

Date uploaded in London –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 1

ச.நாகராஜன்

சிதம்பரம் வந்த இயற்பியல் விஞ்ஞானி!

உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான கார்ல் சகன் (பிறப்பு 9-11-1934 மறைவு 20-12-1998) நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார் என்றால் ஆச்சரியமாக இல்லை?

மிகப்பெரும் எழுத்தாளர். தொலைக்காட்சித் தொடர் படைப்பாளி. செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த விஞ்ஞானி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தனது விண்கலங்களை சுக்ரன், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அனுப்ப பெரிதும் உதவி செய்தவர் – இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகின் மிகப் பிரபலமான, ஏராளமானோர் பார்த்த, தொலைக்காட்சித் தொடரான காஸ்மாஸ் (Cosmos) தொடரை உருவாக்கியவர் அவரே. பதிமூன்று எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி அவர் சுவைபட விளக்கியாக வேண்டும்.

இதை நல்ல ஒரு அறிமுக உரையுடன் தொடங்க அவர் எண்ணினார். இதற்காகப் பிரபஞ்சம் பற்றிய அறிவை உலகின் எந்த பழைய நாகரிகம் நவீன அறிவியலுக்கு ஒப்ப சரியாகக் கொண்டுள்ளது என்பதை ஆராய ஆரம்பித்தார் அவர்.

எகிப்திய, சுமேரிய, அஸிரிய, கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்களை அவர் ஆராய்ந்தார். அவருக்கு திருப்தி உண்டாகவில்லை. கடைசியில் ஹிந்து நாகரிகத்தின் பக்கம் அவர் பார்வை திரும்பியது. வியந்து பிரமித்தார் அவர்.

அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதை ஹிந்து புராணங்கள் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்த அவர், “உலகின் மிகப் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே தான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சமானது, உருவாகி, பிரளய காலத்தில் அழிந்து மீண்டும் உருவாகிறது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இது தான். பூமி, சூரியன் வயதையும் தாண்டி ‘பிக் பேங்’ தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி. மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது.” என்று கூறிப் புகழ்ந்தார்.

‘பிரபஞ்சத்தின் இயக்கத்தை சிவ நடராஜாவின் நடனம் சுட்டிக் காட்டுகிறது. சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்’ என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார். நடராஜரைத் தரிசித்தார்.

தனது காஸ்மாஸ் தொடரில் நடராஜரை தனது பத்தாவது எபிசோடான ‘தி எட்ஜ் ஃபார் எவர்’ (The Edge for ever)-இல் காண்பித்து பிரபஞ்சம் பற்றி விளக்கினார்.

காமராமேன், சவுண்ட் ரிகார்ட் செய்வோர், எழுத்தாளர்கள், டைரக்டர் புடைசூழ அவர் சிதம்பரத்திற்கு ஒரு நாள் காலை ஆறு மணிக்கு வந்த போது உலகத்தின் பார்வை சிதம்பரம் பக்கம் திரும்பியது.

அப்போது அந்தப் பயணத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரது மனைவி தாமரைக்குளம் ஒன்றைப் பார்த்து வியந்து பிரமித்தார். அதைப் பார்த்த ஒரு குட்டிப் பையன் தாமரைக் குளத்தில் சரேலென குதித்தான். அனைவரும் பயந்து போனார்கள். ஆனால் அவனோ குளத்தில் நீந்திச் சென்று ஒரு அழகிய தாமரையைப் பறித்து  வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தரவே அவர் மிகவும் நெகிழ்ந்து போனார்.

இதை நியூ டைஜெஸ்ட் பத்திரிகை ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி. சௌஸாவிற்குக் கொடுத்த பேட்டியில் சொல்லி இந்திய பாரம்பரியத்தில் தான் கண்ட சிறப்புக்களைக் கூறி வியந்தார் கார்ல் சகன்!

பிரிட்ஜாஃப் காப்ரா விவரிக்கும் அணுத்துகள் நடனம்!

இதே கால கட்டத்தில் பிரபல விஞ்ஞானியான பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனம் பற்றி அறிந்து வியந்தார். ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான இவர் தனது மிக பிரபலமான நூலான ‘தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ என்ற நூலை 1975ஆம் ஆண்டு வெளியிட்டார். உலகில் இருபத்திமூன்று மொழிகளில் சுமார் 43 பதிப்புகளை உடனே கண்டது இந்தப் புத்தகம். அவர் அணுவின் அசைவை நடராஜரின் நடனத்தில் கண்டார். அணுத்துகளின் விஞ்ஞானத்தைக் கற்க விரும்புவோர் முதலில் நடராஜரைப் பற்றி அறிய வேண்டும் என்றார் அவர்!

1977, அக்டோபர் 29ஆம் தேதி நடந்த ‘பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ்’ என்ற கருத்தரங்கத்தில் பேசும் போது, “நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இதையே இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனமாக அருமையான ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைத்துள்ளனர்” என்று கூறினார்.

கடவுள் துகளைப் (God Particle) பற்றி ஆராயும் உலகின் மிகப்பெரும் சோதனைச்சாலையான செர்ன் (CERN) ஜெனிவாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையைப் பரிசாக அளிக்க அதை செர்ன் தனது முகப்பில் நிறுவியுள்ளது.

ஓம் தரும் அளப்பற்ற நன்மைகளைக் கண்டவர்

ஓம் என்னும் மந்திரச் சொல் உடலில் ஏற்படுத்தும் அளப்பரிய அதிசயங்களை ஆராய்ந்தவர் அமராவதியில் உள்ள சிப்ளா காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர். அந்தக் கல்லூரியின் முதல்வரான சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இவர் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சிக்கான காரணம்? 1999 மே மாதம் 29ஆம் தேதி திடீரென்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்குக் கோமா நிலை ஏற்பட்டது.

இதைப் போக்க ஓம் பற்றிய ஆராய்ச்சியில் அனில் இறங்கினார். ஒம் என உச்சரிக்கும் போது மூளையில்ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதை அவர் நவீன சாதனங்கள் வாயிலாகக் குறிக்க ஆரம்பித்தார்.  நரம்பு மண்டலத்தில் ஓம் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதை அவர் கண்டு அதிசயித்தார். ஓம் என்று நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.

‘அ’ என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ‘உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

அனிலின் தாயார் ஓம் மந்திரத்தை படிப்படியாக உச்சரிக்க ஆரம்பித்தார். விளைவு, 90 சதவிகிதம் பேசும் ஆற்றல் பழையபடி வந்து விட்டது.

இந்த ஆராய்ச்சி ஆறு வருட காலம் 25 முதல் 40 வயது வரை உள்ள  ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட குழுவிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

1) ஓம் உச்சரிப்பால் மன அழுத்தம் குறைகிறது

2) எதன் மீதும் செய்யும் ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனக் குவிப்பு அதிகரிக்கிறது.

3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க  மாறுதலை ஏற்படுத்துகிறது.

இப்படி விரிவாக டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளைப் பயன்படுத்தி தனது முடிவுகளை உலகத்திற்கு அறிவித்தார் அனில்.

                                           -தொடரும்

Leave a comment

Leave a comment