
Post No. 12,579
Date uploaded in London – – – 12 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 25
52.நுவரெலியா லங்காதீஸ்வரன் கோவில்
1978-ம் ஆண்டில் உருவான புதிய சிவன் கோவில் நுவரெலியா லங்காதீஸ்வரன் கோவில் ஆகும். இந்தக் கோவிலை நிறுவியவர் காயத்ரி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஆர். கே முருகேசு தம்பி ஆவார்.
நுவரெலியா லேடி மக்கலம் வீதியில் No. 82, Lady Mc Callums Drive அவர் கட்டிய ஸ்ரீ லங்காதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்தியாவின் நர்மதை கரையில் ஒரு பாண லிங்கம் கண்டெடுக்கப்பட்டது .. நர்மதை நதியில் உருண்டு வரும், இயற்கையில் உருவான கற்களை பாண லிங்கம் என்றும் ஸ்வயம்பூ (தான் தோன்றி ) லிங்கம் என்றும் அழைப்பார்கள்.
இந்தக் கோவிலில் பல கடவுளர் மூர்த்திகளும், பெரிய தியான மண்டப மும் உள்ளது. மேலை நாடுகளில் தியான மண்டபங்கள் பல அமையவும் சுவாமிகள் ஏற்பாடு செய்தார். நுவரெலியாவில் சமாதி ஆகும் முன்னர், அம்பாறை மாவட்டத்தின் தெற்கே தம்பிலுவில் கிராமத்தில் “ஸ்ரீ காயத்திரி தபோவனம்” எனும் வளாகத்தில் காயத்திரி மூலவிக்கிரகத்துடன் சிவலிங்கம், மகாமேருயந்திரம் அமையப்பெற்ற மூலஸ்தானம் மற்றும் பிள்ளையார், முருகன், விஷ்ணு , ஆஞ்சநேயர், அகஸ்த்தியர், விஸ்வாமித்திரர் திருவுருவங்களும் உள்ள ஆலயம் எழுப்பினார்
மட்டக்களப்பு நாவலடி புதுமுகத்துவாரத்தில் சப்தரிஷிகளுக்கு தனியான, எழுகோண வடிவிலான் ஆலயமும் கட்டப்பட்டது தனியான மகா மேரு ஆலயமும் மகா விஷ்ணு ஆலயமும் இவர் முயற்சியில் உருவானவை..
நர்மதை – இராவணன் தொடர்பு பற்றி சுவையான கதை
ராவணன் பெண்களைக் கடத்தி கெட்ட பெயரைச் சம்பாதித்தாலும் அவன் பெரிய சிவபக்தன் என்பதை மறுக்கமுடியாது அதனால் லங்காதீஸ்வரன் என்ற நாமம் சிவனுக்கு சார்த்தப்பட்டுள்ளது ;கயிலை மலையை அசைக்க முயன்று கதறி அழுத ராவணன் பற்றியும் கடைசியில் அவன் சிவன் அருளால் தப்பித்துப் பிழைத்ததையும் தேவாரத் திருவாசகப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.
ராமாயண வரலாற்றில் நுவாரெலியாவுக்கு சிறப்பு இடம் உண்டு. மத்திய இலங்கையில் மலைப் பகுதியில் அமைந்த நுவரெலியா , ராவணனுடன் மிகவும் சம்பந்தப்பட்ட இடம். ராவணன் மகன் மேக நாதன் முதலியோர் சிவனை வழிபட்ட இடம் இது என்று சிவபால யோகி மகாராஜ் கூறுகிறார். அவர் 12 ஆண்டு தவத்துக்குப்பின்னர் கண்டெடுத்த லிங்கம்தான் இங்கு பிரதிஷ்டை ஆகியுள்ளது . 1978-ம் ஆண்டில் அக்டோபர் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
நர்மதை நதிக்கும் ராவணனுக்கும் கூட தொடர்பு உண்டு.உலகில் ராவணன் பயந்து நடுங்கிய ஒரே மன்னன் கார்த்த வீர்ய அர்ஜுனன் ஆவான் . வடகிழக்குப் பருவக்காற்று, தென் மேற்குப் பருவக்காற்று தேதிகளை அறிந்தவர்கள் காத்துட்டு , கால் காசு (Single Paisa) செலவழிக்காமல் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் சென்று வரலாம் இந்தவிஞ்ஞான ரகசியத்தை ராவணன்,கரிகால் சோழன் முதலியோர் பயன்படுத்தினர். அசோகனும் இந்தப் பருவக்காற்றைப் பயன்படுத்தி மகன், மகள் , புத்த பிட்சுக்களை அனுப்பிய செய்தி மகாவம்சத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கப்பல் வரும், போகும் பயணங்களுக்கு இடையில் ஆறு மாத இடைவெளி இருக்கும் ராவணன் இதைப் பயன்படுத்தி நர்மதை, கோதாவரி நதிக்கரைகளுக்கு வந்து பெண்களை சீண்டுவது வாடிக்கை ஆக இருந்தது . நர்மதை நதிக்கரையில் மஹிஷ்மதி நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஹேஹய நாட் டு மன்னன் கார்த்த வீர்யாஜுனன் ஆண்டுவந்தான். ராவணனின் தொல்லை அதிகரிக்கவே அவனுக்கு செமை அடி உதை கொடுத்து சிறையிலடைத்தான். பின்னர் நெடுங்காலத்துக்குப் பின்னர், ராவணனை சிறையிலிருந்து விடுவித்தான். அப்போது ராவணன் சொன்னான்- இனி இந்தப்பக்கம் வந்து வாலாட்ட மாட்டேன்..
