விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! -1 (Post No.12,226)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,226

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

2-4-2023 மாலைமலர் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.

அஞ்சலிக் கட்டுரை

சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதிகோடீஸ்வரர்விஞ்ஞானிபாடகி! – முதல் பகுதி

ச.நாகராஜன்

ஸ்பரிசவேதி விவேகானந்தர்

ஸ்பரிசவேதி என்ற மூலிகை ஒன்று உண்டு. அந்த மூலிகை எதன் மீது பட்டாலும் அது தங்கமாக மாறி விடுமாம்.

தொட்டதெல்லாம் தங்கம்!

இதே போலத் தான் மகான்களும் என்கின்றன நமது அறநூல்கள். மகான்களின் பார்வை ஒரு கணம் நம் மீது பட்டாலும் போதும், அவர்கள் நம்முடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் போதும், நம் வாழ்வே மாறி உயர்நிலையை அடைய வழி வகுக்கும், நமக்கு ஞானம் சித்திக்கும் என்பர்.

இந்த வகையில் சமீப காலத்தில் வாழ்ந்து இந்தக் கூற்றை நிரூபித்த ஸ்பரிசவேதி சுவாமி விவேகானந்தர் ஆவார்.

அவர் வாழ்க்கையில் அவரைச் சந்தித்தோர் நூற்றுக் கணக்கானோர்.

அவரிடம் நேரடித் தொடர்பு கொண்டோரின் வாழ்க்கை கண நேரத்தில் மாறியது; உயர்ந்தது.

அப்படிப்பட்டோரில் ஒரு நால்வரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

நாத்திகவாதி இங்கர்ஸால்

அமெரிக்காவில் வாழ்ந்த இங்கர்ஸால் (பிறப்பு : 11-8-1833 மறைவு 21-7-1899) ஒரு பிரபலமான நாத்திகவாதி. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சொற்பொழிவாளர்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்த போது அவரைச் சந்தித்தார் இங்கர்ஸால். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் பலமுறை சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

சுவாமிஜியைச் சந்தித்த இங்கர்ஸால் தன் கையிலிருந்த ஒரு ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தவாறே கூறினார் இப்படி: “இந்த ஆரஞ்சுப் பழத்தின் சாறு முழுவதையும் குடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கை ஒன்று தான் நமக்கு உறுதியாகத் தெரியும். இன்னொன்று உண்டோ இல்லையோ, யார் கண்டது?”

இதைக் கேட்ட விவேகானந்தர் அவர் லோகாயதவாதத்தை மனதில் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புவதைத் தெரிந்து கொண்டு உடனடியாக பதில் தந்தார் இப்படி:

“ஆரஞ்சுப் பழத்தின் சாறு முழுவதையும் குடிப்பதில் தப்பே இல்லை.

கடைசிச் சாறு வரை குடிப்பது எனக்கு உடன்பாடு தான். ஆனால் அதற்கான உங்கள் வழியை விட இன்னும் சிறந்ததான வழி எனக்குத் தெரியும்”

அத்தோடு தொடர்ந்தார் : “எனக்கு மரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் அந்தச் சாறைக் குடிக்க நான் அவசரப்படுவதில்லை. இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்கு இல்லை. ஆகவே நிதானமாகச் சாறு பிழிகிறேன். மனிதனைக் கடவுளாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது இந்த வழியில் ஆரஞ்சைப் பிழிந்து பாருங்கள். நீங்கள் பிழிவதை விட லட்சம் மடங்கு கூடுதலாக உங்களுக்குச் சாறு கிடைக்கும்“ என்றார்.

இங்கர்ஸால் பிரமித்தார்.

“உங்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சில காலம் முன்பு இங்கு வந்திருந்து இப்படிச் சொல்லி இருந்தீர்கள் என்றால் உங்களைத் தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள்” என்ற இங்கர்ஸால் விவேகானந்தரைப் பற்றி அக்கறையும் கவலையும் கொண்டார்.

இங்கர்ஸாலிடம் உபநிடதங்களை விவரித்தார் விவேகானந்தர். வேதாந்தம் மூலம் அனைத்தையும் நன்கு அறிந்து வாழ்க்கை மர்மத்தை நன்கு புரிந்து கொண்டு சுவைக்க முடியும் என்பதை அறிந்து கொண்ட இங்கர்ஸால், இது தான் வழி என்றால் இது எனக்குப் பிடிக்கிறது என்றார்

கோடீஸ்வரர் ராக்ஃபெல்லர்

சிகாகோவில் சுவாமிஜையைச் சந்தித்த இன்னொரு பிரபலமானவர் கோடீஸ்வரர் ஜான் டி. ராக்ஃபெல்லர். (பிறப்பு : 8-7-1839 மறைவு 23-5-1937)  ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் அவர் தங்கி இருந்த போது அவரைச் சந்தித்தார் ராக்ஃபெல்லர்.

கதவைத் திறந்த வேலையாளைத் தள்ளி விட்டு முன் அனுமதி கூடப் பெறாமல் வேகமாக விவேகானந்தர் இருந்த அறையில் நுழைந்தார் அவர்.

அப்போது விவேகானந்தர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.  வந்தவர் யாரென்று அவர்  பார்க்கவில்லை. சிறிது நேரம் கழிந்தது. தலையைத் தூக்காமலேயே ராக்ஃபெல்லரின் வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறிய விவேகானந்தர் கடைசியாக, “ நீங்கள் சேர்த்துள்ள சொத்தானது உண்மையில் உங்களுடையது அல்ல. உலகிற்கு நன்மை செய்வதற்காகவே அதை கடவுள் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.  ஆகவே அந்தப் பணத்தால் உலகிற்கு நன்மை செய்யுங்கள்” என்றார்.

ராக்ஃபெல்லர் திகைத்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல இவர் யார் என்று நினைத்தவர் வெளியேறினார்.

ஆனால் விவேகானந்தரின் சொற்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தன.

ஒரு வாரம் கழித்து ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக அளிக்க அவர் முடிவு செய்தார்.

அதைப் பற்றிய விவரங்களை எழுதிய அவர் முன்பு போலவே விரைவாக விவேகானந்தர் இருந்த அறைக்குள் திடீரென்று நுழைந்தார்.

தான் எழுதிய பேப்பரை அவரிடம் தந்து, “இதோ இதைப் படித்துப் பாருங்கள். நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டியதிருக்கும்” என்றார்.

விவேகானந்தர் முன்பு போலவே தலை நிமிராமல் அதை வாங்கிப் படித்தார். பின்னர், “நன்றி சொல்ல வேண்டியது நான் அல்ல; நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

ராக்ஃபெல்லர் முதன் முதலாக அளித்த பெரிய நன்கொடை தொகை அது தான்!

அன்றிலிருந்து ராக்ஃபெல்லர் பவுண்டேஷன் பெரிதாக வளர்ந்தது.உலகின் போற்றத்தக்க சிறந்த கொடையாளி ஆனார் அவர்.

–    தொடரும்

Leave a comment

Leave a comment