.jpg)
Post No. 12,782
Date uploaded in London – – – 30 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 19
கோவில் எண் 16 – ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில்
கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் ஹரிபாடு இருக்கிறது. கொ ல்லத்திலிருந்து 54 கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணம் செய்தால் ஹரிபாட் சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்
கேரளத்திலுள்ள மிகப்பழமையான முருகன் கோவில்
சுமார் எட்டு அடி உயரமுள்ள நான்கு கைகளுள்ள சுப்பிரமணியசுவாமி சிலை.
மாநிலத்தின் மிகப்பழைய முருகன் கோவில் ; பரசுராமர் வழிபட்டது
ஆண்டு முழுதும் நிறைய திருவிழாக்கள்;
பழனி போலவே காவடி ஆட்டம் உண்டு ;
விராலி மலை போல கோவிலில் மயில்களையும் காணலாம் ;
கோவிலின் தோற்றம்
பரசுராமர் இங்குள்ள முருகனை வழிபட்டார். பின்னர் சிலை மாயமாக மறைந்தது; பக்தர் ஒருவர் கனவில் சிலை இருக்கும் இடம் தெரியவே பக்தர்கள் பயிப்பாடு நதியில் தேடி சிலையைக் கொண்டு வந்தனர். அந்த நாளை ஆண்டுதோறும் வல்லம் களி என்று கொண்டாடி வருகின்றனர்
1921ம் ஆண்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு கோவிலின் பெரும்பகுதி சேதம் அடைந்தது. கேரளத்தின் கோவில்கள் மரங்களினால் கட்டப்படுவதால் தீ விபத்துகள் நேரிடுவது எளிதாகி விடுகிறது . தீ விபத்துக்குப் பின்னர் கோவில் விரிவாகக் கட்டப்பட்டது. இப்போது 4 கோபுரங்கள், பெரிய கூத்தம்பலம் , தங்கத் தகடு போர்த்திய கொடிமரம் ஆகியன உள்ளன
முருகனின் தோற்றம்
சுப்பிரமணிய சுவாமி நான்கு கைகளுடன் நிற்கிறார். ஒரு கையில் வேல்; இன்னும் ஒரு கையில் வஜ்ராயுதம் ; மீதி இரண்டு கைகளில் ஒன்று அபய முத்திரையுடனும் இன்னும் ஒன்று பாதத்தை நோக்கியும் இருக்கிறது
திருவிழாக்கள்
அதிகமான உற்சவங்களை உடைய கோவில் இது.
ஆவணி உற்சவம் சிங்கம் மாதத்தில் (ஆகஸ்ட் -செப்டம்பர் ) நடக்கிறது ;மார்கழி உற்சவம் தனுர் மாதத்திலும் (டிசமபர்), சித்திரை உற்சவம் மேடம் /மேஷம்(ஏப்ரல்) மாதத்திலும், கார்த்திகை உற்சவம் நவம்பர் மாதத்திலும் தைப்பூசம் ஜனவரி மாதத்திலும் நடக்கின்றன .காவடி ஆட்டம் இந்த உற்சவங்களின் சிறப்பு அம்சம் . சிலையை மீட்டதை நினைவு கூறும் வகையில் பயிப்பாடு வல்லம் களி அல்லது ஜலோத்சவம் என்னும் மூன்றுநாள் திருவிழா திருவோணத்துக்குப் பிறகு பையாப்பட்டு ஆற்றில் நடத்தப்படுகிறது.
மகர மாத புஷ்ய நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அந்த நாளையும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்
சந்நிதிகள்
கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் உள்ள கிருஷ்ணன், சாஸ்தா/ ஐயப்பன் , தட்சிணா மூர்த்தி விக்கிரகங்கள் இந்தக் கோவிலிலும் உள்ளன .
xxxxx
மதுரை மீனாட்சி மூக்குத்தியைக் காணோம் !
கோவில் எண்கள்- 17 & 18
குமாரநல்லூர் பகவதி கோவில், உதயணபுரம் கோவில்
முருகனும் பகவதியும் இடம் மாறிய கோவில்கள்

மூன்று கோவில்கள் தொடர்புடைய ஒரு சுவையான கதை !