கார்த்த வீர்யாஜுனன்- ராவணன் மோதல், சிறைவாசக் கதையை வாயு புராணம் விரிவாகக் கூறுகிறது.
Xxxxx
Nilavarai Well; Picture from Wikipedia
53. யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரி நவ சைலம் சிவன் கோவில்
யாழ்ப்பாணத்தில் நிறைய இயற்கை அதிசயங்கள் உள்ளன. அவற்றில் ராமானுடனும் சிவனுடனும் சம்பந்தப்பட்ட இடம் நிலாவரைக் கிணறு. வற்றாது நீர் சுரக்கும் ஊற்று இது. பாசனத்துக்கும் , புனித நீராடலுக்கும் இன்றும் பயன்படுகிறது
யாழ்ப்பாண நகரிலிருந்து 12 மைல் தொலைவில் நவ கிரி நவ சைலம் இருக்கிறது. கிரி, சைலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு மலை என்று பொருள். இதுபற்றி தட்சிண கைலாச புராணத்தில் தகவல் கிடைக்கிறது . “நவ சைலத்தில் ஒரு குகையில் சிவனும் பார்வதியும் நீல ரத்தினக் கற்களாலான மேடையில் அமர்ந்து இருந்தனர். விநாயகர், சுப்ரமணியர், தே வர்கள் புடை சூழ இருந்து அருள் மழை சுரந்தனர் . அப்போது திடீரென இடி ஓசை முழங்க மலைக் குகை பிளந்தது . பூமிக்கடியிலிருந்த கங்கா தேவி தாமரை மலருடன் தோன்றினாள் அந்த நீரை இறைவனும் எடுத்து தன் சடையின் மீது தெளித்ததால் நீரும் புனிதம் அடைந்தது” .
அந்த இடத்தில் சிவ பெருமானுக்கு பின்னர் கோவில் எழுப்பப்பட்டது ராமன் பற்றிச் சொல்லப்படும் கர்ண பரம் பரைக் கதை :
இராம பிரான், ராவண வதத்துக்குப் பின்னர், குரங்குப் படையுடன் இங்கே வந்தான். வானர சேனைகளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. உடனே ராம பிரான் தனது வில்லால் பூமியைத் துளையிடவே தண்ணீர் பீறிட்டு எழுந்தது. அதுவே நிலாவரைக் கிணறு அதாவது நிலத்தின் எல்லை/ வரை காண முடியாத ஆழம் உடைய கிணறு.
இப்போது இதிலுள்ள விஞ்ஞான உண்மைகளை ஆராய்வோம்.
ஒருமலைக் குகை இருந்தது. அது திடீரென இடிந்து விழுந்தது; அங்கே தண்ணீர் தோன்றியது..
இதிலுள்ள அறிவியல் உண்மை : யாழ்ப்பாண பூமி, சுண்ணாம்புக் கல் (LIME STONES ROCKS AND CAVES) பாறைகளால் ஆனது. நிலத்துக்கு அடியில் அது பல பள்ளம், குகைகளுடன் காணப்படும். இயற்கையிலேயே அது இடிந்து விழும்போது இடி ஓசை கேட்கும். கீழேயுள்ள தண்ணீர் மேலே ஊற் றெடுக்கும் . அங்கு கோவிலும் இருந்திருந்தால் எல்லாம் இறைவன் செயல் என்ற நமபிக்கையும் பிறக்கும்.
