
Post No. 12,771
Date uploaded in London – – – 27 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 16
PART 16
கோவில் எண் 14 – செங்கன்னூர் /செங்கண்ணூர் /திருச் செங்குன்றூர் கோவில் தொடர்ச்சி – part 2
முந்தைய கட்டுரையில் செங்கன்னூர் மஹாதேவர்/ பகவதி கோவில் பற்றிய 3 கதைகளைக் கேட்டோம்
அகஸ்தியர் சோனாத்ரி (Red Hills) மலைக்கு வந்த கதை, கர்னல் மன்றோ கதை கோவலனின் மனைவி கண்ணகி திருச்செங்குன்றூர் வந்த கதைகளை சொன்னேன்.
இதோ மேலும் 6 சுவையான கதைகள் .
கதை 4
செங்கன்னூர் கிராமத்தின் தாசில்தாராக எம் சி நாராயண பிள்ளை இருந்தார் . டிசம்பர்- ஜனவரியில் 28 நாள் நடக்கும் வருடாந்திர உற்சவத்தை மிக விமரிசையாக நடத்த திட்டமிட்டார்.. 25 நாட்களுக்கு உற்சவம் தடையின்றி நிகழ்ந்தது. 26-ஆவது நாளன்று தேவியின் மாதவிடாய் துவங்கிய அறிகுறிகள் தென்படவே நாராயண பிள்ளையிடம் அர்ச்சகர்கள் சொன்னார்கள் ; பிள்ளைக்குப் பேரதிர்ச்சி ; ஆயினும் இவ்வளவு விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் விழாவினை நிறுத்தராதீர்கள் என்று சொன்னார். அர்ச்சகர்களையும் மெளனம் காக்கும்படி கட்டளையிட்டார். அனறிரவு அவருடைய மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதோடு கவலைப்படும் அளவுக்கு நிலைமை மாறியது. அவர் தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தக்க பரிகாரங்களை செய்தார். பின்னர் மனைவி குணம் அடைந்தார்
கதை 5
தட்சன் (தக்கன்) என்பவன் பார்வதியின் தந்தை; மாமனார்- மருமகன் மோதலால் சிவனை அவமானப்படுத்த ஒரு பெரிய யாகத்தை ஏற்பாடு செய்தான். பார்வதிக்கு விஷயம் எட்டியது; அவள் தட்சனின் மக்கள் ஆதலால் சம்ஸ்க்ருத இலக்கணப்படி அவளை தாட்சாயினி என்றும் அழைப்பர் (மிதிலைப் பெண்ணை மைதிலி என்போம்; காந்தார நாட்டிலிருந்து வந்தவளை காந்தாரி என்போம்; ஜனகரின் மகளை ஜானகி என்போம் ; தசரதன் மகனை தாசரதி என்போம்; இது ஸம்ஸ்க்ருதப் பெயரிடும் முறை .)
தட்சாயியினி ‘என் அப்பனை ஒரு கேள்வி கேட்டு மடக்கிவிட்டு வருகிறேன்’ என்று புறப்பட்டாள்; சிவன் சொன்னார் :
போகாதே போகாதே என் டார்லிங் /DARLING
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் (வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் போல).
அவளுக்கோ அப்பாவை ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவேசம்;.
கணவன் சொல்லியும் மீறிப்போனாள் .
டேய் உங்கப்பன் மவனே! என்னடா நினைத்ததாய் என் கணவனைப் பற்றி; ;திரிபுரங்களையும் ஒரு சிரிப்பு சிரித்து எரித்தவன் என் கணவன்; காம வேட்கையைத் தூண்ட வந்த மன்மதனை எரித்தவன் என் கணவன் என்று டயலாக் பேசினாள் ; அகந்தையின் மறு உருவான தக்கனோ அடிப் போடீ! பைத்தியக்காரி ; நான் அறியாத தவனா ? சின்னஞ் சிறியவனா (தாமரை நெஞ்சம் திரைப்படப்பாடல் ) என்று பாடினான் .
