பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1 (Post.12,995)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,995

Date uploaded in London – — 9 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1

ச.நாகராஜன்

 நூறு டாலர் நோட்டு

அமெரிக்க நூறு டாலர் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா? அவர் தான் அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின். அவரை கௌரவிக்கும் விதமாகவே அமெரிக்கா தனது நூறு டாலர் நோட்டில் அவர் படத்தைச் சித்தரித்துப் பெருமைப்படுகிறது; அவரைப் பெருமைப்படுத்துகிறது!

பன்முகப் பரிமாணம் கொண்ட அவரது வாழ்க்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. அவரது சுயசரிதை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

பிறப்பும் இளமையும்

மிக சாதாரணமான எளிய குடும்பத்தில் 1706ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி  அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

அவரது தந்தை ஜோசையா பிராங்க்ளின் சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பவர். அவருக்கு இரு மனைவிகள் மூலம் 17 குழந்தைகள் உண்டு. பத்தாவதாகப் பிறந்தவர் பிராங்க்ளின்.

ஏழ்மையான குடும்பம். ஆகவே அவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. ஒராண்டு மட்டுமே அவரால் பள்ளிக்குப் போக முடிந்தது.

ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்து கவனிக்கும் அவர் ஏழாவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி நான்கு மொழிகளைக் கற்றார். பதினேழாம் வயதில் பிலடெல்பியாவிற்குச் சென்றார்.

இளம் வயதில் செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்த அவர் தானாகவே ஒரு செய்தித்தாளை ஆரம்பித்து சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். ஒரு பிரிண்டிங் பிரஸை நிறுவிய அவர் அதில் ஏராளமான சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாக இன்று என்ன செய்யலாம் என்று யோசிப்பது அவரது வழக்கமாக ஆனது.

இதனால் தான் அவர் 23 வயதிலேயே ஒரு அச்சக முதலாளியாகவும், பத்திரிகை வெளியீட்டாளராகவும் எழுத்தாளராகவும் ஆக முடிந்தது. பின்னால் அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு ராஜ தந்திரி ஆனார். விஞ்ஞானி ஆனார். பிலடெல்பியா போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக 1737 முதல் 1753 வரை பதவி வகித்தார்.

அரசியல் வாழ்வு

சமுதாய அக்கறை கொண்டு அதை மேம்படுத்தும் எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுபட ஆரம்பித்தார். பிரான்ஸுக்கான முதல் யு.எஸ். தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார். 1785 முதல் 1788 முடிய அவர் பென்சில்வேனியா தலைவராக ஆனார்.இங்கிலாந்துடன் நல்ல உறவை மேற்கொண்ட அவரது புகழ் பரவியது. முதலில் தனது பத்திரிகையில் ‘அடிமைகள் விற்பனைக்கு’ என்று விளம்பரத்தை பிரசுரித்து வந்த அவர், பின்னர் அது தவறு என்று உணர்ந்து மனம் மாறி அடிமைத்தனத்தை ஒழிக்க வெகுவாகப் பாடுபடலானார். அப்போது அமெரிக்க புரட்சி தோன்றவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அமெரிக்க காலனிகள் 13ஐயும் ஒன்றிணைக்க முனைந்து உழைத்தார்.

அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களுள் ஒருவர்

அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் (Founding Fathers) ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார்.

அமெரிக்க புரட்சியை நடத்தி 13 காலனிகளை ஒருங்கிணைத்து யுனைடட் ஸ்டேட்ஸின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் இவர்களே.

13 அம்சத் திட்டம்

தனக்குத் தானே அவர் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். வெற்றி பெற வாழ்நாளில் தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய 13 அம்சங்களை ஒரு தாளில் அவர் குறித்து வைத்துக் கொண்டார்.

அது என்ன 13 அம்சம்?

1.நடுநிலைமையுடன் அணுகல் 2. மௌனம் 3. ஒழுங்கு 4. உறுதி எடுத்தல் 5. சிக்கனம் 6. உழைப்பு 7. நேர்மை 8. நியாயம் 9. சுத்தம் 10.மிதமான போக்கு 11.அமைதி 12. தூய்மை 13. எளிமை

இந்த 13 அம்சங்களையும் ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டு எதிரே வார நாட்களைக் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அம்சத்தை மட்டும் மிகுந்த கவனத்துடன் மனமூன்றி அவர் கடைப்பிடிப்பார்.  அதை நாள்தோறும் அவர் சரி பார்ப்பார். அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் ஏராளமான X குறிகளை இடுவார். இப்படி தினமும் இவற்றைச் சரிபார்க்கப் பார்க்க நாளடைவில் அவரது தாளில் X குறிகளே குறைந்தது. இப்படி வருடத்தில் உள்ள 52 வாரங்களில் நான்கு முறை இந்த 13 அம்ச திட்டத்தை அவர் கடைப்பிடித்தார். இதன் பலன் அபாரமாக இருந்தது. அதை அவரது வாழ்க்கையின் வெற்றி காண்பித்தது;

நேர்மை, நியாயம் என்பதில்  தான் செய்த தவறுகளை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். முறை தவறி தனக்கு ஒரு மகன் பிறந்ததை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.  வில்லியம் என்ற அந்த மகனைத் தானே வளர்த்தார்.

இந்த 13 அம்சத் திட்டம் அனைவருக்குமானது. உலகின் ஆகப் பெரும் விற்பனையாளராகத் (Salesman) திகழ்ந்த பிராங்க் பெட்கர், பிராங்கிளினின் திட்டத்தினால் உத்வேகம் பெற்றார். தனது விற்பனைத்துறையில் தனக்கேற்றவாறு 13 குணாதிசயங்களை அவர் குறித்து வைத்துக் கொண்டு முன்னேறலானார்.

அவர் கொண்ட 13 அம்சத் திட்டம் 1. உற்சாகம் 2. ஒழுங்கு 3. மற்றவர் பார்வையில் எதையும் பார்த்தல் 4. கேள்விகளைக் கேட்டல் 5. மற்றவரின் முக்கிய தேவையை உணர்தல் 6. மௌனம் (எதிரில் இருப்பவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டல்) 7.நேர்மை 8.தனது வேலை பற்றிய அறிவு 9. மற்றவரைப் பாராட்டுதல், புகழ்தல் 10. புன்சிரிப்புடன் பழகுதல் 11. பெயர்களையும் முகங்களையும் நினைவிலிருத்தல் 12. வாடிக்கையாளர் சேவை 13. விற்பனையைத் திறம்பட முடித்தல்

தனக்கென ஏற்படுத்திக் கொண்ட இந்த கொள்கை திட்டத்தை அவர் கடைப்பிடித்ததால் உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக ஆனார்.

ஆகவே முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு 13 அம்சத் திட்டத்தை உருவாக்கி அதைத் தினமும் ஊன்றிக் கவனித்துக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். இப்படி வெற்றிக்கு ஒரு புதுமுறை வழிகாட்டியாக ஆனார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

அவர் செஸ் விளையாட்டில் நிபுணர். நீச்சல் வீரர். வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே மேற்கொண்டார்.

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் என்று வள்ளுவரின் கோட்பாட்டை கடைப்பிடித்தவர் அவர்..

** தொடரும்

Leave a comment

Leave a comment