
Post No. 12,153
Date uploaded in London – – 19 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.எல்லார்க்கும் இன்பம் என்று சொன்னவர் யார் ?
2. ‘கொள்ள மாலா இன்ப வெள்ளம்’ என்று செப்பிய ஆழ்வார் யார் ?
3.’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ — என்று பாடியவர் யார் ?
4.’ஆராத இன்பம் அருளும் மலை’ — என்று சிவபெருமானைப் பாடியவர் யார் ?
5.’இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ – என்று அடித்துக்கூறியவர் யார் ?
6.’லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து’ என்ற கருத்தை தாயுமானவர் எப்படிச் சொல்கிறார்?
7.’உலகு இன்பக் கேணி’ — என்று பாடிய புலவர் யார்?
8.உலகம் முழுதும் இன்பம் உறுக/ லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து — என்று எந்தப் பாடலைப் பாடி பாரதியார் கதையை முடிக்கிறார் ?
9.வள்ளுவர் திருக்குறளில் இன்பம் என்ற சொல்லை எவ்வளவு முறை பயன் படுத்துகிறார் ?
10. இன்பம் என்றால் என்னவென்று திரைப்பம் ஒன்றில் மருதகாசி கொடுத்த இலக்கணம் என்னவோ ?
XXXXX

விடைகள்
1.தொல்காப்பியர்
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)
XXXXX
2.நம்மாழ்வார்
3181 கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே –திவ்வியப் பிரபந்தம்
XXXXX
3. திருமூலர்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே—திருமந்திரம்
XXXX
4.மாணிக்க வாசகர்
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி– (சிவபுராணம்), திருவாசகம்
XXXXX
5.திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரத்தில் சொல்கிறார்
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.– அப்பர் தேவாரம்
XXXX
6.தாயுமானவர் பாடலில் வரும் வரிகள்
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
(பராபரக்கண்ணி – 221)– தாயுமானவர்.
XXXXX
7.ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக்கேணியென்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
தேவி தன் திருக்கை (பாரதியார்)
XXXX
8.பாஞ்சாலி சபதம் கவிதை நூலை பாரதியார் இப்படி முடிக்கிறார்
சாமி தருமன் புவிக்கே- என்று
சாட்சி யுரைத்தன பூதங்களைந்தும் !
நாமும் கதையை முடித்தோம் — இந்த
நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க
XXXXX
9. குறைந்தது 29 இடங்களில் திருவள்ளுவர் திருக்குறளில் இன்பம், இன்புறுவது என்ற சொற்கள் வருகின்றன . இதோ சில குறள் வரிகள் –
‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)
‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)
‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)
‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)
‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)
XXXX
10.இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே – மருதகாசி
(திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)
—SUBHAM—-
Tags- இன்பம், மருதகாசி , திருவள்ளுவர், இன்பமே எந்நாளும், பாரதியார், எல்லோரும் இன்புற்று, யான் பெற்ற இன்பம் பெறுக