அப்பா, உன் யாகத்துக்கு முடிவு காட்டுகிறேன் என்று யாகத்தீயில் விழுந்தாள் ; உடல் கருகியது ! உலகமே இருண்டது ! பூவுலகம் சக்தியை இழந்தது; காரணத்தை அறிந்த சிவன் உடுக்கை ஒலியை எழுப்பி புறப்பட்டார்; தக்கனைத் துவம்சம் செய்தார்; கருகிய மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு பாரத நாடே அதிரும்படி ஆடினார். சிவனின் ஆட்டத்தை அடக்கும்படி எல்லோரும் விஷ்ணுவிடம் மன்றாடினார்கள் ; சிவனின் ஆட்டத்துக்குக் காரணம் தாட்சாயியினியின் உடல் என்பதை அறிந்து சுதர்சன சக்கரத்தை ஏவி துண்டு துண்டாக வெட்டினார் ;அப்போது தேவியின் உடற்பகுதிகள் விழுந்த இடம் எல்லாம் புனிதம் அடைந்தன . அவை விழுந்த 51 இடங்களையும் ரிஷி முனிவர்கள் கண்டறிந்து சக்திக் கேந்திரங்களை உண்டாக்கினர் ; மன்னர்களை அழைத்து கட்டிடம் கட்ட கட்டளையிட்டனர் அப்போது தேவியின் இடுப்பின் கீழ்ப் பகுதிகள் அஸ்ஸாமில் கெளஹாத்தியிலும் கேரளத்தில் செங்கனூரிலும் விழுந்தன. ஆகையால் இந்த இரண்டு கோவில்களில் இறைவிக்கு மாதவிலக்கு உண்டு .
அஸ்ஸாம் கோவிலை ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் பல ஒற்றுமைகள் விளங்கும். ஒரு வேளை பெண்களின் மாதவிலக்கு எவ்வளவு புனித மானது; மதிக்கப்பட வேண்டியது என்பதை ஆண்களுக்கு உணர்த்தவே அஸ்ஸாமிலும் கேரளத்திலும் இத்தகைய கோவில்கள் உருவாயின என்றும் சொல்லலாம். மாதவிலக்கு பற்றிய சங்க இலக்கிய பாடல்தான் இந்த வகையில் முதல் பாடல் (எனது குறுந்தொகை ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் உளது.)
கதை 6
1724ம் ஆண்டில் நடந்த சம்பவம் .
கோவிலுக்கு அஷ்ட பந்த கலசம் நிறுவ கோவில் நிர்வாகம் முடிவு செய்ததது. கோவிலின் கீழத்தெருவில் வசித்த பிரபல ஜோதிடர் கிருஷ்ணபி ள்ளையிடம் நல்ல நேரம், நல்ல நாள் குறித்துத் தருமாறு வேண்டினர். அவரும் மீனம் மாதம் எட்டாம் நாள் நண்பகல் என்று நாள் குறித்தார். அதை உறுதிசெய்யும் வகையில் அன்று பகலில் கோவில் கோபுரம் மீது மயில் வந்தது அமரும் என்றும் சொன்னார். மணி 12 ஆயிற்று மயிலைக் காணோம்; பிள்ளையையும் நூறுக்கணக்கான மக்கள் வானத்தை பார்த்தபடி நின்றனர். விழா ஏற்பாட்டினைச் செய்தவர்களும் திகைத்து நின்றனர் . ஆனால் போட்டி ஜோதிடர் மூத்தது அங்கே இருந்தார். அவருக்கும் கிருஷ்ன பிள்ளைக்கும் ஆகாது. அந்த நேரத்தில் ஒரு ஆண்டிப் பண்டாரம் மயில் தோ கையுடன் வந்து நின்றான். இது போதுமே; தொடங்குங்கள் நிகழ்சசியினை என்றார் . சடங்குகள் முடியும் தருவாயில் கிருஷ்ண பிள்ளையும் வந்து சேர்ந்தார் அடக் கடவுளே; கெட்ட நேரத்தில் விழாவைத் துவங்கி விட்டீர்களே! இது கோவிலுக்கே ஆபத்தே என்றார் . சில மாதங்களில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு கீழைக் கோபுரம், கூத்தம்பலம் முதலியன எரிந்து சாம்பல் ஆயின. பின்னர் சீர்திருத்த வேலைகள் ஆமை வேகத்தில் நடந்தன. திவான் வேலையில் இருந்த கர்னல் மன்றோ இந்தக் கோவிலையும், ஏனைய கோவில்களையும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார்.

