
Post No. 12,480
Date uploaded in London – – 29 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
QUIZ No.72
திரு ஓணம் பத்து
1.ஓணம் ஓணம் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது ?
XXXX
2.ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ?
ஓணம் பண்டிகை பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்
XXXX
4.சங்க இலக்கியத்தில் ஓணம் பற்றிய குறிப்பு இருக்கிறதா ?
XXXX
5.இந்தப் பண்டிகையில் மலையாளிகள் என்ன செய்வார்கள் ?
XXXX
6.கோவில்களில் என்ன நடக்கும் ?
XXXX
7.இந்தப் பண்டிகைக்கான ஸ்பெஷல் வெஜிட்டேரியன் உணவு என்ன ?
XXX
8.ஓணம் பற்றிய பழமொழி என்ன சொல்கிறது ?
XXXX
9.ஓணம் பற்றி திருஞான சம்பந்தர், பெரியாழ்வார் என்ன சொன்னார்கள்?
XXXX
10.மலையாளிகள் சிங்கம் மாதம் என்று அழைப்பது ஏன்? அதன் சிறப்பு என்ன?
XXXX



விடைகள்
1.கொல்ல வர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களுக்கு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். அதுதான் முக்கிய விடுமுறை நாள் .
XXXXX
2.மகாபலி என்ற மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார். அவர் பிரகலாதனின் பேரன் . மகாபலி அசுர குலத்தில் பிறந்து இருந்தாலும் கொடை அளிப்பதில் சிறந்து விளங்கியவர். ஆனால் கர்வமும் சற்று அதிகம் இருந்தது. அதாவது இந்திரன் வகிக்கும் பதவிவேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பினார்.யாகம் முடியும் நேரத்தில், தேவர்களின் வேண்டுகோளின்படி விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். யாகத்தில் பிராமணர்களுக்குத் தானம் கொடுப்பது வழக்கம் ; சிறிய பிராமண பையனாக வாமனர் வந்து மூன்றே அடி அளவு தானம் போதும் என்றார் . மன்னன் அகந்தையால் சிரித்தான்
மகாபலி சக்கரவர்த்தி ‘மூன்றடி நிலத்தை’ தாரை வார்த்து, கொடுத்தேன் என்று சொன்னார். உடனே வாமனனாக வந்த ஸ்திருமால் ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டார். மகாபலி தன்னுடைய தலையில் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளுமாறு சொன்னார். மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி வைத்தார். மக்களின் அன்பின் காரணமாக ஆண்டுக்கு ஒருமுறை அவர் கேரளத்துக்கு வருவதற்கு அனுமதி தந்தார். அந்த நன்னாள்தான் ஓணம் ; அன்று மகாபலி வருவதால் மலையாளி இந்துக்கள் அதைக் கொண்டாடி வருகிறார்கள்.
XXXXX
3.தமிழில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே சிறப்பு அடைமொழியான திரு போடப்படுகிறது. சிவனுக்கு உரிமையான ஆருத்ராவை திரு ஆதிரை என்கிறோம்; விஷ்ணுவுக்கு உரிய ஓணத்தை திரு ஓணம் என்கிறோம்- காஞ்சி சங்கராச்சாரியார் (1894-1994)
XXXXX
4.இதை விஷ்ணுவின் பண்டிகை என்பதை சங்க கால நூலான மதுரைக் காஞ்சி அழகாகச் சொல்கிறது:
மதுரைக் காஞ்சி அடிகள் 590-599
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக் . . . .[590 – 599]
XXXXX
5.அத்தப்பூக்கோலம்
ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் “அத்தப்பூ” என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்.
பெண்களின் ஆடை (கசவு)
கோடி என்றால் புது ஆடை; ஓணக் கோடி என்று அன்றைய தினம் எல்லோரும் புத்தாடை அணிவர். குறிப்பாக பெண்கள் வெண்பட்டு போல பளபளக்கும் ஆடையில் பல வண்ண பார்டர் களுடன் அணிவார்கள்
கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.
10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.
XXXX
6.மலையாளிகள் இன்று புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர் ; திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் கூட்டம் அலைமோதும் ஷோரனூரில் கதகளி நடனம் நடைபெறும். மக்கள் வீடுதோறும் ஓணம் பாட்டுக்கள் பாடுவார்கள்
த்ரிசூரில் (திருச்சூர்) முகபடாம் அணிந்த அலங்கார யானைகள் அணிவகுப்பு நிகழும் திரிபு னித் தராவிலும் அலங்கார ஊர்வலங்கள் நிகழும் திருவனந்தபுரத்தில் வாண வேடிக்கைகள் நிகழும் .
ஆரண்முழா, குட்டநாடு ஆலப்புழையில் படகுப்போட்டிகள் நடைபெறும்.
திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி கோவிலுக்கு பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொச்சியில் உள்ள திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் ஒரு சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
XXXX
7.ஓணம் பண்டிகையை, அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.
XXXX
8.”கானம் விற்றாவது ஓணம் உண்” என்பது மலையாள தேசத்தில் வழங்கும் பழமொழி ; நிலத்தை விற்றாவது ஓணத்தைக் கொண்டாடி உண்டு களிக்க வேண்டும் ; குடும்பத்தினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது முக்கியம் என்பது இதன் தாத்பர்யம் கானம் என்பது தோப்பு, நந்தவனம் ஆகியவற்றைக் குறிக்கும். கேரளத்தில் இது இல்லாத வீடு கிடையாது. தோப்பு, துறவு ஆகியவற்றில் விளையும் பொருட்களை விற்றாவது ஓணத்தை கொண்டடியே ஆகவேண்டும் . ஏனெனில் அன்று மகாபலியை யும் , விஷ்ணுவையும், தானத்தின் சிறப்பையும் கொண்டாடுகிறோம்
XXXX
9.மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 2
தேவாரம்- இரண்டாம் திருமுறை; பூம்பாவை திருப்பதிகம்; மயிலாப்பூர்
******
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடிய பாசுரத்தில் அவர்கள் பரம்பரையாக திருமாலுக்கு தொண்டு செய்வதையும், ஆவணி மாதம் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்ததாகவும் பாடியுள்ளார் .
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி* அரியை அழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாண்டு* பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே -பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாசுரம்
XXXX
10.சந்திரனும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும் கூடிய பெளர்ணமி நாளை வைத்து இந்துக்கள் , மாதத்தைக் கணித்தார்கள் ; இது சந்திரனை அடிப்படை யாக வைத்து கணக்கிடும் முறை . சித்திரா பெளர்ணமி வரும் மாதம் சித்திரை.
வேறு சில இந்துக்கள் சூரியன், 12 ராசிக்களில் நுழையும் ஒவ்வொரு ராசியையும் அடிப்படையாக வைத்து மாதத்தைக் கணக்கிட்டார்கள் இது சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடும் முறை . சிங்கமாதம் என்றால் சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கிறான் என்று பொருள்.
xxxx subham xxxxxx
tags QUIZ, திரு ஓணம் , அத்தப்பூக்கோலம் , ஓணம் சாத்யா , கோடி , கானம் , மஹாபலி, வாமனன்