ஆழம் தெரியாத அதிசயக் கிணறு பற்றி ஆராய்ச்சி செய்த பாசனத்துறை சிவில் என்ஜினீயர் SANMUGAM ARUMUGAM (AUTHOR OF HUNDRED HINDU TEMPLES OF SRI LANKA) இலங்கையிலுள்ள 100 கோவில்கள் பற்றி எழுதிய நூலில், அவர் கிணறு பற்றி செய்த ஆராய்ச்சியை விவரித்துள்ளார் ; அதன் சுருக்கம் பின் வருமாறு,
மேலிருந்து பார்த்தால் சாதாரண கேணி போலத் தோன்றும்.; அருகாமையிலுள்ள கிணறுகள் போலவே இருக்கும். ஆனால் கிணற்றின் ஒரு பக்கத்தில் 134 அடியும் இன்னொரு பக்கத்தில் 164 1/2 அரை அடியும் ஆழம் உடையது. கிணற்றின் நீள , அகலம் 48 அடி X 38 அடி.
கிணறு இருக்கும் புத்தூர், கடல் மட்டத்தைவிட 17 அடி உயரம் அதிகம். யாழ்ப்பாண குடா நாடு முழுதும் LIME STONE லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக் கல் மீது அமைந்துள்ளது. பூமிக்கடியில் மேடு , பள்ளங்கள், கால்வாய், குகைகள் போன்ற அமைப்புடையவை. மழைக்காலத் தண்ணீர் இவைகளில் தங்கும்.. நீரைக்கரைக்கும் சக்தி சுண்ணாம்புக்கு இருப்பதால் குகைகள் தோன்றும். அவை பெரிதாக விரிவு அடைந்தால் பாரம் தாங்காது தாழ்ந்து போய் கிணறுகள் உண்டாகும். கடலுக்கு அருகில் இவை இருந்தால் பூமிக்கு அடியில் குகை வழியாக கடல் உப்பு நீரும் உள்ளே பாயும் . நிலவரைக் கிணற்றில் மேலேயுள்ள நீர் சுத்த நீராகவும் ஆழத்தில் உள்ள நீர் உப்பு நீராகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.
மழை நீரால் நிரப்பப்படும் முதல் 80 அடி ஆழம் குடி நீர் தரம் உடையது. 50 அடி முதல் 70 அடி ஆளும் வரையுள்ள தண்ணீர் குடி நீரானாலும் அசுத்தம் கலந்து உள்ளது. 70 அடி முதல் 80 அடி வரையுள்ள தண்ணீர் நீரினால் ஆன ஒரு சுவர் போன்றது . அதாவது கடல் நீருக்கும் மேலேயுள்ள குடிநீருக்கும் இடையிலுள்ள பிரிவினை அடுக்கு.
80 அடிக்குக் கீழே போனால் உப்புக்கரிக்கும் கடல் நீர் தென்படுகிறது. 130 அடி ஆழம் வரை கடல் நீர் போல பல அசுத்தங்கள் இருக்கிறது 130 அ டிக்கும் கீழே போனால் கடல் நீரை விட அதிக உப்பு இருக்கிறது.
நிலாவரை ஊற்றுக்கு அருகில் எந்திர DRILLS ட்ரில்கள் மூலமாக ஓட்டை போட்டுப் பார்த்ததில் வெவ்வேறு மட்டத்தில் தண்ணீர் காணப்பட்டது. அதற்குப் பின்னர் வெற்றிடம் வழியாக ட்ரில் கருவி மிக ஆழத்தில் போய் உட்கார்ந்தது . இதன் மூலம் இடையே குகை அல்லது பள்ளம் இருப்பது தெரிந்தது. இதுவும் இடத்துக்கு இடம் வெவ்வேறு ஆழத்தில் நிகழ்வதால் குகைகள் அளவு வேறு என்பதும் தெரிகிறது . 100 அடிக்குக் கீழே குகைகள் உள்ளன
தட்சிண கைலாச புராணத்தில் சொல்லப்படும் அதிசய நிகழ்ச்சியும் இந்த குகைகள் உடைந்து பள்ளம் ஏற்படுவது , ஊற்று மேலுக்கு வருவது போன்ற ஒரு நிகழ்வுதான்.
xxx
என்னுடைய 2 ஆராய்ச்சிகள்
முன்னொரு கட்டுரையில் முழங்கா வில் கோவில் பற்றி ஒரு அதிசயத்தைக் கண்டோம். அதாவது வானம் இடிக்காமல், மின்னல் மின்னாமல் இடி ஓசை கேட்டது; தண்ணீர் வந்தது என்பதும் மேற்கண்ட நிகழ்வு போன்றதே .
பூமிக்கு அடியிலுள்ள சுண்ணாம்புக் கல் குகைகள் இடிந்து நிலம் சரியும் போது இடி ஓசை போல சப்தம் கிளம்புகிறது நிலாவரை கிணறு தோன்றியதையும் தட்சிணா கைலாச புராணம் இதே போல விவரிப்பதை ஒப்பிட்டால் புரியும் .
