கிளிநொச்சி உருத்திரபுரி ஈஸ்வரன்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற……. Part 24 (Post.12,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,575

Date uploaded in London – –  –  11 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 24

49.கிளிநொச்சி உருத்திரபுரி ஈஸ்வரன் கோவில்

கிளிநொச்சியில் காடுகள் சூழ்ந்த பகுதியில் 1882-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி ஒரு சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது . பின்னர் 1958-ம் ஆண்டில் அந்த லிங்கம் முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு துவங்கியது.  இந்த சிவலிங்கம் சதுர வடிவுடைய ஆவுடையார் மீது அமர்ந்துள்ளதால் இது சோழர் கால சிற்பம் என்பது தெரிகிறது. அதாவது ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உடையது . படையெடுப்புகளாலும், வறட்சி ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்வதாலும் காலப்போக்கில் சோழர் கட்டிய சிவன் கோவில் அழிபட்டிருக்க வேண்டும். 7 அல்லது 8ம்- நூற்றாண்டில் கலிங்க தேச மன்னர்கள் இப்பகுதியை ஆண்டார்கள்; அவர்கள் சோழர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் ; அனுராதபுர ஆட்சிக்கு எதிரிகள். இந்த வரலாற்றைப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் கோவிலின் பழமை விளங்கும் .

கிளிநொச்சிக் காட்டுப்பகுதியில் அழிந்த கோவிலின் இடிபாடுகளைக் கண்டதாலேயே பக்தர்கள் இங்கு அகழ்வாராய்ச்சி செய்தனர். 1882ம் ஆண்டில் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்தனர். அப்போது பாதுகாப்பில்லாத வனாந்திரம் என்பதால் அரசாங்க ஏஜென்ட் SIR WILLIAM TWYNAM சர் வில்லியம் ட்வீனம் ஆலோசனையின்பேரில் சிவலிங்கத்தை, அருகிலுள்ள அம்மன் கோவிலில் வைத்துப் பாதுகாத்தனர்.

பின்னர் உருத்திரப் பெருங்குளம் பகுதியில் மக்கள் குடி ஏற்றப்பணிகள் துவக்கப்பட்டது. அந்த நேரத்தில் பக்தர்கள் ஒன்றுகூடி சிவலிங்கத்துக்கு தனிக்கோவில் எழுப்பினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் கோவில் இருக்கிறது; கோவிலுக்கருகிலுள்ள தாமரைப்பூக்கள் சூழ்ந்த குளம் இயற்கை அழகு ஊட்டுகிறது .

இங்கு அம்பாளோடு விநாயகர் சனீஸ்வரன், வைரவர் ஆகிய மும்மூர்த்திகளும்  வழிபடப்படுகின்றனர் .

2021 ஆண்டில் இந்தப் பகுதியில் புத்தர் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லி தொல்லியல் துறையினரும் பெளத்த பிட்சுக்களும் ஆய்வுப் பணிகளைத் துவக்கினார்கள். இந்துக்களின் கடும் எதிர்ப்பினால் அந்த ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இப்பொழுது கோவிலில் முறையான பூஜைகள் நடக்கின்றன.

Xxxxx

50.தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோவில்

கிழக்கு இலங்கையில்  திருகோணமலையிலிருந்து  20 கிலோ மீட்டர் தொலைவில் தம்பல காமம் என்ற கிராமம் இருக்கிறது போர்த்துகீசியர்கள் எல்லா இந்துக்கோவில்களையும் அழிப்பதை அறிந்த பக்தர்களும் குருக்கள்களும் , 1624-ல்  கோவிலுக்குள் வெறியர்கள் நுழைவதற்கு முன்னரே. சிலைகளை அகற்றி பாதுகாப்பாக தம்பல காமத்துக்கு கொண்டுவந்து மண்ணில் மறைத்து வைத்தனர் .

பின்னொரு  காலத்தில் கண்டியில் ஆட்சி செய்துவந்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில்  இறைவன் தோன்றி,  தனக்குக் கோவில் அமைக்க வேண்டினார் என்றும், மன்னன் ஆராய்ச்சியில் முன்னர் திருகோணமலையில் இருந்த ஆதிகோணநாயகரும், மாதுமை அம்மையும் மறைத்து வைக்கப்பட்ட இடத்தை அறிந்து அம்மை, அப்பனை பரிவாரதேவதைகளுடன் கிராமத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. கோணேச வைபவ மாலையில் இதுபற்றிய செய்தி உள்ளது இது 1889-ல் அகிலேச பிள்ளையால் இயற்றப்பட்டது.

XXXX

51.ரத்னபுரி சபேசன் சிவன் கோவில்

தென் மத்திய இலங்கையில் ரத்தினங்கள் அதிகம் கிடைக்கும் இரத்தின புரி  இருக்கிறது ; தலை நகர் கொழும்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தூரம்.

அங்கே  யோக சுவாமிகளும் சங்கர சுப்பையர் சுவாமிகளும் சொன்னபடி, 1935–ம் ஆண்டில் சிவன் கோவில் கட்டப்பட்டது. கோவிலுக்கான நிலத்தை டி . வேலுப்பிள்ளை தானமாகக் கொடுத்தார். 1938 ஜூன் 8-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அமைப்பில் கட்டினர்.  நான்கு வழிகளைக் கொண்ட மூலஸ்தானத்தில், இரத்தின புரி சபேசரும் திரிபுர  சுந்தரியும் காட்சி தருகின்றனர்.

காசி கோவிலைப் போல தெய்வச் சிலைகளுக்கு மிக அருகில் பக்தர்கள் செல்லலாம். இங்கே லட்சுமி- மஹா விஷ்ணு, சரஸ்வதி- பிரம்மா ஆகியோரும் இடம்பெறுகின்றனர் .

விநாயகர், சுப்பிரமணியர், சந்தான கோபாலர், நாக தம்பிரான், சனைச்சரர், பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் இருக்கின்றன.

1961-ம் ஆண்டில் மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது. வழக்கமான பூஜை, உற்சவங்களுடன்  ஜூன் மாதம் வருடாந்திர உற்சவமும் நடத்தப்படுகிறது. .

To be continued………………………………………….

Tags-  ரத்னபுரி சபேசன் , கோவில் , தம்பலகாமம் , ஆதிகோணநாயகர் , கிளிநொச்சி,  உருத்திரபுரி ஈஸ்வரன்,  ஆலயம்

Leave a comment

Leave a comment