
Post No. 12,593
Date uploaded in London – – – 16 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Tags– இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 29

59.தெஹிவளை விஷ்ணு ஆலயம், கொழும்பு
கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள முக்கிய இந்து சமயக் கோவில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மஹாவிஷ்ணு மூர்த்தி கோவில் ஆகும். இந்தக் கோவிலின் பின்னணியில் சுவையான வரலாறு ஒன்று உள்ளது.
டச்சுக்கார (HOLLAND)ஆட்சியின்போது கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வைணவ பக்தருக்கு கனவு ஒன்று வந்தது அவர் அப்பணியில் சூப்பர்வைசர் ஆக இருந்தவர். விஷ்ணுவைக் கும்பிடும் இடத்தைத் தேடும்படி அவர்க்கு கனவில் கட்டளை பிறந்தது. அவரும் அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் ஏதேனும் வைணவ சின்னங்கள் இருக்குமோ என்று தேடிப்பார்த்தார் . மொத்தத்தில் ஏமாற்றமே மிஞ்சியது; மீண்டும் கனவு வந்தது . அதே உத்தரவு. சரி, இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் விக்ரமாதித்த மன்னன் போல முயற்சியைத் தொடர்ந்தார். நல்லவேளை இந்த முறை வேதாளம் முருங்கை மரத்தில் ஏறவில்லை. ஒரு அற்புதக் காட்சியைக் கண்டார். ஒரு பசு மாடு அவர்க்கு முன்னர் நடந்து சென்று வழிகாட்டியது திடீரென்று அது ஒரு பாம்புப் புற்றின் மீது நின்று பாலைச் சொரிந்தது . அதிசயித்துப்போன அவர் அந்த இடத்தில் தேடியபோது ஒரு விஷ்ணு கோவிலின் இடிபாடுகளைக் கண்டார்..
அந்த இடத்தில் விஷ்ணுவுக்குப் பிரியமான துளசிச் செடிகளும் செழித்து வளர்ந்தன ; அவர் கோவில் கட்ட முயன்றபோது பலரும் கைகொடுத்து உதவினார்கள் அங்கு எழுந்ததுதான் தெஹிவளை நெடுமால் விஷ்ணு ஆலயம். அங்கே விஷ்ணுவை வழிபடத்துவங்கினர். பிள்ளை வரம் வேண்டிப் பலரும் வலம் வந்தனர்

அந்தக் காலத்தில் ஆறுமுகம் என்பவருக்கு ஒரு மகன் பிறந்தான். நீண்டகாலம் இறைவனை வேண்டிப் பெற்ற மகனை இறைவன் பணியில் ஈடுபடுத்த ஆசை கொண்டார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல ஒரு குருவும் வந்து சேர்ந்தார். ஆறுமுகம் மகனுக்கு அவர் தீரன் என்று நாமகரணம் செய்தார்.. அவனும் காலப்போக்கில் கடவுள் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவுடன் தீரன் சுவாமி என்று அழைக்கப்பட்டார். தென் இந்தியாவுக்குச் சென்று பல இடங்களில் யாத்திரை செய்யும்போது ஒரு வேல் கிடைத்தது. அதை தெஹிவலைக்குக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். வேலை வணங்குவதே நமக்கு வேலை என்று மகா கவி பாரதியார் பாடியது போல வேலை வணங்கினார்.
அந்த வேலை இன்றும் காணலாம். அதை ரத்தத்தில் ஏற்றி கொழும்பு நகர் வரை பவனியும் வந் தார். .
இதற்குப்பின்னர் 1971ம் ஆண்டில் புத்துணர்ச்சி பிறந்தது நிறைய சந்நிதிகள் எழுந்தன. 1975ம் ஆண்டில் கண்ணன் பிறந்த கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது மோ கன் என்ற வணிகர் ஒருவர் கோவில் நிர்வாகிகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அறிமுகப் படுத்தினார். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பதி- திருமலை தேவஸ்தானமும் விக்ரகங்களை அனுப்பி உதவினர் 1983 ஐனவரி முதல் தேதியில் வேங்கடேச பெருமாள் -பத்மாவதி தாயார் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ தேவி , பூ தேவி சகிதம் நின்று காட்சி தருகிறார் .
தென்னந்தோப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தை ஈழத்துத் திருப்பதி என்று பக்தர்கள் போற்றினார்கள். ருக்மிணி சத்யபாமா உடனுறை கிருஷ்ணர் , விஷ்ணு பாதம், பள்ளி கொண்ட பெருமாள், , சனைச்சரன் , நாக தம்பிரான் , பிள்ளையார், வேல் சந்நிதிகள் பக்தர் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது .
மேல் விவரம் வேண்டுவோர் 1979ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் பெறலாம் .