விஞ்ஞான நிகழ்வுகளுக்கு , இயற்கை அதிசயங்களுக்கு இறைவன் பெயரை இழுக்கலாமா என்று பகுத்தறிவுப் பகலவன்கள் கேள்விகளை எழுப்பக்கூடும். ஏன் இப்படி குறிப்பிட்ட காலத்தில் நிகழ்கிறது என்பதற்கு விஞ்ஞானம் விடை தராது கடலுக்கு அடியில் ஏராளமான ஏரி மலைகள் குமுறி க்கொண்டு இருக்கின்றன.; எப்போது பார்த்தாலும் கடலுக்கு அடியில் பூகம்பங்கள் ஏற்படுவதை ஸைஸ்மோகிராப் கருவிகள் பதிவு செய்கின்றன ; உடனே அதைக் கவனிப்பவர்கள் கரை ஒரே மக்களுக்கு சுனாமி பேரலைகள் வரும் என்று எச்ச ரிக்கின்றனர். ஆனால் சுனாமி வருவதே இல்லை. அவர்கள் எச்சரிக்காத போது பிரமாண்டமான சுனாமி ராட்சத அலைகள் எழுந்து இரண்டு லட்சம் பேரை கடலுக்குள் இழுத்துச் சென்று ஜல சமாதி வைத்ததை நாமே படித்தோம். இதுதான் இறைவனின் திருவிளையாடல் .
BIG BANG AND BIG CRUNCH
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்ற பெயரை சம்ஸ்க்ருத அகராதிகள் காட்டுகின்றன. அதாவது அவர்கள் நினை க்கும்போது பிக் பேங் BIG BANG என்னும் பிரபஞ்ச வெடிப்பைத் தோற்றுவித்து உயிரினங்கள், பிரபஞ்சங்களை உண்டாக்குவர். யுக முடிவில் பிக் க்ரஞ்ச் BIG CRUNCH என்ற பெயரில் மஹா பிரளயத்தை உண்டாக்குவர். இதை இந்துப் புராணங்கள் விளக்குவது போல நாஸா NASA விஞ்ஞானிகள் கூட விளக்கவில்லை. விஷ்ணு சஹஸ்ர நாமம் இறைவனையே ஆத்ம யோனி, ஸ்வயம் ஜாதோ என்று வருகிறது அதாவது அவரே யோனி; பிறப்பிடம் !! தன்னைத்தானே பிறப்பிக்கும் வல்லமை அவன் ஒருவனுக்கே உண்டு.
Xxx
பள்ளம்= பிலம் = வில்லு = வில்
இரண்டாவது ஆராய்ச்சி வில், வில்லு பற்றியது . இலங்கையில் மட்டும் பள்ளமான, வளைவான பகுதிகளுக்கு வில், வில்லு என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் (உ.ம். முழங்கா வில்)
வில் என்பது வளைவான அமைப்பு என்பது ராமபிரானின் கோதண்டத்தைப் பார்த்தாலே விளங்கும் . இது தமிழ் சொல் இல்லை அல்லது தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் பொதுவான சொல். ஏனெனில் பிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பள்ளம் , குகை என்று பொருள். ராமாயணத்தில் வாலி- சுக்ரீவன் கதையைப் படித்தோருக்கு இது நினைவில் நிற்கும். ப = வ இடம் மாறும் என்பது தொல்காப்பியத்திலுள்ளது; சங்க இலக்கியத்தில் உள்ளது; AVESTAN அவஸ்தன் மொழியில் உள்ளது ஆக பள்ளம்= பிலம் = வில்லு = வில் ஆகிய எல்லாம் வளைந்த பூமியைக் குறிக்கும் (Cognate Words) . வில்லைக் கையில் ஏந்திய காட்டுவாசிகளை, வட இந்தியாவில் பில்லர்கள் (Bhils) என்றே அழைப்பர் .
To be continued……..
Tags- யாழ்ப்பாண, புத்தூர், நவ கிரி, நவ சைலம், , நிலாவரைக் கிணறு, நுவரெலியா, லங்காதீஸ்வரன், கோவில்,
Balasubramanian Ammunni
/ October 12, 2023நிலாவரைக் கிணறு எனபது சரியா? தமிழ்நாட்டுக்கோவில்களில் நிலவரைக் கிணறு என்று எழுதியிருப்பதைப் பார்த்துள்ளேன்.
Tamil and Vedas
/ October 12, 2023thoughout Sri Lankan Tamil literature it is Nilaavarai Kinaru
நிலாவரை – தமிழ் விக்கிப்பீடியா
Wikipedia
https://ta.wikipedia.org › wiki › ந…
நிலாவரை (Nilāvarai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் இருக்கும் ஒரு கிராமமாகும். இந்த இடத்தில் இயற்கையாக அமைந்த நிலக்கீழ் …