
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,231
Date uploaded in London – 6 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
2-4-2023 மாலைமலர் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.
அஞ்சலிக் கட்டுரை
சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – இரண்டாம் பகுதி
ச.நாகராஜன்
விஞ்ஞானி டெஸ்லா
உலகம் கண்ட ஆகப் பெரும் விஞ்ஞானிகளுள் பெரிய விஞ்ஞானி நிகோலா டெஸ்லா. ( பிறப்பு: 10-7-1856 மறைவு 7-1-1943). இன்று உலகெங்கும் ஓடுகின்ற டெஸ்லா கார்களே அவரது விஞ்ஞானத் திறமைக்கான சான்றாகும்.
மின்சாரத் துறையில் அவரது கண்டுபிடிப்புகள் பெரும் புரட்சியைச் செய்தது,
1895ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நவம்பர் மாதம் 27ஆம் தேதி நியூயார்க் நகருக்குக் கிளம்பினார் விவேகானந்தர். அங்கு வியத்தகும் பிரபல மேதைகள் மூவரின் சந்திப்பு நிகழ்ந்தது.
பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, பிரபல கலையுலக மேதையான பிரெஞ்சு நடிகை மேடம் சாரா பெர்ன்ஹர்ட், சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரும் ஒரு நாள் சந்தித்தனர். அறிவியல் உலகில் ஆதிக்கத்தைச் செலுத்தியவர் டெஸ்லா. புலன் சார்ந்த கலை உலகில் தன் பெருமையை நிலை நாட்டியவர் நடிகையான பெர்ன்ஹர்ட். இவை இரண்டும் கடந்த ஆன்மீக உலகின் சிகரத்தில் ஏறி அமர்ந்தவர் விவேகானந்தர்.
நடிகை பெர்ன்ஹர்ட் நடித்த புத்தரின் வாழ்க்கை பற்றிய இஸில் என்ற நாடகத்தைப் பார்க்கச் சென்றார் விவேகானந்தர். இஸில் என்ற பெண்மணியாக நடித்த பெர்ன்ஹர்ட் அவருடன் பேசப் பெரிதும் விரும்பி வந்தார். அப்போது அங்கு டெஸ்லாவும் இருந்தார்.
டெஸ்லா விவேகானந்தர் கூறிய கல்பங்கள், பிராணன், ஆகாயம் பற்றிய விவரங்களைக் கூர்ந்து கேட்டு மகிழ்ந்தார். டெஸ்லாவின் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் வேதாந்த கருத்துக்களுடன் ஒத்து இருந்ததால் அனைவரும் மகிழ்ந்தனர்.
உலகம் நலமுற வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இந்த மூவரும் கொண்டிருந்ததால் அனைவரது பார்வையும் ஒன்றாகவே இருந்தது.
டெஸ்லா தனது மின்சாரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அவரது கண்டுபிடிப்பால் பெரிய கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது.
அழிவைச் செய்யும் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி எவரிடமும் கூற அவர் மறுத்து விட்டார். அது அவருடனேயே மறைந்தது. டெஸ்லா வேதாந்தம் கலந்த ஒரு விஞ்ஞானி!
பாடகி எம்மா கால்வே
1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து கிளம்பிய விவேகானந்தர் பாரிசை அடைந்தார். அங்கு ஒரு பிரம்மாண்டமான உலகக் கண்காட்சி ஏற்பாடாகி இருந்தது. அதற்குப் பலமுறை சென்றார் அவர். அப்போது பாரிசில் பிரபல ஒபேரா பாடகியான எம்மா கால்வே (பிறப்பு 15-8- 1858 மறைவு 6-1-1942) விவேகானந்தரைச் சந்தித்தார். ஒரு நாள் அவர் பாடிய இசை நிகழ்ச்சிக்கு விவேகானந்தர் விஜயம் செய்தார். அந்த நிகழ்ச்சி தான் எம்மா கால்வேயை உலகப் புகழ் பெற்ற பாடகி ஆக்கியது.
ஆனால் கால்வேயின் வாழ்க்கை மிக சோகமயமான ஒன்று. அவர் பாடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியின் போது, அவரது ஒரே மகள் தீக்கு இரையாகி மாண்ட செய்தியை நடுவில் கேட்டு அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. பலமுறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது நெருங்கிய தோழி வீட்டிற்கே சென்றார். அங்கு தான் விவேகானந்தர் தங்கி இருந்தார்.
அவருக்கு ஆறுதல் அளித்த விவேகானந்தர் அவரது வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறினார்.
பிரமித்துப் போன கால்வே, “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்ட போது, “ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல உன்னைப் படிக்கிறேன்” என்று கூறிய விவேகானந்தர், “அனைத்தையும் மறந்து விடு. உற்சாகமாக இரு. மகிழ்ச்சியுடன் இரு உன் பணியைத் தொடர்.” என்றார்.
இந்தச் சந்திப்பால் உத்வேகம் பெற்ற கால்வே கலைத்துறையில் தன் கவனத்தைச் செலுத்தலானார். பெரும் புகழையும் பெற்றார்.
இதே போல ஏராளமான விஞ்ஞானிகளும், அறிஞர்களும், இதர துறை விற்பன்னர்களும் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தனர்.
அவரிடமிருந்து உத்வேகம் பெற்று தம் தம் துறையில் சிறந்து விளங்க ஆரம்பித்தனர்.
12-1-11893 அன்று அவதரித்த சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவையே ஆட்கொண்டார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை நான்காம் தேதியையே தனது சமாதி அடைவதற்கான தினமாகவும் தேர்ந்தெடுத்தார்.
அவர் சமாதி எய்திய தினம் 4-7-1902
அவர் ஒரு முறை கூறினார் : “இந்தியாவின் திரண்ட வடிவமே நான்!” என்று.
இந்தியா உலகிற்கு என்னவெல்லாம் அளிக்க முடியும் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் காண்பித்தார்.
ரவீந்திரநாத் தாகூர், “இந்தியாவை அறிய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்” என்றார்.
இந்தியாவின் திரண்ட வடிவத்திற்கு நமது உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்து அவர் காட்டிய வழியில் முன்னேறுவோம்!
***