கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!-part 2 (Post No.12,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,765

Date uploaded in London –  –  26 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

22-11-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

26-11-23 அன்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும். கட்டுரை இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!

இரண்டாம் பகுதி

ச.நாகராஜன்

திருவண்ணாமலை தீபம்

பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமாக விளங்கும் திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலேயே முக்திப் பேற்றைப் பெறுவர் என்பது அறநூல்கள் தரும் அற்புத உண்மை. இந்தத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே!

ஒருமுறை தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி பிரம்மா, திருமால் ஆகியோருக்கு இடையே எழ, சிவபிரான் அவர்களிடம் தனது அடியையோ முடியையோ யார் காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறினார். அவர் பெரும் ஜோதிப்பிழம்பாகத் தோன்ற பிரம்மா, திருமால் இருவராலும் அடி, முடியைக் காண இயலவில்லை. இருவரின் அகங்காரம் அழிந்து பட அந்தக் கணத்தில் ஜோதிப் பிழம்பிலிருந்து சிவபிரான் சிவலிங்கத் திருவுருவில் வெளி வந்தார். ஜோதிப் பிழம்பே அருணாசலம் ஆனது.

இந்த மலையைப் பற்றி பகவான் ரமண மஹரிஷி கூறுகையில், ‘கைலாயத்தில் சிவன் உறைகிறார். ஆனால் இந்த மலையே சிவபிரான் தான்” என்று கூறியருளினார். ஆக இங்கு கிரிவலம் பெரும் சிறப்பைப் பெறுகிறது.

இங்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இறைவனின் கர்ப்பக்ருஹத்தில் கற்பூரம் ஏற்றப்பட அதிலிருந்து ஒரு மடக்கில் (அகல்) நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்படுகிறது. நந்திதேவர் முன்னிலையில் ஏற்றப்படும் ஐந்து நெய்விளக்குகள் பஞ்ச மூர்த்தங்களைக் குறிக்கும். அம்மன் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து நெய்த்திரி மடக்குகள் பஞ்ச சக்தியைக் குறிக்கும். மாலையில் அனைத்து தீபங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைத்தும் இறைவனில் ஐக்கியம் என்ற உண்மையைப் புலப்படுத்தும். அன்று மட்டும் ஆண்டு முழுவதும் வெளிவராத அர்த்தநாரீஸ்வரர் திருவீதி உலா வருவார்.

சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான். 

ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.

பல மைல் தூரம் தெரியும் இதைப் பார்த்தாலேயே அனைத்துப் பாவங்களும் போகும். நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.

ஐந்து அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொப்பரையில் பசுக்களின் நெய் தாரை தாரையாக ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட லட்சக்கணக்கான மக்கள் அதை தரிசித்து வழிபடுவது இன்றளவு நடக்கும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

வள்ளலார் விளக்கும் தீப மகிமை

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்தை வழங்கிய வள்ளலார் பெருமான், இல்லத்தில் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தைப் பலவாறாக விளக்கியுள்ளார். அவற்றில் ஒரு சிறு பகுதி இது (அவரது சொற்களிலேயே தரப்படுகிறது) :-

“இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால் அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும் ஆகையால் நாம் வாழுகிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.”

“தீபத்தில், ஒளி, சோபை, பிரகாசம் என்ற மூன்றில் பிரகாசம் காரண அக்கினி. சோபை காரணகாரிய அக்கினி. ஒளி காரிய அக்கினி.”

 ஆயுளை தீர்க்கமாக்கும் தீபமேற்றுதல் குறித்த முழு விளக்கத்தையும் அவரது உபதேசக் குறிப்புகளில் காணலாம்.

நட்சத்திரமாலை விளக்குகள்

பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள ஆலயங்களில் தினமும் ஏற்றப்படும் தீப வகைகள் ஏராளம். விளக்குகளில் மட்டும் சுமார் ஐநூறு வகைகள் உண்டு. இவை அனைத்துமே நலம் தருபவையே. ஒளிச் சுடர் விளக்குகள் ஆங்காங்கே உள்ள மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய ஏற்றப்படுகின்றன.

ஆலயங்களுக்குச் செல்வோர் இறைவனைத் தொழும் போது ஏற்படும் நலன்களை இந்த விளக்குகள் தூண்டி விடுகின்றன. இந்த வகையில் எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு தலத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

பாண்டி வளநாட்டில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளதும் பழம்பெரும் நூல்களால் போற்றிப் புகழப்படுவதுமாகிய ஒரு சிவத் தலம் திருப்பெருந்துறை ஆகும்.

இந்தத் திருக்கோயிலில் இடப்படும் தீப வகைகள் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகின்றன.