குமார நல்லூர் , கோட்டயம் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ; குமரன் என்றால் முருகன். ஆனால் முருகன் அல்லாமல் பகவதியை பிரதிஷ்டை செய்த கோவில் இது. பின்னர் ஏன் குமரன் அல்லாத ஊர் என்று சொல்லி முருகனைக் கேலி செய்கிறார்கள் என்ற வினா எழும். அங்குதான் சுவையான கதை கிடைக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் மீனாட்சி அம்மனின் மூக்குத்தியைக் காணவில்லை.; பூமாலைகளைக் கழற்றும்போது அது எங்கோ தொலைந்துவிட்டது. மறுநாள் , இந்தச் செய்தி பாண்டிய மன்னனின் காதுகளை எட்டியது. இதுபோன்ற விஷயங்களில் முதல் பலி அர் ச்சகர்தான் . நாளை காலைக்குள், பட்டர் அம்மனின் மூக்குத்தியைக் கொண்டுவராவிடில் அவருக்கு சிரச்சேத தண்டனை (தலையைக் கொய்தல்) என்று பாண்டிய மன்னன் அறிவித்தான் .
ஒன்றும் அறியாத அப்பாவி பட்டர் தவியாய்த் தவித்தார் .
மறு நாள் காலையில் மரண தண் டனை என்று கேட்டபின்னர் உறக்கமா வரும்? அன்னை மீனாட்சியை மனம் உருகப் பிரார்த்தித்தார் ; அவர் முன்னால் ஒரு ஒளி தோன்றியது ; அதைப் பின்பற்றிச் சென்றார்; அது அவரை கேரளம் வரை அழைத்து வந்து குமார நல்லூரில் விட்டது; அவர் உயிர் பிழைத்தார்; இன்றும் மதுரை நம்பூதிரி வழிவந்தோர் அதே பெயரில் அழைக்கப்படுகின்றனர் .
இதே நேரத்தில் சேர மன்னன் குலசேகரப் பெருமாள் கனவில் ஒரு அதிர் ர்ச்சி தரும் செய்தி காதில் விழுந்தது. அவர் பகவதி சிலையை வைக்கம் என்னும் தலத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள உதயண புரத்தில் வைக்க திட்டமிட்டிருந்தார் ; அதே போல குமார நல்லூரில் சுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தார் கனவில் மன்னனுக்கு வந்த செய்தியோ குமாரநல்லூரில் முருகனை வைக்காதே என்று சொன்னது உடனே அதை உதயண புரத்துக்கு அனுப்பிவிட்டு அங்கு நிறுவ இருந்த பகவதியைக் குமார நல்லூருக்குக் கொண்டுவந்தார் ; அலகிலா விளையாட்டுடையான் அல்லவா அம்பலத்தில் ஆடுகிறான்! ஆண்டவனின் லீலா விபூதிகளுக்கு விளக்கமே கிடையாது
குமரன் பெயரில் இருந்த ஊர் – குமரன் அல்ல ஊர் என்று மாறியது. உத யநாயகிபு ரம் , உதயண பு ரம் என்று மாற்றப்பட்டது. ஆயினும் இரண்டு கோவில்களிலும் இதை நினைவு படுத்தும் வகையில், அங்கு இல்லாத சாமிகளுக்கு சில வழிபாடுகளும் நடைபெறுவதால் இந்தக் கதைகள் உண் மையானவை தான் என்றும் புலனாகின்றது.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், மலையாள தேசத்திலுள்ள முருகன் கோவில்களைப் பற்றி விலளக்கமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் மலையாளிகள் முருகனை பையன் என்றே அழைப்பர் என்கிறார். பையன் பெயரில் பல ஊர்களும் உள்ளன. குமாரன் என்பதன் தமிழ் பொழிபெயர்ப்பு பையன். தமிழ் நாட்டிலோ விநாயகருக்கு பிள்ளை என்று பெயர் சூட்டியுள்ளோம் !! இருவரும் சிவனின் பிள்ளைகள்தானே !
To be continued……………………………..
–subham–
Tags- கேரள , புகழ்பெற்ற ,108 கோவில்கள், PART 19,ஹரிபாட், சுப்ரமண்ய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் ,மூக்குத்தி