
Post No. 12,135
Date uploaded in London – 15 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிஞர்களின் மூட நம்பிக்கைகள்! – 1
ச.நாகராஜன்

மூட நம்பிக்கைகள் எல்லா தேசத்திலும் எல்லா மதத்திலும் எல்லா இனத்திலும் உண்டு.
பெரும் அறிஞர்கள் கூட காரணம் சொல்ல முடியாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத சில நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர்.
ஹிந்துக்களைப் பற்றிப் பலரும் இழிவாகச் சொல்வதுண்டு.
ஹிந்துக்களின் சில நம்பிக்கைகள் இவை :
கருடன் பெயரை உரக்கக் கூவினால் பாம்புகள் விலகி விடும்.
திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமையில் ஆரம்பிக்கும் காலரா மோசமாகப் பாதிக்கும். ஆனால் வியாழக்கிழமையில் ஆரம்பிக்கும் காலரா அவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது.
ராம ராம என்று சொன்னால் பேய் பிசாசுகள் விலகி விடும்.
மூங்கில் பூத்த்தால் பஞ்சம் வரும்.
விசிறும் போது விசிறி உடலின் மீது பட்டால் அதை மூன்று முறை தரையில் தட்ட வேண்டும்.
தானம் செய்யும் போது வாங்குபவரும் கொடுப்பவரும் வாயில் படியில் படியைத் தாண்டி அந்தப்பக்கம் ஒருவரும் இந்தப்பக்கம் ஒருவருமாக நிற்கக் கூடாது. இருவரும் படியைத் தாண்டி ஒரு பக்கமாகவே இருத்தல் வேண்டும்.
நகத்தால் பல்லை நோண்டக் கூடாது.
பாம்பு கொல்லப்பட்டால் அது எரிக்கப்பட வேண்டும்.
இரவில் பாம்பு, புலி என்ற வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்குப் பதிலாக கொடி என்றும் பூச்சி என்றும் சங்கேதப் பெயர்களால் சொல்ல வேண்டும்.
தூங்குகின்ற வைத்தியரை ஒரு போதும் எழுப்பக் கூடாது.
அதிகாலையில் கண்ட கனவு நிச்சயமாகப் பலிக்கும்.
வெள்ளை முகத்தோடு உள்ள கறுப்பு நிற பூனை மிகவும் நல்ல சகுனமாகும்.
பேயை விரட்ட இரும்பு ஒரு தாயத்து போல!
இப்படி ஹிந்துக்களின் மூட நம்பிக்கைகளைப் பட்டியலிட்டுச் சொல்வோர் தங்கள் இனம், தேசம், மதம் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
மேலை நாட்டைச் சேர்ந்த பிரபலமானவர்கள் சிலரது நம்பிக்கைகளைப் பார்ப்போம்.
மெக்காலே தளவரிசைக்காகப் போட்ட கற்களின் மீதும் பாவுகல்லின் மீதும் ஒருபோதும் காலை வைக்க மாட்டார். சில கற்களை அவர் நன்கு அடையாளம் பார்த்து வைத்துக் கொள்வார். அதில் ஒரு போதும் காலை வைக்க மாட்டார்,
மாக்ஸ்முல்லர் தன் பையில் எப்போதும் ஓட்டை உள்ள ஒரு நாணயத்தை வைத்திருப்பார்.
சார்லஸ் டிக்கன்ஸ் இரவு நேரத்தில் வெளியே போகும்போது ஒரு காம்பஸை நிச்சயம் எடுத்துக் கொண்டு செல்வார். இதை வைத்துத் தான் படுக்கும் போது படுக்கையை வடக்கு-தெற்காகப் போட்டுக் கொள்வார்.
பிஸ்மார்க் நம்பர்கள் பற்றி அலாதியான அக்கறையைக் காட்டுவார். 13 என்ற எண்ணை எப்போதும் ஒதுக்கி விடுவார். அவருக்கான அதிர்ஷ்ட நம்பர் 3. ஏனெனில் அவர் மூன்று சக்கரவர்த்திகளிடம் முக்கிய மந்திரி பதவியை வகித்தார்.
லார்ட் ராபர்ட்ஸுக்கு (Lord Roberts) பூனை என்றாலே பயம். ஒரு குதிரைலாடத்திற்கு அவர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வைத்துக் கொண்டார். அது நெல்ஸன் மான்யுமெண்ட் மற்றும் ட்ரபால்கர் ஸ்குயரின் அருகே அவருக்குக் கிடைத்த ஒன்று.

நெப்போலியனுக்கு வருவதைப் பற்றிய முன்னுணர்வு உண்டு. தனது முன்னுணர்வு ஒரு போதும் பொய்க்காது; பொய்த்ததில்லை என்பது அவனது நம்பிக்கை. எகிப்திலிருந்து முக்கியமான செய்தி ஒன்றுக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது நைல் நதிப் படகு ஒன்று கரையில் மோதிக் தரைதட்டிவிட்டதாகக் கேள்விப்பட்டான். ‘I’ என்ற பெயருடன் அந்தப் படகு இருந்தது. இத்தாலியைத் தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதில் நெப்போலியன் குறியாக இருந்தான். இந்த ‘I’ என்ற பெயருடன் உள்ள படகு கரையில் மோதி விட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே தனது எண்ணம் நிறைவேறாது என்பதை அவன் உணர்ந்து விட்டான்.
தான் நடக்கப்போவதை முன்னாலேயே உணர்வதாக அவன் நிச்சயமாக நம்பினான். அதற்கு மாறாக யார் எது சொன்னாலும் அதை அவன் ஏற்கமாட்டான்.
இத்தாலி பிரான்ஸுடன் சேரவே இல்லை என்பது தான் உண்மை. அவனது முன்னுணர்வே பலித்தது.
*** தொடரும்