
Post No. 12,983
Date uploaded in London – — 4 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாபாரத ரகசியம்
மயிலுக்கும் அரசனுக்கும் சிலேடை!
ச.நாகராஜன்
ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும்?
மயிலைப் போல இருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் அரசர்கள் இல்லையே? நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், அரசை ஆளுகின்ற பெரிய பொறுப்பில் இருக்கின்றவர்கள் மயிலைப் போல இருக்க வேண்டும்.
இதை மஹாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் தர்மபுத்திரருக்குச் சொல்கிறார்.
சாந்திபர்வம் 120வது அத்தியாயத்தில் இதன் முழு விவரத்தையும் பார்க்கலாம்.
இங்கே அதன் சுருக்கம் தரப்படுகிறது.

1) மயிலானது பல வர்ணங்களுடைய தோகைகளை எவ்விதம் தரிக்கிறதோ அதே போலவே தர்மம் அறிந்த அரசன் பலவிதமான ரூபத்தை (உருவத்தை) கொள்ள வேண்டும்.கடுமை, கபடம் (வரி வாங்குதல்) இவற்றோடு சத்தியம் நேர்மை, தைரியம் ஆகியவற்றை அடைந்து நடுநிலைமையுடன் இருக்க வேண்டும்.அதாவது சிக்ஷையில் குரூரனாகவும் ரக்ஷையில் சாந்தனாகவும் இருக்க வேண்டும்.
எந்த விஷயத்தில் எவ்வித உருவம் இருக்க வேண்டுமோ அந்த விஷயத்தில் அந்த உருவத்தைக் காட்ட வேண்டும்.
இப்படி பல உருவமுடைய அரசனுக்கு சூக்ஷ்மமான விஷயமும் நாசமடையாது.
2) மயிலானது சரத் காலத்தில் சப்தமிடாமல் இருப்பது போல அரசன் எப்போதும் மந்த்ராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும்.
3) மயிலானது இனிமையான குரலும் உடம்பின் அழகும் தன் செய்கையில் சாமர்த்தியமும் பொருந்தி இருப்பது போல அரசன் அழகான சொற்களைக் கொண்டு, சம்பத்துள்ளவனாகவும் சாஸ்திரங்களில் சமர்த்தனாகவும் இருக்க வேண்டும்.
4) நீரருவிகளில் மயிலானது நாட்டமுடையதாக இருப்பது போல அரசன் வரவு செலவுகளில் கவனமுள்ளவனாக இருக்க வேண்டும்.
5) மயிலானது மலையிலுள்ள மழை ஜலங்களை அடுப்பது போல அரசன் சித்தி பெற்ற அந்தணர்களை அடுக்க வேண்டும்.
6) மயில் எப்போதும் தன் தலையிலுள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போல பொருளில் விருப்பமுள்ள அரசன் இயற்கையில் தர்மிஷ்டன் என்று பிறர் நினைக்கும்படியாக தர்மத்துக்குக் கொடி கட்டுவது போல அடையாளங்களைக் காண்பிக்க வேண்டும்.
7) மயிலானது தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றை அடிக்க எப்போதும் ஜாக்ரதையாக இருப்பது போல அரசன் எப்போதும் தண்டத்தை மேற்கொண்டவனும் ஆசாரத்தில் அஜாக்ரதையாக இல்லாதவனுமாக இருக்க வேண்டும்.
8) மயிலானது தான் இருக்கும் மரத்திலிருந்து அதிக செழுமையுள்ள மரத்துக்குச் செல்வது போல அரசன் உலகிலுள்ள வரவு செலவு கணக்கைக் கண்டு வரவு அதிகமும் செலவு குறைவாகவும் உள்ள காரியங்களைச் செய்ய வேண்டும்.
மதுரஸத்தைப் பெருகவிடும் பனைமரத்தின் ஒரு பக்கத்தில் மதுவை எடுப்பது போல ஜனங்களுக்கு இம்சையில்லாமல் உலகத்திலுள்ள வரவு செலவுகளுக்குத் தக்கபடி வரியை வாங்க வேண்டும்.
9) தன் கூட்டத்தார்களில் தானே உத்தரவு செய்கின்றவனும், எதிரியினுடைய பூமியில் உள்ள தானியங்களை குதிரை முதலியவற்றின் நடைகளால் அழிக்கின்றவனாகவும் இருக்க வேண்டும். தனது பக்கத்தில் செழுமை அடைந்த பிறகு சஞ்சரிக்க வேண்டும். தன் குறையைக் கவனிக்க வேண்டும்.
10) மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலியவற்றின் குறைகளைக் காட்டுவது போல தன் நேர்மையினாலேயே எதிரிகளின் குற்றங்கள் வெளியாகும் படி இருத்தல் வேண்டும்.
11) மயில் உயர்ந்த செழிப்புள்ள மலைகளை அடுத்திருப்பது போல அரசன் உயர்ந்தவர்களும் விருத்தி அடைந்தவர்களும், மலை போன்றவர்களுமான அரசர்களை அடுக்க வேண்டும்.
12) மயில் வேனிற்காலத்தில் மரத்தில் மறைந்து ஒன்றுவது போல ரகசிய்மாக ரக்ஷகனை அடைய வேண்டும்.
13) மயில் ராத்திரியில் வெளிப்படாது. மயில் வருஷ காலத்தில் களிப்பது போல இரவில் ஜனமில்லாத இடத்தில் களிக்க வேண்டும்.
14) மயிலினுடைய குணம் போலவே பெண்களால் ரக்ஷிக்கப்பட்டவனாக சஞ்சரிக்க வேண்டும். கவசத்தை விடக்கூடாது. தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
15) மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் போடப்பட்ட வலைகளை விலக்கிக் கொள்வது போல அரசன் ஒற்றர்களால் காண்பிக்கப்பட்ட இடங்களில் கபடமாக (தன்னைக் கொல்வதற்காக) வைக்கப்பட்ட விஷம் உள்ளிட்டவற்றை விலக்க வேண்டும்.
16) மயிலானது விஷமும் கோபமும் கோணலான நடையுமுள்ள பாம்புகளைக் கொல்வது போல அதிக விஷமுள்ளவர்களும் கோபமுள்ளவர்களும் கோணலான நடையுள்ளவர்களுமான எதிரிகளைக் கொல்ல வேண்டும்.
17) மயில், புழு முதலியவற்றை வெறுக்காதது போல இகழ்ச்சியாய் இருப்பவர்களிடத்தில் பொறாமை படக்கூடாது.
18) மயில் உறுதியான பக்ஷங்களை (தோகைகளை) அடைந்திருப்பது போல அரசனானவன் உறுதியான மந்திரி முதலிய தன் பக்ஷங்களை நிலைக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
19) மயிலானது எப்போதும் தன் பக்ஷங்களை (தோகைகளை) விரிவாக்கிக் கொள்வது போல தன் பக்ஷத்தார்களை (தன்னை ஆதரிப்பவர்களை) அரசன் பரவச் செய்து கொள்ள வேண்டும்.

அரசன் இப்படி மயில் போலத் தன் ராஜ்யத்தை பரிபாலிக்க வேண்டும்.
இதை அப்படியே அரசன் என்பதற்கு பதிலாக Prime Minister/ Chief Minister
அல்லது மிகப் பெரும் நிறுவனத்தின் CEO – Chief Executive Officer அல்லது General Manager என்றோ கூட வைத்துக் கொண்டு பொருத்திப் பார்க்கலாம்!
தலைவனும் மயிலுக்குமான சிலேடை மஹாபாரதத்தின் பொக்கிஷ உரைகளில் ஒன்று!
**