கதை 7
தமிழ் நாட்டில் அந்தக்காலத்தில் சொல்லுவார்கள் : சாமிக்கு முன்னால் நின்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன் என்று. இதே போல கேரளத்தில் பகவதி கோவில் சத்தியமும் பிரசித்தம் . கோவிலின் மேற்கு கோபுரத்தின் வல து புறம் மேலை நடாவில் . ஒரு துவாரம் உள்ளது. யாரேனும் தான் சொல்லுவது சத்தியம் என்று காட்ட அந்த துவாரத்தில் கைவிரலை விட்டு சத்தியம் செய்வார். பொய் சொன்னால் அந்தப் பொந்திலுள்ள பாம்பு அவரைக் கடித்து சாக வைத்துவிடும் என்ற நமபிக்கையே இதற்கு காரணம். செங்கன்னூர் மேல நடா என்றால் எல்லோருக்கும் பயம்தான் !
தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு வைத்தியர் தானும் பாம்புக்கடிக்கு மருந்து வைத்திருப்பதாக பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஏற்கனவே பாம்புக் கடிகளைத் தீர்த்து வந்த குலத்தில் ஒரு விதவையும் ஒரு 12 வயதுச் சிறுவனும் மட்டுமே எஞ்சி இருந்தனர். ஒரு நாள் அந்தப் பையன் கோவிலுக்கு பிராத்தனை செய்யச் சென்ற போது , கோவிலில் யாராவது நோயாளி வரமாட்டானா என்று தமிழ் வைத்தியரும் காத்திருந்தார். ஒருவர் அந்தப் பையனை அழைத்துச் சென்று இந்தப் பையன் குடும்பமும் பரம்பரை, பரம்பரையாக விஷக்கடி வைத்தியம் செய்துவருகின்றனர் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார் . அவர் உடனே பையனுக்கு சவால் விடுத்தார் அந்தப் பையன் அம்மாவிடம் சென்று அம்மா புதுசா ஊருக்கு வந்த ஆள் நமக்கு எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொல்றான் அம்மா என்று வருத்தத்தோடு சொன்னான். அன்றிரவு அந்தப்பையன் கனவில் ஒரு குழாயும் அதற்குள் நாகப்பாம்பும் இருப்பதாக வந்தது. நாக தேவன் இதை அந்த வைத்தியரிடம் எடுத்துச் சென்று உன் சக்தியைக்காட்டு என்று உத்தரவு வந்தது .
நாக தேவன் கனவில் சொன்னபடி குழாய் இருந்தது. மறுநாள் அந்தப் பையன் வைத்தியரிடம் சென்று இதோ பார்! பாம்பு என்று குழாயைக் காட்ட அந்த பாம்பு வெளியே குதித்து அவனைச் சுற்றி வந்து மிரட்டியது. தமிழ் வைத்தியன் பயந்து போய் மன்னிப்புக் கேட்டவுடன் பாம்புக்கு சின்னப்பையன் கட்டளையிடவே அவன் சொ ன்னபடி பாம்பும் குழாய்க்குள் சென்றது. அந்தக் குழாயை அவன் மேல நடாவில் புதைத்து வைத்தான். அதுதான் இன்றுவரை சத்தியப் பிரமாண துவாரமாக இருக்கிறது தமிழ் வைத்தியன் தான் கொண்டு வந்த பாம்புக்கடி மருந்துகளைக் குழி தோண்டி புதைத்துவிட்டு நடையைக் கட்டினான். இப்போதும் மக்கள் அந்தக் குழியின் மீது நின்று பிராத்திக்கிறார்கள் அப்படிச் செய்தால் பாம்புக் கடி பயம் வராது.
To be continued……………………………….
–subham—
Tags– செங்கன்னூர், கதைகள், விஷக்கடி வைத்தியம். பாம்பு, தட்சன் கதை, கெளஹாத்தி போலவே ; உடலின் கீழ்ப்பகுதி, 51 சக்திக் கேந்திரங்கள்