
Post No. 12,222
Date uploaded in London – 4 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.
அஞ்சலிக் கட்டுரை
சுவாமி விவேகானந்தர் தன்னைப் பற்றிக் கூறியவை!
ச.நாகராஜன்
கீதையும் கங்கா ஜலமும்!
ஹிந்துக்கள் ரங்கூன், ஜாவா, ஹாங்காங், மடகாஸ்கர், சூயஸ், ஏடன், மால்டா போன்ற வெளி நாடுகளுக்குச் செல்கின்றனர்.
தம்மோடு அவர்கள் கங்கா ஜலத்தையும் கீதையையும் எடுத்துச் செல்கின்றனர்.
கீதையும் புனிதமன கங்கா ஜலமும் ஹிந்துகளின் ஹிந்துத்வத்தைக் கொண்டிருக்கிறது.
சென்ற முறை நான் மேலை நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது, இது தேவையாக இருக்கும் என்று அஞ்சி, சிறிது கங்கா ஜலத்தை நான் எடுத்துக் கொண்டு சென்றேன்.
எப்போதெல்லாம் வாய்ப்பு வந்ததோ அப்போதெல்லாம் கங்கா ஜலத்தில் சில துளிகளை அருந்தினேன்.
அப்போதெல்லாம் அந்தக் குழப்பமான சூழ்நிலையில் என் உள்ளம் அமைதியை அடைந்தது.
மதராஸ் மற்றும் கல்கத்தா மையங்கள்!
கல்கத்தா ஆலம்பஜார் மடத்தில் – 25 பிப்ரவரி 1897 அன்று பேசியது
நான் இப்போது இரண்டு மையங்களை ஆரம்பிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஒன்று மதராஸில். இன்னொன்று கல்கத்தாவில்.
பொறாமை கொண்ட இரக்கமற்ற மனிதர்களால் இந்த நாடு நிரம்பியுள்ளது. அவர்கள் எனது பணியைத் தூள்தூளாக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்.
ஆனால், உங்களுக்கெல்லாம் தெரியும், எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க என்னுள் இருக்கும் பிசாசு இன்னும் அதிகமாக எழுப்பப்படுகிறான்.
இந்த இரண்டு இடங்களிலும் மையங்களை ஆரம்பிக்காமல் நான் இறந்து விட்டால் எனது கடமை முடிந்ததாக ஆகாது.
ஒரு ஆச்சரியகரமான சக்தி உருவானது
நான் அமெரிக்காவில் இருந்தபோது எனக்குள் ஆச்சரியகரமான சக்தி உருவாகி இருந்தது. பார்ப்பவர்களின் கண்களைப் பார்த்தவுடனேயே அவர்கள் மனதின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. உள்ளங்கை நெல்லிக்கனி போல ஒவ்வொருவரின் மனமும் எப்படி வேலை செய்கிறது என்பதை நான் அறிந்தேன். சிலருக்கு இதைத் தருவேன், இன்னும் சிலருக்கு இவற்றைச் சொல்லுவேன். பலரும் எனது சீடர்களாக ஆவர். ஆனால் சில தவறான உள்நோக்கத்துடன் வருபவர்களோ இந்த எனது சக்தியினால் எனது முன்னால் இனிமேல் வரவே முடியாத நிலை ஏற்பட்டது.
கல்வி இல்லாததே காரணம்
ஐரோப்பாவின் பல நகரங்களில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர்களது வசதியையும் , ஏழ்மையான மக்களிடம் கூட கல்வி அறிவு இருப்பதையும் நான் கவனித்தேன். இது நமது ஏழ்மையான மக்களின் நிலையை என் மனதிற்குக் கொண்டு வந்தது. நான் கண்ணீர் விட்டேன். எது இந்த வித்தியாசத்திற்குக் காரணம்? கல்வி தான் என்பதே எனக்குக் கிடைத்த விடை!
Occultism எனப்படும் மறைபொருள் கொள்கை தீங்கு விளைவிப்பதே!
எனது பணியில் என் வாழ்க்கை முழுவதும் நான் அடைந்திருக்கும் அனுபவத்தால் அகல்டிஸம் எனப்படும் மறைபொருள் கொள்கையானது தீங்கு விளைவிப்பது மற்றும் மனித குலத்தை பலவீனப்படுத்துவது என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன். நமக்கு பலமே தேவை.
ஒரு ஹிந்து சந்யாசி கடலைத் தாண்டியது இதுவே முதல் தடவை!
நான் ஒருவன் தான் முதல் முறையாக இந்த மேலை நாடுகளுக்கு வந்தவன் ஆகிறேன் – உலக சரித்திரத்தில் ஒரு ஹிந்து சந்யாசி கடலைத் தாண்டியது இதுவே முதல் தடவையாகும்.
***