
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,161
Date uploaded in London – 21 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx

21-6-23 யோகா தினத்தையொட்டி 20-6-23 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
அறிவியல் வியக்கும் யோகா! – முதல் பகுதி
ச.நாகராஜன்
அகில உலக யோகா தினம்
உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் நாள் யோகா தினமாக 2015ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
2014ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றும் போது ஜூன் 21ஆம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில் நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21ஐ யோகா தினமாகக் கொண்டாடப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யோக சூத்திரம்
பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று.
இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகி விட்டது.
இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி.
யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி

உலகெங்கும் உள்ள சோதனைச்சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.
மஹராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்ட போது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் க்ளாட் வேட் (British Feneral Sir Claude Wade) ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.
1986ஆம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் ப்ரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது.
‘தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்ஸிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது; ஆகவே இது சாத்தியமாகிறது’ என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர்.
1927ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த – மிதக்கும் – ‘லெவிடேஷன்’ சக்தி இது என்று அவர் கூறிய போது அனைவரும் வியந்தனர்.
யோகம் தரும் பயன்கள்
தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை.
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும்.
நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.
சில பயன்களின் பட்டியல் இதோ:
1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.
3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஒய்வை உறுதி செய்கிறது.
4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது இலட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.
5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.
6) அகங்காரத்தை நீக்குகிறது.
7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.
8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.
9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கான்ஸர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.
10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகஸச் செயல்களைச் செய்ய முடியும்.
11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.
12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.
13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.
14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.
15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.
16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.
17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.
18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.
19) இதற்கு வயது வரம்பு கிடையாது.
20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.
21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.
23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.
24) மனதைப் பண்படுத்தி உயரலாம்.
25) உடலை மேம்படுத்தலாம்.
26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.
27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.
28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.
29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.
30) கெட்ட கனவுகள் அகலும்.
31) இரவில் நல்ல தூக்கம் வரும்.
32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.
33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.
34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.
35) வெட்கம் அகலும்.
36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்,- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.
*** தொடரும்