
Post No. 12,578
Date uploaded in London – 12 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஹெல்த்கேர் அக்டோபர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
மாறி வரும் சிகிச்சை முறைகள்!
ச.நாகராஜன்
கைவிரல் மூலம் மார்பகப் புற்றுநோய் அறியலாம்!
அதிவேகத்தில் இயங்கும் நவீன உலகம் மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை. அதன் இயக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.
சிகிச்சை முறைகள் மாறி வருகின்றன.
தொலைதூரத்திலிருந்து ஒரு டாக்டரிடம் வீடியோ மூலமாக தனது வியாதிக்கான மருந்தை ஒருவர் பெற முடிகிறது. இது போல பல மாற்றங்கள். சிலவற்றைப் பார்ப்போமா?
பெண்கள் மிகவும் பயப்படும் மார்பகப் புற்று நோய்க்கான தீர்வை மிக சுலபமாக மேற்கொள்ளலாம் என்கிறது நவீன ஆய்வுகள்.
ஒரு பெண்மணியின் கைவிரல்களில் உள்ள வியர்வையைப் பார்த்தாலேயே – பரிசோதித்தாலேயே – போதும் அவருக்கு மார்பகப் புற்று நோய் உண்டா இல்லையா என்பது தெரிந்து விடும் என்கிறது நவீன ஆய்வு.
ஏனெனில் கைவிரல்களில் உள்ள புரோடீன்களைச் சோதித்தால் போதுமாம், அதன் மூலம் மார்பகப் புற்று நோய் பற்றித் துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமாம். ஷெஃபீல்ட் ஹல்லம் பல்கலைக்கழக (Sheffield Hallam University) ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்போதுள்ள பயாப்ஸி, மம்மோகிராம் ஆகியவை திறன் வாய்ந்தவை தான் என்றாலும் அது பெண்களுக்கு மிகவும் சங்கடத்தைத் தருகின்றன. பண்பாட்டு ரீதியாகவும் பல பெண்கள் அதைச் செய்து கொள்ளத் தயங்குகின்றனர். ஆனால் கை விரல்களைக் காண்பியுங்கள் என்றால் யார் தான் மாட்டார்கள்?
15 பெண்கள் மீதான சோதனை இப்படி கைவிரல் ரேகையைப் பார்த்து 98% துல்லியமான முடிவுகளை அறிவித்திருக்கிறதாம்.
முகர்ந்து பார்க்க முடியவில்லையா? ஆரஞ்சை எடுங்கள்!
கோவிட் வந்தாலும் வந்தது உலகில் ஏராளமானோருக்கு மூக்கால் நுகரும் சக்தியே போய் விட்டது. சமீபத்தில் டெய்லி டெலகிராப் பத்திரிகை இப்படி நுகரும் சக்தியை இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியைத் தருகிறது. தினமும் இப்படிப்பட்டவர்கள் இரண்டு ஆரஞ்சு பழங்களை முகர்ந்து பார்த்தால் போதுமாம், அவர்களது பழைய திறன் திரும்பி வந்து விடுமாம். அடடா. ஆரஞ்சுக்கு அப்படி ஒரு சக்தியா என்று வியப்பு ஏற்படுகிறதல்லவா?
கோவிட் -டால் இப்படி போன திறன் நிரந்தரமாக இழந்து விட்ட ஒன்று அல்ல என்று லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் (University College London).
பத்தே பத்து விநாடிகள் காலையிலும் மாலையிலும் ஆரஞ்சையோ அல்லது எலுமிச்சம்பழத்தையோ அல்லது காபியையோ முகர்ந்து பார்த்தால் போதுமாம், மூளை தனது இழந்த திறனைப் பெற்று விடுமாம்! நல்ல வாசனையான கண்டுபிடிப்பு அல்லவா இது!
