
Post No. 12,681
Date uploaded in London – – 7 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 9
ச.நாகராஜன்
.jpg)
மாற்றப்பட்ட நான்கு வார்த்தைகள்!
ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர்.
அவர் தனது கீதாஞ்சலி மூலம் உலகப் புகழ் பெற்றார்.
வங்க மொழியில் இருந்த கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய விரும்பினார். அப்படிச் செய்தால் அது உலக மக்களை அடையும் என்பது அவரது எண்ணம்.
இந்த மொழியாக்கத்தை வேறு யாரிடமும் செய்யச் சொல்லாமல் தானே அவர் செய்தார்.
தனது மொழியாக்கம் சரியானது தானா என்ற சின்னச் சந்தேகம் அவர் உள்ளத்தில் எழுந்தது.
ஆகவே அவர் தனது நண்பரான சி.எப். ஆண்ட்ரூஸை (C.F.Andrews) அணுகி தான் செய்த மொழியாக்கம் சரிதானா என்று சரபார்க்கச் சொன்னார்.
சி.எப். ஆண்ட்ரூஸை சிறந்த கல்வியாளர். ஆங்கில மொழி இலக்கணத்தை நன்கு அறிந்தவர். அவர் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுவதுமாகப் படித்துப் பார்த்தார்.
பின்னர் தாகூரிடம், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது, நான்கு இடங்களில் மட்டும் மாற்ற வேண்டும்” என்று சொல்லி நான்கு இடங்களைச் சுட்டிக் காட்டினார்.
உடனே தாகூரும் அந்த நான்கு இடங்களில் உள்ள வார்த்தைகளை மாற்றினார்.
இப்போது கீதாஞ்சலியின் ஆங்கில வடிவம் தயார்!
பிறகு அவர் லண்டனுக்கு முதன்முறையாகச் சென்றார்.
அங்கு கூடியிருந்த கவிஞர்கள் சம்மேளனத்தில் தனது கீதாஞ்சலியை வாசித்தார்.
அந்தக் கவிஞர்கள் கூட்டத்தை பிரபல ஆங்கிலக் கவிஞரான ஈட்ஸ் (Yeats) தான் ஏற்பாடு செய்திருந்தார்.
அனைவரும் கீதாஞ்சலியைக் கேட்டனர்.
பின்னர் தாகூர், “ஏதாவது மாற்ற வேண்டுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா? ஆங்கிலம் எனது தாய்மொழி இல்லை” என்றார்.
உடனே ஈட்ஸ், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் நான்கு இடங்களில் மட்டும் வார்த்தைகளை மாற்ற வேண்டும்” என்றார்.
பின்னர் அந்த நான்கு இடங்களை அவர் சுட்டிக் காட்டினார்.
என்ன ஆச்சரியம்! எது தப்பு என்று சி.எப். ஆண்ட்ரூஸ் மாற்றச் சொன்னாரோ அதே நான்கு மாற்றப்பட்ட வார்த்தைகளைத் தான் ஈட்ஸ் சுட்டிக் காட்டினார்.
தாகூர் உடனே தனது முந்தைய வார்த்தைகளை அங்கு போட, அதுவே சரி என்று அனைவரும் கூறினர்.
எப்படி இப்படி குறிப்பாக அந்த நான்கு வார்த்தைகளை மட்டும் ஈட்ஸ் கூறினார்?!
ஈட்ஸ் ஒரு கவிஞர். கவிஞர் உள்ளத்தை ஒரு கவிஞரே நன்கு அறிய முடியும். சி.எப். ஆண்ட்ரூஸ் கவிஞர் இல்லை. கல்வியாளர், இலக்கணவாதி. அவருக்குக் கவிதை ஓட்டம் புரியாது.
ஈட்ஸ் கூறினார் : ”அந்த நான்கு இடங்களில் மட்டும் கவிதை ஓட்டம் தடைப்படுகிறது. அங்கு ஃப்ளோ – FLOW – இல்லை என்றார்.
ஆக கவிஞன் ஒருவனே இன்னொரு கவிஞனின் உள்ளத்தை நன்கு அறிய முடியும் என்பது நிதர்சனமானது.
கீதாஞ்சலி தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega நூல்.
.jpg)
என்னை விடுவி! என்னை விடுவி!!
சூபி யோகியான ஷேக் ஃபரீதை (Sheikh Farid) ஒரு சூதாடி அணுகினான்.
அவன் அவரிடம்,“சூதாட்டத்தை என்னால் விட முடியவில்லை. எப்படி அதிலிருந்து விடுபடுவது. அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! ஒரு வழி சொல்லுங்களேன்” என்று வேண்டினான்.
உடனே ஷேக் ஃபரீத் அருகிலிருந்த ஒரு கம்பத்தைக் கெட்டியாக தன் கைகளினால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டார். பின்னர் கத்தினார் : “ஓ! என்னை விடுவி! என்னை விடுவி!” என்று அலறினார்.
இதைப் பார்த்த சூதாடி திடுக்கிட்டு ஆச்சரியப்பட்டான். அவன் அவரிடம், “ஐயா! கம்பம் உங்களைப் பிடிக்கவில்லை. நீங்கள் தான் சுற்றி வளைத்துக் கைகளினால் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் அரை நொடியில் கம்பத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்” என்றான்.
கம்பத்திலிருந்து தன் கைகளை எடுத்தவாறே ஷேக் ஃபரீது கூறினார் அவனை நோக்கி, “அப்பனே! இதே போலத் தான், சூதாட்டம் உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. நீதான் அதை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீ நினைத்தால் அரை நொடியில் அதை விட்டு விடலாம்” .
சூதாடி என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டான்.
**