
Post No. 12,196
Date uploaded in London – 28 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
24-6-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
வண்ணங்களின் பெருமை
வண்ணங்கள் வாழ்க்கை முழுவதும் நெருங்கிப் பரவி இருப்பதை நாம் நன்கு அறிவோம்.
வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் மனம் திடுக்கிடும்.
வாசலில் வண்ணமிகு கோலம் வரவேற்காது. பெண்கள் மற்றும் ஆண்களின் உடைகள் மனதைக் கவரும் வண்ணத்தில் இருக்காது.
வண்ணத்தில் ஜொலிக்கும் தீபாவளியும், ஹோலி பண்டிகையும், கிறிஸ்துமஸும் பொலிவிழந்து இருக்கும். வண்ணச் சிற்பங்கள், சித்திரங்கள், வண்ணத் திரைப்படங்கள் இருக்காது!
வாழ்க்கையே சலிப்புத் தட்டி விடும்.
நமது முன்னோர்கள் இதை உணர்ந்து தான் வண்ணங்களின் பெருமையை நமக்கு எல்லாவற்றின் மூலமாகவும் விளக்கி வந்துள்ளனர்.
ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு வடிவம், அமைப்பு என்பதோடு இன்ன வண்ணமும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள நிறத்தை நரசிம்ம புராணம் விளக்குகிறது.
வண்ணம், வடிவம், அமைப்பு (Colour, Shape, Form) இந்த மூன்றிற்கும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்தத் தொடர்பை உணர்ந்து நமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொண்டோமானால் வெற்றி தான் பெறுவோம்.
அறிவியல் ஆய்வில் வண்ணங்கள்
வண்ணங்களைப் பற்றி அறிவியல் நெடுங்காலமாக ஆராய்ந்து வந்துள்ளது.
சாலைச் சந்திப்புகளில் ஏன் சிவப்பு விளக்கு நிற்கவும் பச்சை விளக்கு போவதற்கான அனுமதி தரவும் நிறுவப்பட்டிருக்கிறது?
அறிவியல் சோதனை இந்த வண்ணங்களை வைத்து நடத்தப்பட்டது.
சோதனைக்கு உட்பட்டோரின் கண்களைக் கட்டி விட்டு அவர்களுக்கு இரு புறமும் சமதூரத்தில் சிவப்பு வண்ண அட்டை ஒரு புறமும் பச்சை வண்ண அட்டை மறு புறமும் வைக்கப்பட்டன.
தங்களது உள்ளுணர்வு சக்தி மூலம் சோதனைக்கு உட்பட்டோர் எந்த அட்டை அருகில் இருக்கிறது என்று கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
வண்ண அட்டைகள் இரண்டுமே சம தூரத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும் சிவப்பு அட்டை அருகில் இருப்பதாகவும் பச்சை அட்டை தூரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆகவே தான் உடனே நிற்க உத்தரவிட சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.
இன்னொரு சோதனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டோர் ஒரு குளிர் அறையில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் அருகில் ஒரு பட்டன் வைக்கப்பட்டது.
அறையின் உஷ்ணநிலை அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் உடலுக்கு இதமான உஷ்ணநிலை வந்தவுடன் பட்டனை அமுக்கி வெப்பம் அதிகரிப்பதை நிறுத்துமாறு கூறப்பட்டது.
வெவ்வேறு சோதனையில் வெவ்வேறு வண்ணம் சோதனை அறையில் பூசப்பட்டது.
சோதனை முடிவில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணம் பூசப்பட்ட அறையில் மனதிற்கு இதமான உஷ்ணம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. இது நீல நிற வண்ணம் பூசப்பட்ட அறையை விட 15 டிகிரி செல்ஸியஸ் முன்பாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னொரு உளவியல் சோதனையில் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றைச் சாதாரண வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் சிவப்பு வண்ண ஒளியில் பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது தெரிய வந்தது.
சிவப்பு வண்ணத்தில் நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தன!
இந்த சோதனைகள் அனைத்தையும் நடத்தியவர் புடாபெஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்டல் நெமிஸிஸ் என்பவர்.
இதே போல வண்ணங்கள் குறித்த சோதனைகளை மேற்கொண்ட பில்டன், ராபர்ட் மெட்ஸ்கார், ஜோ ரெஜெரேர் ஆகிய விஞ்ஞானிகளும் வண்ணங்கள் பற்றிய தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர். இவை அனைத்துமே வண்ணங்கள் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிக்கின்றன; மாற்றுகின்றன என்பதைப் புரிய வைத்தது.
உளவியலில் வண்ணம்
மிகவும் பிரபலமான விஞ்ஞானியான கார்ல் ஜங் தன்னிடம் வந்த நோயாளிகள் அனைவரையும் வண்ணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுரை கூறுவார். ஏனெனில் அவர்களின் உள்ளார்ந்த உளவியல் அடிப்படையில் அவர்களைப் பற்றிய பல தகவல்களை அந்த வண்ணங்கள் தருமாம். ஒருவரின் ஆளுமையையும் குணாதிசயங்களையும் அவர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் வண்ணங்கள் தெளிவாகக் காட்டும்.
உள்ளுக்குள்ளேயே எதையும் வைத்திருக்கும் மனப்பாங்கு கொண்டவர் நீலத்தைத் தேர்ந்தெடுப்பார். வெளிப்படையாக எதையும் பேசும் ஒருவர் சிவப்பைத் தேர்ந்தெடுப்பார்.
நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் உள்ள நிறங்கள் உங்களைப் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. அது அந்தச் சமயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் உணர்வுகளையும் சுட்டிக் காட்டுகிறது,
வண்ண மயமான மார்கெடிங்
இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பாக்கிங்கிலும் விளம்பரங்களிலும் வண்ண ஆராய்ச்சி முடிவுகள் தந்த அறிவுரைகளைப் பின்பற்றி வருகின்றன. வாடிக்கையாளர்களை வண்ணங்கள் ஊக்குவித்து தயாரிப்புகளை வாங்க வைத்து விற்பனையை அதிகரிக்க வைக்குமாம்!
அதே போல பிரபலமான உணவு விடுதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணம் அடித்திருப்பதைப் பார்க்கலாம். அது பசி உணர்வைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். வாடிக்கையாளர் வேகமாகச் செயல்பட்டு உணவை முடித்துக் கொண்டு அவர்களை உடனே வெளியே போகவும் வைக்குமாம்.
உலகப் பெரும் உணவு நிறுவனமான மக்டொனால்டின் அடையாளச் சின்னம் சிவப்பு நிற பின்னணியில் மஞ்சள் நிற எழுத்தைக் கொண்டிருப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு அறை அதன் அளவை விட மிகச் சிறியதாகத் தோற்றம் அளிக்கிறது! ஆனால் நீல நிற அறையோ அதன் அளவை விடப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது.
நீல நிறத்தை மேற்புறம் கொண்ட ஒரு அறை மன சாந்தியைத் தரும். ஆகவே நோயாளிகள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற வண்ணம் இதுவே.
நீலம், பச்சை, இளஞ்சிவப்பு அடிக்கப்பட்ட அறைகள் பச்சிளங் குழந்தைகளுக்கு உகந்தவை.
· தொடரும்