மன அழுத்தம் போக அடுத்தவர் வியர்வை
ஒரே டென்ஷன், மன அழுத்தம் என்றெல்லாம் அலறுபவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி! கூட்டமான மெட்ரோ புகை வண்டிகளில் அல்லது பஸ்களில் பயணம் செய்யுங்கள் என்கிறது நவீன ஆய்வு ஒன்று! என்ன இது என்று ஆச்சரியப்பட்டால் அதற்கான காரணத்தையும் விளக்குகிறது. அடுத்தவர்களிடமிருந்து வெளிப்படும் வியர்வை நாற்றம் நமக்கு ஒரு பெரிய அமைதியான நிலையை ஏற்படுத்துகிறதாம். ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு சில தன்னார்வலர்களை அழைத்து அவர்களின் அக்குளிலிருந்து வியர்வைத் துளிகளை எடுத்ததாம். அவர்களில் சிலர் திகிலூட்டும் படங்களைப் பார்த்தவர்கள். மற்றவர்கள் காமடி படத்தைப் பார்த்தவர்கள். ஆனால் அந்த வியர்வை மாதிரிகளை கவலைப்படுவோரிடமும் மன அழுத்தம் உடையவர்களிடமும் காண்பித்து அதை முகரச் சொன்னார்கள் ஆய்வுக் குழுவினர். இந்த சிகிச்சை முறை அவர்களுக்கு நல்ல பலன் அளித்திருக்கிறது. 39% மன அழுத்தம் அவர்களுக்குக் குறைந்து விட்டது. கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் (Karolinska Insititue) ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது.
தாய்க்கும் சேய்க்கும் உள்ள வாசனை உறவு நமக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் இப்போது தான் யாருடைய வியர்வை வாசனையும் கூட நமக்கு ஒரு ஆறுதலைத் தரும் என்பது தெரிகிறது.
இதன் அடிப்படை காரணம் இன்னொரு சக மனிதரின் சுகந்த வாசனை இப்படி ஒரு ஆறுதலை அளிக்கிறது என்கிறது ஆய்வுக் குழு!
ஸ்ட்ரோக் பாதிப்பு போக எலக்ட்ரோட்!
ஸ்ட்ரோக்கினால் – பக்க வாதத்தினால் முடங்கிக் கிடந்த ஒரு பெண்மணி தனது பழைய இயக்கத்தைப் பெற்று விட்ட அதிசயத்தை நவீன சிகிச்சை முறை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. அவருக்கு அவரது கழுத்தில் எலக்ட்ரோடுகள் பதிக்கப்பட்டன. அவரது மூளைக்கும் முதுகுத்தண்டுக்கும் உள்ள தொடர்பை இந்த எலக்ட் ரோடுகள் அகற்றவே அவர் தனது பழைய இயக்கங்களைப் பெற்று கை கால்களை அசைக்க ஆரம்பித்து விட்டார். நேச்சர் மெடிஸின் என்ற பத்திரிகையில் ஒரு அமெரிக்க குழு இதை விவரித்து எழுதியுள்ளது. மோட்டார் நியூரான்களுடன் தொடர்பு கொள்ளும் சென்ஸரி நியூரான்களை ஊக்குவிக்க எலக்ட்ரோடுகள் பயன்பட்டன என்று தெரிவிக்கிறது இந்தக் குழு. ஹீதர் ரெண்டுலிக் (Heather Rendulic) என்ற ஆய்வாளர், “இரண்டு கை உலகில், பாவம் அந்த 22 வயது இளம் பெண் ஒற்றைக் கையுடன் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள். இப்போதோ பழையபடி கையில் ஸ்பூனையும் ஃபோர்க்கையும் எடுத்துக் கொண்டு நன்கு சாப்பிடுகிறாள்” என்கிறார்.
2023ஆம் ஆண்டின் கண்டுபிடிப்புகள்
இவையெல்லாம் 2023இன் அதிசய சிகிச்சை முறைகள்.
இன்னும் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட அதிசய சிகிச்சை முறைகள் 2023இல் பல உள்ளன. அவைகளையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது – நவீன உலகத்தில்!
***
நன்றி, ஆதாரம் : The Week May 26, 2023