
Post No. 13.033
Date uploaded in London – — 24 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
.webp)
மாலைமலர் 21-2-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ் : எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -2
FIRST PART WAS POSTED YESTERDAY
உலகின் மிகச் சிறந்த உரை
ஸ்டான்போர்டில் 2005 ஜூன் மாதம் 12ஆம் தேதி அவர் ஆற்றிய உரை உலகின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக அனைவராலும் போற்றப்படுகிறது. அதில் அவர் தன் வாழ்க்கையை மூன்று கதைகளில் சுருக்கமாக வர்ணித்திருந்தார்.
முதல் கதை – புள்ளிகளை இணைப்பது. (Connecting the dots) இதில் ஸ்டீவ்ஸ் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தது பற்றியும் வீட்டின் தரையில் படுத்திருந்து, கோவில்களில் சாப்பிட்டு அநேக வித கஷ்டங்களுக்கு உள்ளானதை விவரித்து அதனால் உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றதை விவரிக்கிறார். பத்து ஆண்டு கடினமாக உழைத்து மெகின் டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்ததையும் அவர் உருக்கமாக எடுத்துரைத்தார்
இரண்டாவது கதை – காதலும் இழப்பும் (Love and Loss) பற்றிய கதை.
இதில் இருபதாம் வயதில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கிய அவர் பத்தே ஆண்டுகளில் 200 கோடி டாலர்கள் சம்பாதித்து 4000 பேரை வேலையில் அமர்த்த முடிந்ததை நினைவு கூர்கிறார். “முப்பது வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை ஆனால் என் நிறுவனத்திலிருந்தே நான் வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்ஸர் ஆகிய நிறுவனங்களைத் தோற்றுவித்தேன்”, என்று தெரிவித்த அவர், பிரபலமான அனிமேஷன் திரைப்படமான டாய் ஸ்டோரி உருவான கதையைத் தெரிவித்தார். நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் விலைக்கு வாங்கியதையும் தான் மீண்டும் ஆப்பிளுடன் இணைந்ததையும் அவர் இரண்டாம் கதையில் நினைவு கூர்கிறார்.
.webp)
அடுத்து மூன்றாவது கதை இறப்பு. (Death) இதில் அவருக்குப் பிடித்த வாசகமான, ”ஒவ்வொரு நாளையும் உங்கள் வாழ்வின் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் நீங்கள் நினைப்பது சரியாகி விடும். இன்று தான் எனது வாழ்க்கையின் கடைசி நாள் என்றால் நான் இன்று செய்ய நினைப்பதைச் செய்ய விரும்புவேனா என்று ஒவ்வொரு நாள் காலையும் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பேன்” என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
கணையம் என்றால் என்ன என்றே தெரியாத தனக்குக் கணையத்தில் புற்று நோய் வந்ததை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டு, டாக்டர்கள் இது குணப்படுத்த முடியாத வியாதி. நீங்கள் இன்னும் மூன்று அல்லது அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கூறியதைச் சொல்லி தான் வாழ்நாளின் இறுதியை நோக்கிச் செல்வதை வெளிப்படுத்தினார். அத்துடன் இறுதியில், ”உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. ஆகவே அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறியவற்றை வேதவாக்காக நினைத்து வாழ்க்கையை நிர்ணையிக்காமல் உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள் என்ற முத்திரை வாசகத்துடன் தன் உரையை அவர் முடித்தார்.
சிறப்பான கருத்துக்களை அனுபவத்தின் வாயிலாக உருக்கமாக பேசி அனைவரையும் உருக வைத்த அவரது உரை இன்று வரை அறிஞர்களால், இளைஞர்களுக்கும் கணினி துறையில் நுழைவோருக்கும் மேற்கோளாகச் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

தனது முதல் கணினியின் விலையை 666 டாலர் என அவர் நிர்ணயித்தார். இது கிறிஸ்தவக் கொள்கையின் படி பாவகரமான எண் என்றும் சாத்தானின் எண் என்றும் பலரும் அவதூறைப் பரப்பினர். ஆனால் அவரோ அசரவே இல்லை.