அவையாவன:

நட்சத்திரமாலை : இதிலுள்ள தீபங்கள் இருபத்தேழு. சக்கரத்தில் இருபத்துநான்கு. மேலே மூன்று. இது இங்குள்ள ஆறு சபைகளுள் ஒன்றான ஆனந்தசபையின் மூலஸ்தானத்திற்குப் பின்னால் உள்ளது.

கலா தீபம் : இதிலுள்ள தீபங்கள் ஐந்து. இது சித் சபையில் உள்ளது.

வர்ண தீபம் : வர்ணம் என்றால் எழுத்து என்று பொருள். இதில் உள்ள தீபங்கள் ஐம்பத்தொன்று. இது சத்சபையில் உள்ளது.

தத்துவ தீபம் : இதிலுள்ள தீபங்கள் முப்பத்தாறு. இது தேவ சபையிலுள்ளது. முப்பத்தாறு தத்துவங்களை  இவை குறிக்கின்றன.

புவன தீபம் : இதிலுள்ள தீபங்கள் 224. இது தேவ சபையில் தத்துவ தீபத்திற்கு முன்னேயுள்ளது. இதனை தீப மாலை என்றும் கூறுவர்.

புவனம் 224ஐக் குறிப்பது புவனதீபம்.

பத தீபம் : இதிலுள்ள தீபங்கள் எண்பத்தொன்று. இது இங்குள்ள குதிரைச் சேவகர்க்குப் பின் உள்ளது. பதங்கள் எண்பத்தொன்றைக் குறிப்பது பத தீபம்.

மஹாபாரதத்தில் தீபதானம் பற்றிய விளக்கம்

தானங்களில் தீப தான மகிமையைப் பற்றி பீஷ்மர் தர்மபுத்திரருக்கு விளக்கும் போது சுக்ராசாரியாருக்கும் பலிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.

“தனக்கு மேன்மையை விரும்புபவன் கோவிலிலும் சபாமண்டபத்திலும் நாற்சந்தியிலும் மலையிலும், உயர்ந்த மரத்திலும் தீபங்களை நித்தியமாக வைக்க வேண்டும். தீபம் வைக்கும் மனிதன் மனித குலத்திற்கே பிரகாசமாகவும் பரிசுத்த ஆத்மாவாகவும் பெயர் பெற்றவனாக இருந்து தேஜோலோகத்தை அடைவான். தீபத்தை தானமாகக் கொடுப்பவன் சொர்க்கலோகத்தில் தீபமாலைகளின் நடுவில் விளங்குவான்.” இன்னும் அதிக விவரங்களை மகாபாரதம், அநுசாஸன பர்வம் 155வது அத்தியாயத்தில் படிக்கலாம்.

 கார்த்திகை தீப வெண்பா

காஞ்சிபுரம் புராணிகர் சோணாசல பாரதியார் (1859-1925) இயற்றிய திருவண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா தீப மகிமைகளை விளக்கும் ஒரு அற்புதமான நூல். இதில் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் சிறந்த வரலாறுகளுடனும் உண்மை சம்பவங்களுடனும் குறிப்பிடப்படுகின்றன. காப்புப் பாடலுடன் நூறு வெண்பாக்கள் அடங்கிய இந்த நூலைப் படிக்கும் அனைவரும் உடனே தீபம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டு அனைத்து நலன்களையும் பெறுவர் என்பதில் ஐயமில்லை.

இதை இணையதளத்தில் www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் மங்கையர் அவசியம் படிக்க வேண்டிய ஒரு அரிய தமிழ்ச் செல்வம் இது.

இதில் இறுதியாக வரும் இரு பாடல்கள் இதோ:

சிந்தா மணிகாம தேனு பதுமநிதி
யுந்தாழ்ந் தவருக்கருள்செ யுந்தீப-நந்தா
வியப்புள்ள சோணமலை மேற்றிய நல்ல
பயப்புள்ள கார்த்திகைத்தீ பம்.
புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்
சித்தீதருந் தீபஞ்சிவதீபஞ்-சத்திக்
குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்
பயிராகுங் கார்த்திகைத்தீ பம்.தீபம் ஏற்றுவோம். பதினாறு பேறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோம்.தீப மங்கள ஜோதி நமோ நம!

குறிப்பு : மாலைமலர் நாளிதழில் 7-12-2019 இதழில் வெளியாகியுள்ள

‘திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!’ கட்டுரையை இங்கு நினைவு கூரலாம். இதை இணையதளத்தில், கட்டுரை தலைப்புகட்டுரையாளர் பெயரைப் பதிவிட்டு எப்போதும் படிக்கலாம்தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

***

Leave a comment

Leave a comment