Xxxx
60. இலங்கையில் அழிந்துபோன விஷ்ணு கோவில்கள்
சோழர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் (1017-1070) இந்துக்களுக்காக பல சிவன் கோவில்களையும், விஷ்ணு கோவில்களையும் கட்டினார்கள். அவர்கள் பொலன்னறுவையில், புலஸ்திபுரம் என்ற இடத்திலிருந்து ஆட்சி புரிந்தனர். அந்த ஊருக்கு ஜனநாத மங்கலம் என்ற புதுப்பெயரையும் சூட்டினார்கள். அங்கே தோண்டி எடுக்கப்பட்ட விஷ்ணு சிலை தொல்பொருட் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது .
1901ம் ஆண்டிலிருந்து தொல்பொருட் துறை கமிஷனர் வெளியிட்டு வரும் ஆண்டு அறிக்கைகளில் பல அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. ஆறு விஷ்ணு ஆலயங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்திருக்கின்றன.
வடக்கு நுழைவாயிலில் இருந்த கோவில்
ஜனநாதபுரத்தின் வடக்கு வாசலில் இடிந்த சிவன் கோவில், விநாயகர் கோவில்கள் உள்ளன . 1886-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு சிலை இடிந்த கோவிலில் பீடத்தில் நிற்கிறது. அர்த்த மண்டபம், மஹா மண்டபம் முதியன கருங்கற்களால் கட்டப்பட்டிருந்ததும் தெரிகிறது 1907ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணுவின் சிலை மூன்றேகால் அடி உயரம் உடையது.
அதற்கு முன்னர் 1887ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்சசியில் விநாயகர், சுப்பிரமணியர், ஈஸ்வரன் முதலிய மூர்த்திகள் கிடைத்தன.
1902- ஆம் ஆண்டில் நத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சிவ தேவாலய எண் -4 க்கு எதிரே கண்டுபிடிக்கப்பட்ட 3 அடி 9 அங்குல உயர விஷ்ணு சிலை பற்றிய தகவல் கிடைக்கிறது. அங்கும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் இருந்தன.
மிகப்பெரிய விஷ்ணு ஆலயத்தின் தகவல்கள் 1913-ம் ஆண்டு அறிக்கையில் கிடைக்கின்றன. இந்த ஆய்வு 1908ம் ஆண்டில் நடந்தது இதுதான் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம்.. மண்டபங்களின் அஸ்திவாரத்தை அளவு எடுத்தபொழுது இது தெரிய வந்தது.
சிவ தேவாலய- 6 என்று Report ரிப்போர்ட் கூறும் இடத்தில் விஷ்ணுவுக்கும் கோவில் இருந்தது. இங்கு கிடத்த விஷ்ணு ஸ்ரீ தேவி , பூதேவி ஆகியோருடன் நிற்கிறார். ஏனைய இடங்களில் கிடைத்த விக்ரகங்களில் அவர் மட்டும் சங்கு சக்கரத்துடன் நிற்கிறார் .

Picture from Dehivala Vishnu Temple
இலங்கையில் சிவன் கோவில்கள் பற்றி நிறைய புஸ்தகங்கள் பேசுகின்றன. ஆனால் பெருமாள் கோவில்கள் பற்றி அதிக விவரம் கிடைப்பதில்லை.
தொடரும்……………………………
Tags- தெஹிவளை, நெடுமால் , விஷ்ணு ஆலயம், கொழும்பு, இலங்கை, 108 , Part 29 , வேங்கடேசப் பெருமாள்