666 டாலரில் ஒரு கணினியின் விலை என்று ஆரம்பித்து 2014இல், 666 பில்லியன் டாலர்களை நிறுவனத்தின் மொத்த மதிப்பாக இருக்கும் அளவு அவர் ஆப்பிள் நிறுவனத்தை உயர்த்தினார்.
ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு ஒரே ஒரு டாலர் தான்! உலகின் எந்த தலைமை அதிகாரியும் இப்படி ஒரு சம்பளத்தைப் பெற்றதாக சரித்திரமே இல்லை! பின்னால் இதைப் பின்பற்றி ஃபேஸ் புக்கின் தலைமை அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்கும் ஆண்டிற்கு ஒரு டாலர் சம்பளம் பெறுவதை வழக்கமாகக் கொண்டார். 55 லட்சம் ஷேர்களைக் கொண்டு 2011இல் ஒவ்வொரு பங்கிற்கும் 377 டாலரை மதிப்பாகக் கொண்ட ஆப்பிள் பங்குகள் அவரிடம் இருந்ததால், “தான் வாங்கிய சம்பளத்தில் பெரிதாக இழப்பு ஒன்றும் இல்லை” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “ஆண்டுக்கு 50 செண்ட்களை என் முகத்தைக் காட்டுவதற்காகவும் இன்னும் ஒரு 50 செண்ட்களை எனது திறனுக்காகவும் நான் பெற்றேன்” என்றார் அவர்!
2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு கணையத்தில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற டாக்டர்களின் யோசனையை ஸ்டீவ்ஸ் முதலில் மறுத்து வந்தார். பின்னால் இதற்காகப் பெரிதும் வருந்தினார்.
2009இல் அவர் கல்லீரல் பதியம் செய்யப்பட்டு நியுமோனியாவிலிருந்து மீண்டு வந்த சமயம். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவரது முகத்தை ஒரு முகமூடியால் மூட டாக்டர் முயன்றார். ஆனால் ஸ்டீவ் அதைப் பிய்த்தெறிந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் “இந்த மாஸ்கின் (mask) டிசைன் சரியில்லை” என்பது தான்! பேச முடியாத அந்த நிலையிலும் கூட சைகை மூலம் ஐந்து வெவ்வேறு மாஸ்குகளைக் கொண்டு வரச் சொல்லி அதில் தனக்குப் பிடித்த டிஸைனைத் தேர்ந்தெடுத்து அதை அணிந்து கொண்டார் அவர்!
டிஸைன் எனப்படும் வடிவமைப்பை அவர் எவ்வளவு முக்கியமாகக் கருதி வந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்!
மறைவும் வாழ்க்கைத் தத்துவமும்

புதிதாகக் கணையம் பதியம் செய்யப்பட்ட போதும் கூட அவரால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. 2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அவர் இல்லத்திலேயே காலமானார். உலகின் அனைத்துத் தரப்பு மக்களும் அவரது மறைவிற்கு இரங்கினர்.
தனது முன்னேற்றம் பற்றி அவர் ஒரு முறை கூறினார் இப்படி:
“சில சமயம் வாழ்க்கை, உங்கள் தலையைச் செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள்! நான் செய்ததை எல்லாம் நான் நேசித்துச் செய்தேன் என்ற ஒன்று தான் என்னை முன்னேற வைத்தது என்பது மட்டும் நிச்சயம்!”
ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த வார்த்தைகளே அவர் வாழ்க்கையில் வெற்றி பெற மேற்கொண்ட வாழ்க்கைத் தத்துவம் என்று கொள்ளலாம்.
ஆப்பிள் கணினி, ஐ பாட், ஐ போன் மற்றும் அதன் நவீன மாற்றங்களுடனான சாதனங்கள் உலகில் இருக்கும் வரை ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரும் நிலைத்திருக்கும் அல்லவா!
எதையும் நேசித்து செய்து வெற்றி பெற்ற இந்த மனிதரை உலகம் நேசிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?!
***