
Post No. 13.046
Date uploaded in London – — 28 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுப, அசுப கர்மங்கள், அவற்றின் பலன்கள்!
ச.நாகராஜன்
உமா தேவியார் பரம ரகசியம் ஒன்றை சிவபிரானிடம் கேட்க விரும்புகிறார். அதுவும் பூமியில் பிறக்கும் அனைத்து மக்களுக்காகவும் கேட்க விரும்புகிறார்.
இதை மஹாபாரதம் அநுசாஸன பர்வத்தில் 231வது அத்தியாயத்தில் விவரமாகப் பார்க்கலாம்.
அது என்ன ரகசியம்?
சுபம் மற்றும் அசுப கர்மம் எப்படிப்பட்டது?
அசுபம் பிராணிகளைக் கீழே தள்ளுவதும் சுப கர்மங்கள் மேலுலகத்தைக் கொடுப்பதும் எப்படி?
இது தான் கேள்வி.
பரமேஸ்வரன் பதில் கூறுகிறார்.
கர்மங்கள் புண்ணியம், பாவம் என இரு வகைப்படும்.
பாவ கர்மம் என்பது மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகியவற்றால் உண்டாகி மூன்று வகையாகிறது.
மனத்தினால் உண்டாகும் கர்மம் தெரியாமலும் தெரிந்தும் உண்டாகிறது.
அதன் பிறகு சொல் என்னும் கர்மம் உண்டாகிறது.
அதன் பிறகு அவற்றைச் செய்வதற்குறிய உடல் செயல் உண்டாகிறது.
துன்பம் செய்யக் கருதுவது, பொறாமை, பிறர் பொருளின் மீது ஆசை, நல்ல மனிதர்களுக்கும் கெட்ட மனிதர்களுக்கும் ஜீவனத்தைக் கெடுப்பது, தர்மச் செயல்களில் சிரத்தை இல்லாமை, பாவ காரியங்கள் செய்வதில் உற்சாகம், ஆகிய இவை அசுப கர்மங்களாகும்.
பொய், கடுஞ்சொல், யாருக்கும் அடங்காமல் உத்தண்டமாய்ப் பேசுவது, மனம் நோகப் பேசுவது, நிந்திப்பது, உண்மை பேசாமை ஆகிய இவை வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.
சேரத்தகாதவரிடம் சேருவது, பிறர் மனை புகுவது, அடிப்பதனாலும், கட்டுவதனாலும், கஷ்டப்படுத்துவதனாலும் பிற உயிர்களைத் துன்பப்படுத்துவது, திருடுதல், பிறர் பொருளை அபகரித்தல், அதனை அழித்தல், சாப்பிடத் தகாதவற்றைச் சாப்பிடுவது, (வேட்டை முதலிய)
விஷயங்களில் பற்றுதல் கொள்ளுதல், கர்வத்தினாலும் அலட்சியத்தினாலும் பிடிவாதத்தினாலும் பிறரை நோகச் செய்வது, அசுத்தமாய் இருப்பது, குடித்தல், கெட்ட ஒழுக்கம், தீயவர்களின் சேர்க்கை, பிறர் செய்யும் பாவங்களுக்கு உதவியாக இருப்பது, புண்ணியத்துக்கும் புகழுக்கும் ஆகாத செயல்களில் புகுவது ஆகிய இவை அனைத்தும் சரீர பாவங்கள் எனப்படுகின்றன.
மானஸ பாவத்தைக் காட்டிலும் வாக்கு பாவம் அதிகமென்றும், வாக்கு பாவத்தைக் காட்டிலும் சரீர பாவம் அதிகம் என்றும் நினைக்கப்படுகின்றன.
இம்மூன்று வகைப் பாவங்களும் மனிதனைக் கீழே தள்ளி விடும்.
பிறருக்குத் தீங்கு செய்வது அதிக பாவம்.
இப்படி மூவகைப் பாவங்களையும் செய்பவனை செய்பவனை மிகக் கொடிய நரகத்தில் சேர்ப்பிக்கும்.
பாவம் கர்ம வசத்தால் அறியாமலோ அவசியம் செய்ய நினைத்து ஒரு காரணத்தைச் சொல்லியோ எவ்விதம் செய்யப்பட்டாலும் செய்தவனை அடையவே செய்யும்.
பாவத்தை அவசியம் வெளியிடுவதனால் அதற்குக் காரணமான செய்கை பயனற்றுப் போகும் என்று பரமேஸ்வரன் சொல்ல உமா தேவியார், “பாவ காரியத்தை எவ்வகையில் செய்தால் குற்றம் ஏற்படாது?” என்று கேட்கிறார்.
மஹேஸ்வரர் இதற்கு பதில் அளிக்கிறார் இப்படி: “ குற்றம் செய்யாத ஒரு மனிதன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக முதலில் தன்னை அடித்தவனும், அடிக்க ஆயுதத்தை ஓங்கினவனுமான பகைவனைத் திருப்பி அடித்துக் கொன்றால் அவனைப் பாவம் பற்றாது. ஒரு மனிதன், திருடனிடத்தில் அதிகமாகப் பயந்து அவனைத் தடுப்பதற்காக அவனை அடித்துக் கொல்லுவானாயின் அவனுக்குப் பாவம் இல்லை.
கிராமத்திற்காகவும், யஜமானனுடைய அன்னத்தைச் சாப்பிட்டதற்காகவும், துயரப்படுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவும்
அடிப்பதையும், கட்டுவதையும், கஷ்டப்படுத்துவதையும் செய்கிறவன் பாவத்திலிருந்து விடுபடுவான்.
பஞ்சத்தில் இருந்து கொண்டு தான் உயிர் வாழ்வதற்காக யாருக்கும் தெரியாமல் தனிமையில் இருந்து கொண்டு அக்காரியத்தைச் செய்தாலும், உண்ணக்கூடாதவற்றை உண்டாலும் அவனைப் பாவம் அணுகாது.
இவையெல்லாம் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் கிரஹஸ்தர்களுக்கே உபதேசிக்கப்படுகிறது.
இடத்தையும் காலத்தையும் அனுசரித்து புத்தியினால் ஆராய்ந்து அந்தப் பயனுக்குத் தக்கபடி பேசத் தகாததைப் பேசினாலும் செய்யத் தகாததைச் செய்தாலும் அவனைப் பாவம் சிறிது பற்றும், பற்றாமலும் போகும்,”
அடுத்து குடியினால் ஏற்படும் தீமைகளை விவரிக்கும் சிவபிரான் குடிப்பவர்கள் நரகத்திற்கே போவர் என்கிறார்.
ஆக இப்படி புண்ணிய பாவ கர்மங்கள் விளக்கப்படுகின்றன!
**